வில்லேர் உழவர் பகைகொளினும்

thirukkural meaning விளக்கம் பொருட்பால் பகைத்திறந்தெரிதல் நட்பியல் குறள் 872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
குறள் 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 
சொல்லேர் உழவர் பகை
[பொருட்பால், நட்பியல் , பகைத்திறந்தெரிதல்]

பொருள் 
வில் - அம்பெய்தற்குரியகருவி; வில்லின்நாண்; காண்க:விற்கிடை; வானவில்; மூலநாள்; ஒளி.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

உழவர் - உழவன் - உழுபவன்; மருதநிலத்தவன்; உழவுமாடு; வீரன்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறை ஏவலொருமை வினையொடு சேர்க்கப்படும் ஓர்அசை.

இனும் - இன்னும்

கொள்ளற்க - கொள்ளாதீர் 

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

உழவர் உழவன் - உழுபவன்; மருதநிலத்தவன்; உழவுமாடு; வீரன்.

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை

முழுப்பொருள்
உழவருக்கு முதன்மையான கருவி ஏர் .அதை போன்று வில்லை பயன்படுத்துபவர்கள் அதாவது வீரர்கள்/அரசர் போன்றவர்களிடத்து பகை கொண்டாலும் கொள்ளலாம் ,அனால் சொல்லை உழவர்களின் ஏர் போன்று பயன்படுத்துபவர்கள் அதாவது அறிஞர்கள்/ அமைச்சர்கள்/ புலவர்கள் போன்றவர்களிடத்து பகை கொள்ளல் கூடாது என உரைக்கிறார் வள்ளுவர் .

இக்குறளில் அரசர்/வீரர்களையும் ,புலவர்/அறிஞர்களையும் உழவரொடு ஒப்பிட்டு உழவருக்கும் வள்ளுவர்.

இவ்வாறு புலவரையும் வீரரையும் உழவராக வள்ளுவர் உருவகம் செய்ய சிறப்பை உணர்ந்து மகிழ்ந்த பரிமேலழகர் இக்குறளில் உள்ள அணியை "உருவக விசேடம்' என்றார். அதாவது "சிறப்பு உருவகம்' என்றார்.

நன்றி : தினமணி 

ஒப்புமை
”வில்லே ருழுவர் வெம்முனைச் சீறார்” (நற் 3:5)
“வில்லுழு துண்மார்” (புறநா. 170:4)
“வில்லேர் வாழ்க்கை” (புறநா 331:2)
“வில்லேர் உழவின்நின் நல்லிசை” (புறநா 371:13)
“வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்” (அகநா 35:6)
“வானம் வேண்டா வில்லேர் உழவர்” (அகநா 193:2)
“மாரி வளம்பெறா வில்லே ருழவர்” (சிலப்.11:210)
“வில்லேர் உழவர்” (பெருங் 1.52:26)

”வரிசிலை யுழவனும் மறையுழ வனை” (கம்ப.சரபங்கர்.38) 

பரிமேலழகர் உரை
வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. ('சொல்' ஆகுபெயரான் நீதிநூல் மேல் நின்றது. வீரம் சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று, வந்ததாயினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும், இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.).

மணக்குடவர் உரை
வில்லை ஏராக உடைய பகைவரோடு பகைகொளினும் சொல்லை ஏராக உடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக. இஃது அரசரோடு பகைகொளினும் அமைச்சரோடு பகை கொள்ளலாகாதென்றது.

மு.வ உரை
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain