குறள் 738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
[பொருட்பால், அரணியல், நாடு]
பொருள்
பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.
விளைவு - நிகழ்ச்சி; விளைகை; முதுமை; விளைபொருள்; பழம்; பயன்; கைகூடுகை; ஆக்கம்; விளையுமிடம்; வயல்; மேகம்; நாடகச்சந்திஐந்தனுள்ஒன்று.
விளைதல் - தானியம்முதலியனஉற்பத்தியாதல்; பயன்தருதல்; உண்டாதல்; முதிர்தல்; நிகழ்தல்.
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
ஏமம் - இன்பம்; களிப்பு; மயக்கம்; காவல்; இரவு; பொன்; திருநீறு; இடுதிரை; பாதுகாவல்; வலிமை; சேமநிதி.
அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.
என்ப - என்று சொல்லப்படுவன; என்று சொல்லுவர்; ஓர்அசைச்சொல்.
நாட்டிற்கு -நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.
இவ் - இந்த
ஐந்து - ஐந்தும்
முழுப்பொருள்
நோய் இல்லாமை ,நல்ல பொருளாதார வளம் (செல்வம்), விளைச்சல் வளம் மிக்க இருத்தல் , இன்பமான வாழ்வு , பாதுகாப்பான சூழல் என இந்த ஐந்து குணங்களே ஒரு நாட்டிற்கு அழகாகும் எனக் கூறுவர்.
அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை உதாரணமாக கொண்டால் இவ்வைந்தும் அதற்கு அமைந்து இருப்பது தெளிவாக தெரியும்.
நாட்டில் மக்கள் எந்த மன நிறைவுடன் வாழ நோயற்ற சூழ்நிலை வேண்டும். நல்ல விளைச்சல் மூலம் நல்ல பொருளாதார வளமும் வேண்டும். இவைகள் ஒருங்கே அமைய பெற்றாலும் , நம்மை சுற்றி இருக்கின்ற நாடுகளால் எந்த தொந்தரவும் இல்லாமல் பாதுகாப்பான சூழ்நிலை வேண்டும். இவை அனைத்தையும் நோக்கி ஒரு நாட்டின் செயல் திட்டங்கள் அமைய வேண்டும்.
பரிமேலழகர் உரை
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து - நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப- நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர். (பிணியின்மை, நில நலத்தான் வருவது. செல்வம், மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும் உடைமையானும், நுகர்வன உடைமையானும்,நில நீர்களது நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே, அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும் அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின் அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
நோயின்மையும், செல்வமுடைமையும், விளைவுடைமையும், இன்பமுடைமையும், காவலுடைமையுமென்று சொல்லப்பட்ட இவையைந்தும் நாட்டிற்கு அழகென்று சொல்லுவர்.
மு.வரதராசனார் உரை
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.
No comments:
Post a Comment