குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]
பொருள்
யார் - யாவர்; காண்க:நத்தைச்சூரி.
இனும் - இன்னும், இருப்பினும்
யாரினும் - மற்றவர்கள் எல்லோரையும் விட
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.
அம் - வினையின் விகுதி.
ஆதலால் காதல் + அம் -> அதிக காதல் என்று பொருள்
காதலம் - நாம் அதிக காதல் கொண்டு உள்ளோம்
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
ஏனோ - ஏன்? - எதற்கு, என்ன, என்னகாரணம், என்னை; இரக்கப்பொருளைத்தரும்இடைச்சொல்; தன்மையொருமைவிகுதி; பன்றி
என்றேனா - என்று அவளிடம் சொன்ன உடன்
ஊடினாள் - என்னுடன் ஊடினாள், ஊடல்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு
யாரினும் - யார் உடன் காதல் கொண்டீர் முன்பு ?
யாரினும் - யார் உடன் காதல் கொண்டீர் முன்பு ?
என்று - என்று என்னிடம் ஊடினாள்.
முழுப்பொருள்
மற்றவர்களை விட நம் காதலின் அளவு மிக அதிகம் என்று கணவன் மனைவியிடம் கூறினான். கணவன் மற்றவர்கள் காதல் என்று கூறியது மற்ற எல்லா கணவன் மனைவி மாறும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலின் அளவை. ஆனால் மனைவியோ வேறு விதமாக புரிந்துக் கொண்டாள். அதாவது கணவன் இதற்கு முன்பு பல மகளிரை காதலித்ததாகவும், அவர்களிடம் கொண்ட காதலை விட தன் மேல் அதிகம் காதல் கொண்டதாக கணவன் சொல்கிறான் என்று.
இது அவளுக்கு அதிர்ச்சியான ஒரு புதிய செய்தியாக கேட்க, யார் அவர்கள் ? யார் அவர்கள் ? யார் மீது நீங்கள் முன்னம் காதல் கொண்டீர் ? ஏன் என்னிடம் இத்தனை நாள் சொல்லவில்லை என்று அவன் மேல் கோவம் கொண்டாள். இந்த சச்சரவு ஊடலாக மாறியது. அவர்களுக்குள் பிணக்கு உண்டாயிற்று.
இந்த Post ஆசிரியரின் சொந்த பிரச்சனை :
கணவனுக்கு உண்மையில் அப்படி இல்லாத பொழுதே ஊடல போய் முடியுது. எனக்கு எங்க போய் முடியுமோ ஈஸ்வரா ? :)
இருந்தாலும் திருவள்ளுவர் சொல்லி இருக்கார்
அந்த நம்பிக்கைல தான் நான் இருக்கேன் :) :)
பரிமேலழகர் உரை
இதுவும் அது. யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, 'அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர்' என்று சொல்லிப் புலந்தாள்.
விளக்கம் (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்பை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை,' என்பதாம்.)
மணக்குடவர் உரை
ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
யாரினும் காதலம் என்றேனா - காமவின்பம் நுகர்தற்குரிய இருவராகிய கணவன் மனைவியர் வேறு யாரினும் நாம் மிகுந்த காதலுடையோம் என்னும் பொருளில், யாரினுங் காதலம் என்று சொன்னேனாக, யாரினும் யாரினும் என்று ஊடினாள்- உன் தலைவி அப்பொருள் கொள்ளாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்பால் மிகுந்த காதலுடையேன் என்று நான் கூறியதாகக் கொண்டு, "யாரைவிட" என்று வினவிப் புலந்தாள்.
யான் அன்பு மிகுதியால் நல்ல பொருளிற் கூறியதைத் தீய பொருளில் தவறாக உணர்ந்து கொண்டதல்லது, வேறு கரணகமில்லை யென்பதாம். தலைமகள் கொண்ட பொருட்கு 'யார்' உயர்வுப்பன்மை.
மு.வ உரை
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
சாலமன் பாப்பையா உரை
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
No comments:
Post a Comment