குறள் 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]
பொருள்
நனவினால் - நனவு -> மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; களம், போர்க்களம்; தேற்றம்; அகலம்.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
கண்டதூஉம் - கண்டது ; காண்பது
ஆங்கே - அதைப் போன்றே; அங்கே
கனவு - கனா; உறக்கம்; மயக்கம்.
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
கனவுந்தான் - கனவிலும்; கனா; சொப்பனம்; உறக்கம்; மயக்கம்.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்
பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்.
கண்ட பொழுதே - கண்ட தருணம் (மட்டும்)
இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக
(அதிகாரம்: கனவுநிலையுரைத்தல், v. noun. The relation of dreams)
முழுப்பொருள்
விழிப்புடன் இருக்கும் பொழுது நனவில் காதலரை / காதலியை கண்ட பொழுது கொண்ட இன்பத்தைப் போன்றே அவரை / அவளை கனவில் காணும் பொழுதும் கொண்டேன்.
ஆக அவர் / அவள் நனவில் வந்தாளும் இன்பம் பயக்கிறான் / பயக்கிறாள், கனவில் வந்தாளும் இன்பம் பயக்கிறான் / பயக்கிறாள்.
இங்கு முதலில் நனவு சொல்ல படுகிறது. ஆதலால் முன்பு நனவில் கண்டால் இன்பம் பயக்கியதாவும், ஆனால் இன்றைய நாட்களில் கனவில் கண்டாலும் அதே அளவு இன்பம் பயக்கிறது என்று.
இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். அவரை நனவிலும் கனவிலும் காணும் பொழுது மட்டும் நான் இன்பமாக இருக்கிறேன் மற்ற நேரங்களில் இன்பமாக இல்லை என்று.
உதாரணம்
நான் ஒரு பெண்ணில் காதல் கொண்டிருக்கையில் அவளை சந்திக்கும் பொழுது, அவளுடன் பேசும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் அவளை சந்திக்காத நாட்களில் சில நாள் கனவில் அவள் வந்தாள் அந்த கனவில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். அப்படி சில நாட்கள் கனவில் இருந்து கலைந்து நனவிற்கு வந்து அக்கனவினை மீட்டெடுத்து இன்புற்று இருக்கிறேன். :)
பரிமேலழகர் உரை
இதுவும் அது. நனவினான் கண்டதூஉம் இனிது ஆங்கே- முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று; அப்பொழுதே, கனவும் தான் கண்டபொழுது இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
விளக்கம் ('இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு - ஆகுபெயர். 'முன்னும் யான் பெற்றது இவ்வளவே; இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.)
மணக்குடவர் உரை
நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம். இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வ உரை
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
நன்றி: ஆத்தீகம்
எதுத்தாப்புல அவன் வர்றப்ப, அவனைப் பாக்கறப்ப, அவனோட பளகறப்ப, கிடைக்கற சந்தோசம் அந்த நேரத்துக்கு மட்டுமே இருக்கு. அவன் போனப்பறந்தான் அவன் சொன்னதுல்லாம் மனசுல வந்து கஸ்டத்தைக் குடுக்குதே!
அதேபோல, கனவுல அவன் வர்றதும், பளகறதும் அந்தக் கனவு இருக்கற வரைக்குந்தான் இன்பமா இருக்கு. முளிச்சவொடனே, நெசம் புரியறதால, மறுபடியும் தொல்லைதான்! துக்கந்தான்!
இதைத்தான் சொல்றாரு ஐயன் தெளிவா இதுல. ரெண்டு பேருக்கும் ஒத்துப் போவலைன்னா, அல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான் இன்பமா இருக்கும். அது பூடுச்சுன்னா, அப்பால ரோதனைதான்!
நன்றி: அருட்பெருங்கோ
வருகிற வரை புரிவதில்லை
காதலென்று!
கலைகிற வரை தெரிவதில்லை
அதுவும் கனவென்று!
நன்றி: ரிஷ்வன்
காதலரை
நேரில் கண்ட பொழுது
பேரின்பம் பெற்றதைப் போலவே
காணும் கனவிலும் இன்பத்தை
வாரி வழங்கி மகிழ்விக்கிறார்.
No comments:
Post a Comment