குறள் 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
[பொருட்பால், குடியியல், கயமை]
பொருள்
உடுத்தல் - uṭu- 11 v. tr. [K. M. uḍu.] 1.To put on, as clothes; ஆடைமுதலியன தரித்தல் பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264). 2. To surround,encircle; சூழ்தல் அருங்குறும்புடுத்த கானப்பேரெயில்(புறநா. 21).
உடுப்பதூஉம் - நல்ல உடைகள் அணிவது; செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும்
உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்
உண்பதூஉம் - நன்றாக உண்ணுவது; பாலோடு அடிசில் உண்டலையும்
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காணின் - அடுத்தவர் மேல் பார்த்தால்
பிறர் - அயலார்
பிறர்மேல் - அடுத்தவர் மேல்
வடுக்காண - வடு + காண
வடு - தழும்பு, மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன்; மலைப்பிளப்பு (மலையில்உள்ளவிடர் - Cleft in hills), கது, கமர் (a fissure), சிதைவு,
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காண - கண்டுப் பிடிக்க
வற்றாகும் - வற்று + ஆகும்
வற்று - வாடுதல், மெலிதல், பயனற்றுப்போதல், ஒருசாரியை, உலர்
கீழ் - கீழ்மையான குணம்
முழுப்பொருள்
ஒருவர் நன்றாக உடுத்தி இருந்தாலோ, அல்லது அவர் நன்றாக மகிழ்ச்சியாக சாப்பிட்டாலோ அதை கண்டு அவர் மீது பொறாமை கொள்வார் பிறர் சிலர். ஒருவர் செய்யும் தொழிலாலும் உழைப்பாலும் உயர்ந்து நிற்பர், மேலானவர்கள். ஆனால் பொறாமையால், அவர்கள் அருகில் உள்ள, பிறர் காழ்ப்புணர்ச்சியுடன் அவர்கள் மீது குற்றம் கண்டுப்பிடிக்க முற்பட்டு அடுத்தவரின் உழைப்பை மெலிதாக்குவர். அத்தகையோரின் செயல் அவர் கீழ்மையானவர், கயவர் என்று உணர்த்தும் என்று சொல்கிறார் திருவள்ளுவர்.
இங்கே நான் காண்பது ஒன்று. ஏன் உண்பது, உடுப்பது பற்றி திருவள்ளுவர் சொல்கிறார் ? சிரிப்பது என்று கூட சொல்லலாம் அல்லவா ? எளிமையானவர் கூட இன்புற்று சிரிப்பார். ஆனால் ஒரு நல்ல உடை உடுத்தினாலோ அல்லது நன்றாக உண்டாலோ அவர் செல்வந்தராக இருப்பர்.
பிறர் செல்வத்தின் மீது பொறாமைபடும் கீழ்மையானவர் கயவர் இருந்து விலகி இருப்பதே சிறந்தது. (அவசொற்கள் பற்றி நேராகவோ மறைமுகமாகவோ கேட்க நேரிட்டால், பின்பு அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே சிறந்தது). அது மட்டும் இன்றி அத்தகைய கயவர்கள் (பொதுவாக யார்) கூறும் அவசொற்களை ஆராயாமல் எடுத்துக்கொள்ள கூடாது.
இதனை வயத்து எரிச்சல் என்றும் சொல்வார்கள்
ஆத்திசூடி
கீழ்மை அகற்று.
சித்திரம் பேசேல்.
பிழைபடச் சொல்லேல்.
பழிப்பன பகரேல்.
ஓரம் சொல்லேல்.
பரிமேலழகர் உரை
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காணவற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம்.
(உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில் மேல் நின்றன; அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப்படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர். இஃது அழுக்காறுடையா ரென்றது. மு.வரதராசனார் உரை
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
இலக்கணக் குறிப்பு (நன்றி: தமிழ்ப் பேப்பர்)
இந்தப் பாடலில் ‘உடுப்பதூஉம்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘உடுப்பதும்’ என்றுமட்டும் எழுதியிருந்தாலோ, ‘உண்பதூஉம்’ என்பதற்குப் பதிலாக ‘உண்பதும்’ என்று எழுதியிருந்தாலோ வெண்பா இலக்கணம் கெட்டுப்போகாது. அப்போதும் அது வெண்பாதான்.
ஆனால், வள்ளுவர் அதனை மேலும் இனிமையாக ஒலிக்கச் செய்வதற்காக, அளபெடையைப் பயன்படுத்துகிறார். நீங்களே சொல்லிப் பார்த்தால் தெரியும் ‘உடுப்பதும் உண்பதும்’ என்பதைவிட, ‘உடுப்பதூஉம் உண்பதூஉம்’ என்பது காதுக்கு அதிகக் குளிர்ச்சியாக ஒலிக்கிறது. பாயசத்துக்கு முந்திரிப்பருப்புபோல!
இப்படி இலக்கணத்துக்காக அன்றி, மரபுக் கவிதையின் இசைக் கட்டுப்பாடுகளுக்காக அன்றி, இன்னிசைக்காக அளபெடுப்பதால் இதன் பெயர் ‘இன்னிசை அளபெடை’
No comments:
Post a Comment