குறள் 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
[பொருட்பால், படைமாட்சி, படையில்]
பொருள்
சிறுமையும் - சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
செல் - போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான்.
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
செல்லா - செல்லாத
துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.
செல்லாத் துனியும் - நீங்காத வெறுப்பும் / வருத்தம் ; போகாத் துன்பம் உறுதலும் (போகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக் கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வன)
வறுமையும் - வறுமை - துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை
இல்லாயின் - இல்லையானால்.
வெல்லும் - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல்.
படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
முழுப்பொருள்
படைவீரர்களிடத்தில், ஒழுக்கக் குறைபாடான செயல்கள் இருத்தல் கூடாது. வீரர்கட்கு உணவு உடை முதலியவற்றால் குறைபாடு இருத்தல் கூடாது.
செல்லாத் துனி = நீங்காத வருத்தம். படை வீரர்கள் நன்முறையில் நடத்தப் பெறுதல் வேண்டும்.
மனம் புண்படுமேல் நீங்காத வருத்தம் மேலிட்டு, போர் புரிவதில் ஆர்வம் காட்டாது அயர்வர். நாட்டுக்காக உயிரைக் கொடுக்க முன்வந்துள்ள வீரர்களை நன்முறையில் பாதுகாத்துச் சிறப்பிக்க வேண்டும்.
படைக்கு இழிவு வருவது பெரும்பாலும் செல்லுமிடங்களில், பெண்களைக் கவர்தல், பொதுமக்களைக் கொடுமைப்படுத்தல் முதலியவற்றினால் ஆம்.
கீற்று வலையகத்தில் இருந்து மற்றும் நக்கிரன் வலையகத்தில் இருந்து (சுட்டிகளை சொடுக்கவும்)
இக்குறளில் இடம்பெறும் ‘செல்லாத் துனி’ என்ற சொல்லுக்கு ‘செல்லாத்துனியாவது மகளிரை வெளவல், இளிவர வாயின செய்தல் முதலியவற்றால் வருவது’ என்று பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிப்பொருள் ‘செல்லாத்துனி’ என்பதற்கு ‘போகாத் துன்பம் உறுதலும்’ என்று உரை எழுதி ‘போகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக் கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வன’ என்று விளக்கமளிக்கிறார்.
போரில் கைப்பற்ற வேண்டிய பொருட்களில் ஒன்றாக ‘மகளிர்’ மனுசுமிருதியில் குறிப்பிடப்பட்ட திருக்குறள் அச்செயல் படையிடம் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.
பரிமேலழகர் உரை
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் - தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்: படைவெல்லும் - படை பகையை வெல்லும். (விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வெளவல் , இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும'¢ என்றார்.).
மணக்குடவர் உரை
தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும்.
மு.வரதராசனார் உரை
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
சாலமன் பாப்பையா உரை
எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.
No comments:
Post a Comment