குறள் 969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
[பொருட்பால், குடியியல், மானம்]
பொருள்
மயிர் - உரோமம்; சாமரை; தூவி
நீப்பின் - நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
ஆ - எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை;
வாழாக் - வாழாதா
கவரிமா - கவரிமான் - kavari-māṉ n. id. +. Yak,Bos grunniens; மான்வகை. கவரிமானேறு கண்படை கொள்ளும் (பெருங். உஞ்சைக். 50, 20).
அன்னார் - aṉṉār n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
நீப்பர் - நீத்தல் - பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல்.
மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.
வரின் - வரும்/ வந்தால்
முன்குறிப்பு
கவரிமா அல்லது யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். காட்டு யாக்குகள் மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று. பெரும்பாலானோர் கூறுவது போல் அப்படி ஒரு மான் வகை கிடையாது. (கவரி - சடை போன்ற முடி மா -விலங்கு)
நன்றி : விக்கி/Wiki
முழுப்பொருள்
இமய மலை போன்ற பனி பிரதேசங்களில் வாழ்வதாக கூறப்படும் இந்த "கவரி மா" ஆனது, தன் அடர்ந்த ரோமத்தை இழந்து விட்டால், குளிர் தாங்காமல் இறந்து விடுவது போல, மானம் சிறிது இழந்தாலும் தன் உயிரினை துறந்து விடுவர் உயிரினும் பெரிதாக மானத்தை கருதுவோர்.
மானம் என்பது வாய்மையோடும், அறத்தோடும், ஒழுக்கத்தோடும், நாணத்தோடும் வாழ்வதற்கான ஒரு அடையாளம் எனலாம். ஆகையால் அது உயிருக்கு சமமாக கருதப்படுகிறது. நாம் பல அதிகாரங்களில் பல குறள்களில் கண்ட ஒன்று இவற்றில் எது இழந்தாலும் நமக்கு கேடே. நமக்கு அழிவே.
ஒப்புமை
1. வான் மயிர் துடக்கின் தானுயிர் வாழாப்
பெருந்தகைக் கவரி (பெருங் 1.35:233-4)
2. குழவி யிறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அள்வை
ஈனம ரோஇவ் வுலகத் தானே (புறநா.74)
ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானம் தலைவருவ செய்பவோ (நாலடி 198)
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின் (நாலடி 300)
உள்ளம் குறைபட வாழார் உரவோர் (நான்மணி 2)
மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே (இனியவை 14)
மானம் படவரின் வாழாமை முன்னினிதே (இனியவை 28)
தோல்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை (திரி 27)
3. “மானம் நோக்கின் கவரிமான் அனைய நீரார்” (கம்ப.மந்திரப் 7)
‘வருந்தலின் மானமா அனைய மாட்சியர்” (கம்ப.உருக்காட்டு 19)
பரிமேலழகர் உரை
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.).
மணக்குடவர் உரை
ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.
மு.வரதராசனார் உரை
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
சாலமன் பாப்பையா உரை
மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.
good
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete