காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

thirukkural meaning விளக்கம் குறள் 1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்,
குறள் 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
[காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்]

பொருள்
காமக் காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

கணிச்சி - உளி;கோடாலி;கோடார்;ஆயுதம்; மரத்தைப் பிளக்கும் கருவிவகை; குந்தாலி - குத்தித் தோண்டும் கருவி; கிணறு வெட்டும் கருவி.

உடைக்கும் - உடைத்தல் - தகர்த்தல், அழித்தல், வருத்துதல், தோற்கச்செய்தல், வெளிப்படுத்துதல், குட்டுதல், பிளத்தல், கரைஉடைத்தல், புண்கட்டியுடைதல்; முறுக்கவிழத்தல்.

நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூ உக்குணம் நான்கனுள் காப்பன காத்துக் கடிவன கடியும் திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்.

நாணுத்தாழ்  - நாணம் என்கிற தாழ்;
நாணம் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு; 
தாழ் - அச்சாணி; மதகுகளையடைக்கும் மரப் பலகை; கதவுகளை அடைக்கும் மரப் பலகை; தாழ்ப்பாள்; சீப்பு; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம்; தாழ்க்கோல்.

வீழ்த்த - வீழ்ச்சி; சரிதல்.

வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

கதவு - மறைவு; காவல்; சினம்; katavu   n. prob. கதுவு 1. [K. kadavu,M. katahu.] Door; கவாடம் (பிங்.) 2. Guard;காவல். (திவா.)  

முழுப்பொருள்
கற்பு  என்றென்பது ஒரு சிறப்புமிக்க தன்மை வாய்ந்தது.  கற்பென்றென்பது ஒரு நிறைச்செல்வமாகும். அதனை இழந்தால் எல்லாவற்றையும் நீ இழப்பாய். ஆதலால் நாணம் மற்றும் அறிவினை அழியாமல் / இழக்காமல் நீ கற்பினை காக்க வேண்டும் என்று தோழிக்கு தலைமகள் அறிவுருத்தியது. ஆதலால் ஒரு பெண் அறிவு என்ற கதவுதனை நாணம் என்னும் தாழ்க்கொண்டு தன் கற்பினை பிறரிடம் இருந்து காப்பாள். 

ஆதலால் தானாக இக்கதவும் திறக்காது தாழும் இறங்காது. ஆகவே, ஒருவளுடைய கற்பு என்னும் நிறை என்கிற அழியா குணத்தை உடைக்க வேண்டும் என்றால் நாணம் என்னும் தாழையும் அறிவும் என்னும் கதவையும் வீழ்த்த வேண்டும். அது காமம் என்கிற கருவியால் முடியும்.

இது ஒரே நாளில் ஆகக்கூடிய செயலாக இருக்கவேண்டியது (இருக்ககூடியதும்) அல்ல. ஆகவே மரத்தைப் குந்தாலியால் (கோடாலியால்) குத்திக் குத்தி தோண்டித் தோண்டி பிளப்பதுப் போல், ஒரு கிணறை வெட்டி வெட்டி தோண்டுவதுப் போல், காமம் என்னும் கணிச்சியால் நாணம் என்கிற தாழையும், அறிவு என்னும் கதவையும் ஒன்றாக (ஒருங்கே) வீழ்த்தி உடைக்க வேண்டும். 

அதுமட்டும் இன்றி வீழ்த்த கதவு என்று சொல்வதால் அந்த கதவை மறுபடியும் ஏற்றி வைக்க இயலாது. வீழ்ந்தது வீழ்ந்தது தான்.

ஆதலால்,  தன் நாணம்தனை வீழ்த்த பல நாள் பொறுமையாக முயற்சிகள் மேற்க்கொள்ளபடும் என்று உணர்ந்து ஒரு பெண் தன் கற்புதனை காக்க வேண்டும்.

ஒப்புமை
”முலையும் மார்பும் முயங்கணி மயங்க
விருப்பொன்று பட்டவர் உளம்நிறை உடைத்தென” (பரி 6:20-21)

”காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து” (பரி 10:33)

“கட்டழ கமைந்த கண்ணாள் நிறையெனும் சிறையைக் கைபோய்
இட்டநாண் வேலி யுந்திக் கடலென வெழுந்த வேட்கை
விட்டெரி கொளுவ நின்றாள் எரியுறு மெழுகில் நின்றாள்” (சீவக 710)

“யாவனே யானு மாக அருநிறைக் கதவம் நீக்கிக்
காவ லென் னெஞ்ச மென்னும் கன்னிமா டம்பு குந்து
நோவவென் உள்ளம் யாத்தாய்” (சீவக 714)

“பிறையெனும் நுதலவள் பெண்மை யென்படும்
நறைகமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலும் மனமெனும் மத்த யானையின்
நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே” (கம்ப.மிதிலைக்காட்சி 40)

“பிறந்துடை நலநிறை பிணித்த வெந்திரம்
கறங்குபு திரியுமென் கன்னி மாம தில்
எறிந்தவக் குமரனை” (கம்ப.மிதிலைக்காட்சி 59)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தலைமகள் மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்க மாட்டாது வாய்விடுதல். 'நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை'(கலித். நெய்தல்.16) என்றார் பிறரும். அஃது அழிதற்காரணம் நெஞ்சொடு கிளந்தமையின், இதுநெஞ்சொடு கிளத்தலின் பின் வைக்கப்பட்டது.]. 

(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. (கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

சாலமன் பாப்பையா உரை
நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!

உதாரணம்
எனக்கு விதி (1984) என்கிற திரைப்படம் தான் நினைவிற்கு வருகிறது. இதில் ராஜா(மோகன்) என்கிற ஆண்மகன் ராதா (பூர்ணிமா) என்கிற புத்திசால் தலைமகளை பல நாள் பின் தொடர்ந்து அவள் மனதை மயக்கி நல்லவன் போல் நடித்து அவள் காதலை பெறுவான். பின்பு அவளை கடற்க்கரைக்கு அழைத்து சென்று அவளை கெடுத்துவிடுவான். இதில் குறிப்பிட பட வேண்டியது என்னவென்றால் ராதா ஒரு திடமான மனதுடைய புத்திசாலிப் பெண்ணாக இருந்தவள். ஆனால் அவளை அறியாமல் பல நாள் வசியத்திற்கு மயங்கிவிடுவாள்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain