குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]
பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி.
களவு -> கள்ளத்தனமான; திருட்டுத்தனமான; [தான் நோக்கியவழி நாணி (நாணத்துடன்) இறைஞ்சியும் (வணங்கியும்), நோக்காவழி (பார்க்காத நேரத்தில்) உற்று நோக்கியும்] தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.
கொள்ளும் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.
சிறு - சிறிய - ciṟiya சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று.
நோக்கம் - கண்; பார்வை; கிரகநோக்கு; தோற்றம்; உயர்ச்சி; அழகு; காவல்; கருத்து; அறிவு; கவனம்; விருப்பம்; குறிப்பு.
சிறுநோக்கம் -> சிறிய பார்வை; கடைக்கண் பார்வை. இலைமறைவா காய்மறைவாக பார்க்கும் பார்வை.
காமத்தின் - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை
செம்பாகம் - சரிபாதி; இனிமை; நல்லபக்குவம்.
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்
பெரிது - பெரியது; மிகவும்.
கொள்ளும் -> பார்க்கும் அந்த.
விளக்கம்
கண்ணால் கள்ளத்தனமாக என்னைப் நீ பார்க்கும் அந்தச் சிறிய கடைக்கண் பார்வை.
முழுப்பொருள்
இவள் கண்கள் நான் அவளைப் பார்க்கவில்லை (காணவில்லை) என்று நினைத்துக் கொண்டு, கண்களால் கள்ளத்தனமாக என்னை இவள் பார்க்கும் அந்தச் சிறிய கடைக்கண் பார்வை என்னில் ஈட்டும் இன்பம் காதலினால் (காமத்தினால் - மெய்யுறு புணர்ச்சி) ஏற்படும் இன்பத்தின் சரிபாதியை விடப் பெரியது.
ஒப்புமை
“காசில் காமம் செப்பிக் கண்ணினால் இரப்பார்” (சீவக.2549)
---------------------------------------------------------------------------------------------------------
சாலமன் பாப்பையா உரை
நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காமத்தில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும். ( தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.).
இயற்கைப் புணர்ச்சி
இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கு வகைகளிலும் தலைவனும், தலைவியும் சந்தித்துப் பழகும் களவுப் புணர்ச்சி இரு பெரும் திறங்களாக அமையும் என்பது அகப்பொருள் மரபு ஆகும். அவையாவன :-
1) உள்ளப் புணர்ச்சி
2) மெய்யுறு புணர்ச்சி
இக்கருத்தை,
உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய (34)
என்ற நூற்பா எடுத்துக் காட்டுகிறது.
1) உள்ளப் புணர்ச்சி
தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல் உள்ளப் புணர்ச்சி எனப்படும். மனம் ஒன்றுபட ஏற்படும் காதல் உணர்வே களவில் முதற்கண் நிகழ்வது.
பழி பாவங்களுக்கு அஞ்சுதலும், தக்கது எது என அறியும் ஆற்றலும் உடையவன் தலைவன். அச்சமும், நாணமும், அறியாமையும் உடையவள் தலைவி.
இருவர்க்கும் உரிய இத்தகு இயற்கைப் பெருங்குணங்கள் காரணமாக இருவருமே முதலில் உள்ளத்தால் இணையும் உள்ளப் புணர்ச்சியை மட்டுமே மேற்கொள்வர்.
2) மெய்யுறு புணர்ச்சி
உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை மெய்யுறு புணர்ச்சி எனப்படும். (மெய் - உடல்)
காலமும் - காரணமும்
மெய்யுறு புணர்ச்சிக்கான காலமும் காரணமும் பற்றியும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் காணுதலாகிய காட்சி, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்புதல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம் சாக்காடு எனச் சொல்லப்படும் பத்துவகையான வளர்நிலைச் செயல்கள் நிகழ நிகழத் தலைவனும், தலைவியும் உடலால் புணரும் மெய்யுறு புணர்ச்சி மேற்கொள்வர்.
பார்வையால் ஓராயிரம் இன்பமா ..? (நன்றி: கவிப்புயல் இனியவன்)
உன்னை பார்க்கும்
போது என்னை பார்க்காதது
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?
நீ கள்ளமாய் என்னை கடைக்கண்
பார்வையால் என்னை பார்த்தது ....?
இன்ப சுகத்தில் இன்பமடி
இதற்கு நிகராய் இந்த உலகில்
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால்
ஓராயிரம் இன்பமா ..?
பார்வையால் ஓராயிரம் இன்பமா ..? (நன்றி: கவிப்புயல் இனியவன்)
உன்னை பார்க்கும்
போது என்னை பார்க்காதது
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?
நீ கள்ளமாய் என்னை கடைக்கண்
பார்வையால் என்னை பார்த்தது ....?
இன்ப சுகத்தில் இன்பமடி
இதற்கு நிகராய் இந்த உலகில்
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால்
ஓராயிரம் இன்பமா ..?
No comments:
Post a Comment