கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

thirukkural meaning விளக்கம் குறள் 1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து பொருட்பால் குடியியல் இரவு
குறள் 1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
கரப்பிலா - கரைகள் இல்லாத; ஒளிவு மறைவு இல்லாத.
கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

நெஞ்சின் - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிவார் - அறிவுள்ளவர்கள்

கடனறிவார் -> தேவையான் செயலுக்கு கடன் கொடுப்பது தன் கடமை என்று நினைப்பவர் (அறிபவர்); கடமையுணர்ச்சி.

முன்நின்று -> முன்பு நின்று

இரப்புமோ ரேஎர் -> இரப்பும் + ஓர் + ஏஎர்.

இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பும்  -> இரத்தல் - ஒரு பொருளை (உதவியை / கடன்) தாழ்மையுடன் கேட்பது.

ஏஎர் -> அழகு.

ஓர் +ஏஎர் + உடைத்து ->   நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.

முழுப்பொருள்
ஒரு பொருளோ அல்லது உதவியோ அல்லது கடனோ நாடும் பொழுது யாரிடம் நாடவேண்டும் என்பதை கவனமாக கணக்கில் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் கேட்டுவிட கூடாது.

கரைகள் இல்லாத, ஒளிவு மறைவு இல்லாத, வஞ்சகம் இல்லாத மனம் கொண்ட, பிறருக்கு உதவி செய்வது தன் கடமை என்று உணர்ந்தவரிடம் (அறிந்தவரிடம்) மட்டுமே கடன் கேட்கலாம்.

அத்தகையவரிடம் மட்டுமே ஒருவர் அவர் முன் நின்று கடன் கேட்க வேண்டும். அப்படி முன் நின்று கடன் கேட்பது தான் கேட்பவருக்கு அழகு என்கிறார் திருவள்ளுவர்.

[அதாவது கடன் கொடுப்பவரே தன் நிலைமை அறிந்து தம்மிடம் வந்து கடன் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். ஏனெனில் கடன் கொடுப்பவருக்கு ஆயிரம் அலுவல் இருக்கும் அல்லவா ? -> ஆதலால் தான் முன்நின்று என்று கூறுகிறார் திருவள்ளுவர்]

அப்படி முன் நின்று கேட்பது இழுக்கு என்று நினைக்க வேண்டாம். அப்படி கேட்பது தான் அழகு / சரி / முறை என்று சொல்வதற்காக திருவள்ளுவர் ”ஏஎர் உடைத்து” என்று கூறி இகழ்ச்சியை களைகிறார்.

ஒப்புமை
”தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிப்
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே” (புறநா 164;10:4)

குறட் கருத்து  (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
இரந்து நிற்பார் அழகுடையர் ஆவதற்கு
ஏற்ற ஒரு வழியினை நம் தந்தை சொன்னார்
மறந்தும் கூட செல்வத்தை மறைத்து வைக்கும்
மனம் இல்லாப் பெருங் கடமை யாளரிடம்
இரந்து நிற்றல் மிகச் சிறந்த ஏற்றம் தரும்
இரப்பவர்க்கும் அது பெரிய அழகைத் தரும்
சிறந்து நிற்கும் அக் குறளை இங்கே காண்பாம்
சென்றிரந்து நின்றோமா? அவனாய்த் தந்தான்

பரிமேலழகர் உரை
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.).

மணக்குடவர் உரை
கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain