குறள் 760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]
பொருள்
ஒண்பொருள் - தன்னை வருத்தித் தேடிய/ ஈட்டிய செல்வம்
ஒண் - ஒண்மை நன்மை அல்லது ஒழுங்கு
காழ்ப்பு -> உறைப்பு; வயிரம்; மனவயிரம்; தழும்பு; சாரம்.
காழ்த்தல் -> முற்றுதல்; மனவயிரங்கொள்ளுதல்; அளவுகடந்துமிகுதல்; உறைத்தல்.
காழ்ப்பு -> முதிர்வு. அது இங்கு மிகுதியைக் குறித்தது.
இயற்றுதல் - செய்தல்; நடத்துதல் சம்பாதித்தல் தோற்றுவித்தல் நூல்செய்தல்.
இயற்றியார்க்கு -> செல்வத்தை ஈட்டியவர்க்கு.
ஏனை -> ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.
ஏனை இரண்டும் -> அறம், பொருள், இன்பம் (காதல்) - மூன்றும் முப்பொருள் அல்லது முப்பால் எனப்படுவதால், முதலில் ஒண் பொருள் என்று பொருளை குறிப்பிட்டதால், இங்கு ஏனை இரண்டும் என்று அறம், இன்பம் என சொல்லப்படுகிறது.
ஒருங்கு -> ஒரு சேர (ஒன்றாக / ஒருங்கே / ஒருகாலத்திலே ) எளிதாய்க் கிட்டும்.
எண்பொருள் -> விளைவு / விளைவாக.
முழுப் பொருள்
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு :
நல்வழியில் நெறியாக வரும் செல்வத்தை நிரம்ப (பெரும் பொருள்) ஈட்டியவர்க்கு/படைத்தார்க்கு.
ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள்:
மற்ற அறனும் இன்பமும் ஒரு சேர எளிதாய்க் கிட்டும்.
நல்வழியில் நெறியாக வரும் செல்வத்தை நிரம்ப (பெரும் பொருள்) ஈட்டியவர்க்கு -> விளைவாக -> மற்ற அறனும் இன்பமும் ஒரு சேர எளிதாய்க் கிட்டும்.
---------------------------------------------------------------------------------------------------------
ஒண்மை நன்மை அல்லது ஒழுங்கு. காழ்ப்பு முதிர்வு. அது இங்கு மிகுதியைக் குறித்தது. அறம் பொருளின்பம் மூன்றும் முப்பொருள் அல்லது முப்பால் எனப்படுவதால், அறவின்பங்களை 'ஏனையிரண்டும்' என்றார். அறமும் இன்பமும் பொருளின் பயனாதலாலும், நல்வழியில் வந்த பெரும் பொருள் அவற்றைத் தப்பாது பயக்குமாதலாலும், அதுவும் எளிதாய் ஒருங்கு நிகழுமாதலாலும், 'ஒண்பொருள்' என்றும், 'எண்பொருள் ஏனையிரண்டு மொருங்கு' என்றும், கூறினார். இந்நான்கு குறளாலும் பொருளின் பயன் கூறப்பட்டது.
"வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த விருதலையு மெய்தும்
நடுவண தெய்தாதா னெய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர். "
(நாலடியார், 114)
---------------------------------------------------------------------------------------------------------
இங்கு நான் உதாரணமாக எதை சொல்வது என்று சிந்திக்கையில் எனக்கு சட்டென்று நினைவிற்கு வருபவர்கள் சில தொழிலதிபர்கள் (டாடா, பில் கேட்ஸ், தியாகராச செட்டியார்). எனக்கு நடிகர் ரஜினிகாந்தும் நினைவுக்கு வந்தார்.
ஒப்புமை
“அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்” (புறநா. 28:15-6)
“வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணதெய்த இருதலையும் எய்தும்” (நாலடி 114)
“ஐயமில்லை இன்பம் அறனோடவையும் ஆக்கும்
பொய்யில் பொருளே பொருள் – மற்றல்ல பிற பொருளே”. (சீவக.497)
“அப்பொருள், தன்னுங் காலைத்துன் னாதன வில்லையே” (சீவக.1923)
பரிமேலழகர் உரை
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தாரக்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள் - மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம். (காழ்த்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள'¢ என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளியபொருளாக வெய்தலாம்.
மு.வரதராசனார் உரை
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.
No comments:
Post a Comment