ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

thirukkural meaning விளக்கம் குறள் 357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்
குறள் 357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
ஓர்த்து - ஓர்த்தல் - ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; நினைத்தல்; கூர்ந்துகேட்டல்

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளது -  உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது

உணரின் - உணர்தல் -   - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

ஒரு - ஒன்று என்பதன் திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில்.

தலையா-தல் - talai-y-ā-   v. intr. id. +. Tobecome prominent; மேன்மையாதல். தமருட் டலையாதல் (பு. வெ 3, 6).

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம்.

பேர்த்து - பெயர்த்து, பெயர்த்தும்; பின்னும் 
பேர்த்தும் - pērttum   adv. id. Again;மறுபடியும். பின்னைப் பழம் பொருட்கும் பேர்த்துமப்பெற்றியனே (திருவாச. 7, 9).


உள்ள - உண்டாயிருக்கிற; உண்மையான.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டா - விரும்பாத

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

முழுப்பொருள்
சான்றோரிடம் கூர்ந்து கேட்டும், தன்னுள் ஆராய்ந்தும் தருக்கம் செய்தும் உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தவர் இன்றியமையாத மறுபடியும் நிகழக்கூடிய பிறவியை விரும்பமாட்டார் (அல்லது பிறவி அவருக்கு இல்லை).

கம்பரின் கீழ்வரும் பாடல் இக்கருத்தை குறள் விளக்கமாக விரித்துச் சொல்கிறது. இது சுக்ரீவன் தன்னுடைய வீரர்களுக்கு சொல்வதாக நாடவிட்ட படலத்தில் வரும் பாடல்.
இருவினையும் இடைவிடா எவ்வினையும் இயற்றாதே இமையோர் எய்தும்
திருவினையும் இரும்பதம்தேர் சிறுமையையும் முறை ஒப்பத் தெளிந்து நோக்கிக்
கருவினை அது இப்பிறவிக்கு என்றுணர்ந்து அங்கு அதுகளையும் கடையில் ஞானத்து
அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கர் பாலார் (கம்ப.நாடவிட்ட 27)

இப்பாடலின் கருத்து: நல்வினை தீவினைகளாகிய இரண்டு வினைகளையும் இடைவிடாமல் தொடர்பு கொண்டுள்ள எந்தக் கருமங்களையும் செய்யாமல் தேவர்களும் புகழும் படியான நிறைந்த செல்வ வாழ்க்கையையும் பிச்சையாக இடும் சோற்றை எதிர்பார்த்திருக்கும் தாழ்வையும் சமமாகத் தெளிந்துப் பார்த்து இந்தப் பிறப்பு உண்டாவதற்கு மூலகாரணம் அந்த இருவினைகளேயாகும் என்று தெளிந்து அவ்வினைகளின் தொடர்பை அந்த இடத்திலேயே நீங்குதற்குரிய எல்லையற்ற தத்துவ அறிவினையுடைய போக்குவதற்கு அரிய இருவினைகளுக்குப் பெரிய பகைவர்கள் அம் மலையில் இருக்கின்றார்கள்; அவர்களை இங்கிருந்த படியே அவர்களிருக்கும் திசை நோக்கி தொழுவதற்கு உரியவராவர்.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.


மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain