எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு குறள் 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கட் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பொருள்
எழுபிறப்பும் - eḻu-piṟappu   n. id. +. 1. Seeஎழுபவம். எழுபிறப்புந் தீயவைநீண்டா (குறள், 62). 2.See எழுமை². (குறள், 107, உரை )

எழுபவம் - எழுவகைப்பிறப்பு; தேவர், மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்; மேல்வரும்பிறப்பு.

தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

தீண்டுதல் - தொடுதல்; பற்றுதல்; பாம்புமுதலியனகடித்தல்; அடித்தல்; தீட்டுப்படுத்துதல்.

தீண்டா - தீண்டாது இருத்தல்

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்

பிறங்குதல் -  விளங்குதல்; உயர்தல்; சிறத்தல்; மிகுதல்; பெருகுதல்; நிலைமாறுதல்; செறிதல்; பெருத்தல்; ஒலித்தல்.

பிறங்காப் - பிறங்காது இருத்தல்

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

பண்புடை  - பண்பு உடைய

மக்கட் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.

பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
ஒருவர் செய்யும் செயல்களினால் உண்டாகும் தீயப்பயன்களால் மறுபிறவி என்னும் ஏழு பிறவிகளை எடுக்க நேரிடும். [அதாவது பிறவிப் பெருங்கடலை நீந்துவர்]. ஏழு பிறவிகள் என்பது தண்டனையையும் துன்பத்தையும் குறிக்கும் என்றே சொல்லலாம்.

ஆனால் இப்பிறவியில் நாம் பெற்ற பிள்ளைகளை நல்ல குணமுள்ள மக்களாக தீயபழிகளுக்கு ஆளாகாதவராக வளர்த்தெடுத்தால் அதுச் சாலச் சிறந்தது. அஃது தீயவைகளும், துன்பங்களும் ஒருவரை மறுபிறவிகளிலும் தீண்டாதிருக்க வழிவகுக்கும்.

மாறாக ஒருவர் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை என்றால் அவர்களுக்கு மறுபிறவியில் துன்பம் வந்து பாடாய்படுவார் என்றும் கூறலாம்.

ஆக பெற்றெடுப்பது மட்டும் போதாது அவர்களை நல்ல மக்களாய் வளர்த்தெடுப்பதும் கடமையும் ஆகும். ஏன் அப்படி கூறுகிறார்கள் என்று சற்று யோசித்தால் எனக்கு கிடைக்கும் விடை, நல்ல பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர் சமுதாயத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். சமுதாயம் மேம்பட வழிவகுப்பார்கள். பிறருடைய துன்பம் தனை துடைப்பார்கள். குறைந்தபட்சம் பிறருக்கு துன்பம் தரமாட்டார்கள். ஆனால் தீயொழுக்கம் கொண்ட பிள்ளைகள் வளர்ந்தப் பின்னர் இந்த சமுதாயத்திற்குத் தலைவலியாக அமைவர். அவர்களை எதிர்கொள்வது, அவர்களுடன் இயைந்து வாழ்வது என்பதே கடினமான ஒன்றாகும். இந்த சமுதாயத்திற்கு பின்னடைவாகும். ஆகவே நல்ல பிள்ளைகளை வளர்த்தல் இன்றியமையாதது.

மேலும்:
“இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடே உற்றோமேயாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்கிறது ஆண்டாளின் பாசுரம் ஓரிடத்தில்.  “இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்” என்கிறாள் நாச்சியார் திருமொழியில். “எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்டபெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோடாடல் புரிவானே”என்கிறது சுந்தரமூர்த்தி நாயானாரின் திருவாலங்காட்டுப் பதிகம்.

இவர்கள் வாக்குகள் படி ஏழேழ்பிறவி என்பது நாற்பத்தொன்பது பிறவிகள் ஆகிவிடுகிறது. வள்ளுவரோ ஏழு பிறவிகள் என்கிறார். இது என்ன கணக்கு என்று புரிவது ஒருபக்கம் இருந்தாலும், ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்பது ஒரு இந்திய நம்பிக்கை.  எண்ணிக்கை எதுவாக இருந்தால் என்ன?  ஏழு பிறப்புகளில் எப்படியோ, இப்பிறப்பிலேயே பண்புநலமிக்க பிள்ளைகளால் பெற்றோருக்கு ஒரு தீமையும் நடவாது என்பதே அறிய வேண்டிய கருத்து.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீங்கி
இருமை யும்பெறற் கென்பது பெரியவர் இயற்கை” (கம்ப.மந்திரப் 63)

“சொன்ம றாமகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்” (கம்ப.மந்திரப் 68)

பரிமேலழகர் உரை
எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். ('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.).

மணக்குடவர் உரை
எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

மு.வரதராசனார் உரை
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

சாலமன் பாப்பையா உரை
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பிள்ளைகளின் நற்பண்புகளே பெற்றோரின் நிரந்தர நிம்மதி.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain