மறத்தல் வெகுளியை யார்மாட்டும்

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை குறள் 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.
குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்.
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]

பொருள்
வெகுளாமை - கோபியாமை, சினவாமை

மறத்தல் - maṟa-   12 v. tr. [T. maṟacu.]1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார்கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard;அசட்டைசெய்தல். 3. To put an end to; to giveup; ஒழிதல்.
வெகுளியை - வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
தீய -  தீமை 1. Evil, wicked,sinful; தீமையான. 2. Fallacious; போலியான.
பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.
அதனான் - அதனால்
வரும் - வரும்

முழுப்பொருள்
ஒருவர் நமக்கு தவறே செய்தாலும், சினம் ஊட்டும் படி செயல்கள் செய்தாலும் அதனை மறத்தலே சிறந்தது என்கிறார் திருவள்ளுவர். அதனை விட்டுவிட்டு, வலியார் ஒப்பார் எளியோர் என்று யாரானாலும் பிறரிடத்தில் கோபம் கொண்டால் அது நமக்கு தீய விளைவுகளையே விளைவிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

உதாரணமாக நாம் சினம் கொண்டால் நம் மனது ஒரு பதபதட்டுடன் இருக்கும். ஒரு தடவை கோபமாக வண்டி ஓட்டியதால் ஏதிரே சூரிய ஒளியை காண முடியாமல் கீழே பல்லத்தை கவனிக்காமல் கீழ விழுந்து அடிப்பட்டுக்கொண்டேன். இதே போல, பலர் சினத்தை மனதில் வைத்துக்கொண்டு உறவுகளை பேணாமல் அழித்துக்கொள்வர். அது ஒரு விதத்தில் தன்னுடைய நேரத்தையும் எடுக்கும், மனதில் மாசாக தங்கும்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு’வில் பன்னிரு படைக்களத்தில் (அத்தியாதம் 50) அசிசுபாலனின் நிலையைப் பற்றி இப்படி கூறுகிறார்

”அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.”

பழி ஒரு விதை, அதன் தருணம் வரை தவம் மேற்கொள்வது

பரிமேலழகர் உரை
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கோபம் தீமையே தரும்.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain