Search This Blog

திருக்குறள்

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kura...

Wednesday, March 29, 2017

ஊழிற் பெருவலி யாவுள

குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.
ஊழின் - தலைவிதியின்

வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு.
பெருவலி - மிகு வலிமையுடையது; பெருநோவு.

உளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல்.
யா - யாவை
உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

மற்று - மற்றப்படி
ஒன்று - மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்;
மற்று ஒன்று - வேறு ஒன்றும்
சூழினும் - சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல்.
தான்  - தன், தனது, acc. தன்னை, dat. தனக்கு, சுயம்
முந்துதல் - மேலெழுதல், விரைதல், எதிர்ப்படுதல், காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல், முதன்மையாதல், சிறத்தல்

முழுப்பொருள்
நமது முன் ஜென்ம தீ வினைகளின் பயனை நாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் - அதனை ஊழ் எனலாம். நாம் பிறக்கும் பொழுதே நமது வாழ்க்கை எழுதப்பட்டு இருக்கும் - அதனை தலைவிதி என்பர் அல்லது விதி என்பர் - அதாவது ஊழ். பொதுவாக இந்த ஜென்மத்தில் என்ன என்ன இன்ப துன்பங்களை சந்திக்க வேண்டும் என்று வரையருக்கபட்டு இருக்கிறதோ அதுவே ஊழ்.

இந்த ஊழ் என்பது மிகுந்த வலிமையானது. அது கொடுக்கும் சோதனைகளும், துன்பங்களும், சஞ்சலங்களும், வலிகளும் மிக மிக கொடுமையானவை. அதனால் தான் திருவள்ளுவர் ஊழிற் பெருவலி என்கிறார். ஊழ் கொடுக்கும் மிக பெரிய வலி. இத்தகைய வலி என்பது எவ்வாறு எல்லாம் உண்டாக வேண்டும் என்று இருக்கிறதோ அவ்வாறு எல்லாம் உண்டாகிவிடும். அதனை தடுக்க முடியவே முடியாது.

என் விதியை நான் மாற்றி விடுவேன் என்று வரிஞ்சிக்கட்டிக்கொண்டு மாற்ற முயன்றால் நம் விதி நமக்கு முன்பு சென்று இன்னும் அதிக இன்னல்களை கொடுக்கும்.

ஆதலால் விதியை வெல்ல முடியாது - இது மிக மேலோட்டமான அர்த்தம் ஆகும். சற்று உள்ளே செல்வோம்.

இங்கே நான் எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைகள் தொகுதியில் இருந்து  பெருவலி [பெருவலி - 1, பெருவலி - 2] என்கிற  சிறுகதையில்  இருந்து நான் பெற்றுக் கொண்ட பாடங்களை துணுக்குகளாக அப்படியே கத்திரி போட்டு இங்கு சேர்த்துள்ளேன்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?

[ராஜேஷ்] துன்பம் என்பது வாழ்வில் வந்துக்கொண்டே இருக்கும். அதனை கண்டு வருந்தாமல், நேரத்தை வீணாக்காமல், மனதை குழப்பிக்கொள்ளாமல் அதனை ஏற்றுக்கொண்டு முன்னே எப்படி செல்வது என்று பார்க்கவேண்டும். குழந்தை ஒரு பெரியவனாக பல வருடங்கள் ஆகும். ஒரு குழந்தையை முதலில் கஷ்டங்களை கொடுக்கும். பின்பு பழகிவிடும்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] எத்தனை ஆயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்திலே ஒரு தடம்கூட இல்லேன்னு ஒரு கவிதை இருக்கே, அதைமாதிரி

[ராஜேஷ்] வாழ்வில் நாம் எவ்வளவு துன்பங்கள் சந்தித்தாலும் பின் பார்க்கும் பொழுது அந்த துன்பத்தின் தடங்கள் எல்லாம் தெரியாது.

[பெருவலி சிறுகதையில் இருந்து] நல்ல ஆரோக்கியம் இருந்தாலே போறது கஷ்டம்’ என்றேன் ‘நல்ல ஆரோக்கியமிருக்கிறவங்க போறது கஷ்டம்தான். அவங்களுக்கு போய்ட்டு வரணும்னு இருக்கும். திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்…

[ராஜேஷ்] ஐயோ நமக்கு மட்டுமே இப்படி ஒரு பிரச்சினை வந்து விட்டதே. நன்கு படித்தவர்களாலும், நன்கு வசதியாக இருப்பவர்களாலும் கூட இதனை கடக்க முடியவில்லை. என்னால் எப்படி முடியும் என்று எல்லாம் நினைக்க கூடாது. ஏன் எனில் நாம் ஒரு செயலை செய்யும் பொழுது முடிவு இனிதாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் வழியில் சிறு துன்பம் வந்தாலும் நமக்கு முடிவின் மீது ஐயம் வரும். ஆனால் அதுவே முடிவைப் பற்றிய கவலை இல்லாமல் சென்றால் எதிரே வரும் அனைத்து இடர்களையும் கையாலலாம்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] வலி இருக்கு இல்லசார்?’ அபத்தமான, ஒருவேளை குரூரமான, கேள்வி. ஆனால் அதைத்தவிர அங்கே என்ன பேசுவது? ‘ஊழிற்பெருவலி யாவுள?’ என்று சொல்லி உதடுகோண புன்னகை செய்தார். அவரை கோமல் என்று அகம்நம்பியது அச்சிரிப்பைக் கண்ட பிறகுதான். ‘பெருவலின்னு சொல்றார் பார்த்தீங்களா? தமிழிலே இப்டி நெறைய சிக்கல்கள் இருக்கு. வலிமைக்கும் வலிக்கும் என்ன சம்பந்தம்? வலி இல்லென்னா வலிமை கெடையாதா? இல்ல வலிமை ஜாஸ்தியா இருந்தா வலி ஜாஸ்தியா? ஆனா அந்த வார்த்தை பிடிச்சிருக்கு. பெருவலி…நெறையவாட்டி அதைச் சொல்லிட்டே இருக்கேன்..

[ராஜேஷ்]  வலியில் இருந்து வலிமை பிறக்கிறது (வலி இல்லாமல் வலிமை இல்லை என்று பொருள் அல்ல). ஆதலால் இவ்வலியினை வலிமையடைய ஒரு கருவியாகவும் கருதலாம். வாழ்வில் பல பேர் தனக்கு வந்த இன்னல்களையும் சவால்களையும் முன்னேற ஒரு வாய்ப்பாக கருதி முன்னே சென்று இருக்கிறார்கள். இன்னலை இன்னலாக பார்த்தவர் துவண்டு அங்கேயே இருந்து இருக்கிறார்.

அதுமட்டுமின்றி மெய் உணர வலியும் ஒரு வழியே. இருளின் உச்சத்தில் ஒளி இருப்பது போல. கோடையின் உச்சத்தில், அனல் காற்றின் உச்சத்தில் மழை இருப்பது போல, வலியின் உச்சத்தில் மெய் இருக்கிறது. 

[பெருவலி சிறுகதையில் இருந்து] முனகி முனகிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொண்டிருந்தார். பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை விரும்பினார் என்று தோன்றியது. ‘வலிமரப்புக்கு ஊசி ஒண்ணும் போடலையா?’ ‘எல்லாம் போட்டாச்சு. மடைன்னா அடைக்கலாம். உடைப்புன்னா ஒண்ணும் பண்ண முடியாதுல்ல’ அவரது தஞ்சைப் பின்னணி எப்போதாவதுதான் வார்த்தைகளில் வரும் 

[ராஜேஷ்] நாம் வாழ்வில் ஒவ்வொரு வலியினை அடைக்க முற்பட்டால் அது முட்டாள் தனமாகும். ஏன் என்றால் வலிகலெல்லாம் மடையல்ல அவை உடைப்பு. அவற்றை அடைக்க முடியாது.

[பெருவலி சிறுகதையில் இருந்து]  உயரம்தான் இமயமலை. காலடியிலே இருந்து இறங்கி சரசரன்னு கிலோமீட்டர் கிலோமீட்டரா போய்ட்டே இருக்கிற பாதாளம் கூட பெரிய உயரம்தான், என்ன தலைகீழா நிக்கிற மாதிரி யோசிச்சுப்பாக்கணும். மனுஷனை சின்னச்சின்னதா எறும்புகளா ஆக்கற உயரம். அந்தி மாதிரி எப்பவும் ஒரு கருக்கிருட்டு. மலையோட இடுப்பில சுத்தின அர்ணாக்கொடி மாதிரி பாதை. கொஞ்ச தூரம் போனதும் பக்கவாட்டிலே இருந்து பெரிய மலை அப்டியே திரும்பி கண்முன்னாடி எழுந்திரிச்சு வந்து நின்னுட்டிருக்கும். இதோ இருக்கேன்னு…பிரம்மாண்டமான பூதம். பூதகணங்கள் தலையிலே வளைவா வானத்தை தாங்கிண்டு நிழலும் இருளுமா நீலமும் கருப்புமா ஒக்காந்திண்டிருக்கு. ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டு தியானத்திலே இருக்கிற மாதிரி.

[ராஜேஷ்]  வலி என்பது இமயமலையின் உயரம் போன்றது. நாம் எவ்வளவு முன்னே சென்றாலும் உயரம் குறைந்தது போன்று தோன்றாது. அது இன்னும் வலியினையே தரும். ஆதலால் இமயத்தின் உயரத்தை பார்த்தால் ஏற முடியாது. வலியின் வலியை பார்த்தால் வாழ முடியாது.

ஒரு சிறிய பொடி கல்லினை கண் அருகே வைத்துப்பார்த்தால் அது பாறைப்போலவே தெரியும். ஆதலால் அதனை தூரத்தில் வைத்து பார்க்கவேண்டும்.

[பெருவலி சிறுகதையில் இருந்து] அந்த மலை ஏறுற வழி முழுக்க வடநாட்டுக்கார பக்தர்ங்க கைதட்டி ஆடிட்டே பாடிட்டே வர்ரதை கவனிச்சப்ப நானும் அதேமாதிரி ஆடிட்டே ஏறணும்னு நெனைச்சேன். ஆனால் அந்த வலி இல்லாம இருந்தாக்கூட ஆடியிருப்பேன்னு சொல்ல முடியாது. வலி இல்லாம இருந்திருந்தா மலைக்கு வந்திருப்பேனாங்கிறதே சந்தேகம்தான். அப்ப ஆடணும்ணு தோணிச்சு. ஆனா என்னை அந்த உடம்புக்குள்ளே இருந்து வெளியே கொண்டுவர முடியலை. அப்ப பீதி வந்திட்டுது. இதுக்குள்ளே மாட்டிண்டு இங்கேயே கெடக்கப்போறானா? பொறியிலே மாட்டிண்டு பொறியோட மட்கி அழுகிப்போற காட்டெலி மாதிரி…

[ராஜேஷ்] நாம வாழ்க்கையில் வலியினை சந்திப்பதென்பது ஒரு பேரனுபவத்திற்கான ஆயுத்தமாகக்கூட இருக்கலாம். நாம் எங்கேயும் செல்லலாம். ஒரே இடத்தில் இருந்தால் நாம் எங்கேயும் செல்ல முடியாது. வலி இருக்கிறதே என்று அங்கேயே இருந்தால் அங்கேயே இருக்க வேண்டியது தான். அது ஒரு நரகமாவே இருக்கும். முன்னே செல்ல வேண்டும். அது நல்லதில் முடியுமா என்று சொல்ல முடியாது. ஆனால் நல்லதில் முடிய வாய்ப்பு இருக்கிறது. 

[பெருவலி சிறுகதையில் இருந்து] ‘சாயங்காலம் மூணு மூணரைதான் இருக்கும். ஆனா அங்க நேரமே கெடையாது. ஏன் காலமே கெடையாது. மலைச்சிகரங்களுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்? அதெல்லாம் அப்டியே காலாதீதமா ஒக்காந்திண்டிருக்கு. சீக்கியர்கள் அவங்க கடவுளை சத்ஸ்ரீ அகால்னு கும்பிடுறாங்க. அகாலம். அகால். என்ன ஒரு வார்த்தை. அகாலத்திலே யாராச்சும் காலமாக முடியுமா என்ன? காலா சற்று என்னருகே வாடா உன்னை உதைக்கிறேன். ஏன் வலிக்கவே இல்லை? வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கைமேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும் மரணமும் இல்லாத எடத்திலே ஏது வலி.

[ராஜேஷ்] வாழ்வும் மரணமும் இல்லாத இடத்தில் வலி இல்லை. வாழ்வு இருந்தால் மரணம் இருக்கும். இவை இருக்கும் இடங்களில் வலி இருக்கும்.


[பெருவலி சிறுகதையில் இருந்து] ’அங்க நின்னுட்ட்டிருந்த எம்பது பேரும் கண்ணிர் விட்டுட்டிருந்தாங்கன்னு சொன்னா நீங்க நம்பமாட்டீங்க. ஏன் கண்ணீர்? துக்கமா துக்கம் வழிஞ்சு போன ஆனந்தமா? ஒவ்வொரு மனசும் ஒரு பிரபஞ்சம். அங்கே ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு சொற்கமும் நரகமும். ஆனா பொதுவா எல்லாருமே மனுஷங்கதானே. சின்னப்பூச்சிங்க ஒரு கூழாங்கல்லிலே ஒண்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. இவ்ளவு அற்பமா இவ்ளவு கேவலமா வாழ விதிக்கப்பட்டிருந்தாலும், இவ்ளவு துக்கத்தையும் வலியையும் அனுபவிச்சு அர்த்தமில்லாம சாக விதிக்கப்பட்டிருந்தாலும் யாரோ மானுடம் மேலே இந்த மகத்தான மணிமுடிய சூட்டியிருக்காங்களே! தாங்க முடியலை. அந்த மகத்தான கௌரவத்தை குடுத்த அது எதிர்பார்க்கிறத்தான் செய்றோமா?

’அய்யய்யோ அய்யய்யோன்னு அகம் கூப்பாடு போடுது…கூசி சிலுத்துட்டுது உடம்பு. என்னென்னமோ கீழ்மையெல்லாம் ஞாபகம் வந்து மனசு கொந்தளிக்குது. கீழ்மைகளைப்பாத்து பாத்து கண்புளிக்கிற ஒரு துறையிலே இருந்தவன் நான் மோகன். பெரியவங்களோட கீழ்மை. சிறியவங்களோட கீழ்மை. இத்தனை கீழ்மைகளுக்கும் மேலே இந்த கிரீடத்தை தூக்கி வச்சு மனுஷனை ஆசீர்வதிச்ச முட்டாள் யாரு? மனுஷன் எத்தனை மகத்தான வார்த்தை. சொல்லிட்டான். ஆனா, நான் எட்டு பேராலே ராவெல்லாம் கற்பழிக்கப்பட்ட பன்னிரண்டு வயசுப்பொண்ண கைத்தாங்கலா அவ அம்மா தூக்கிண்டு போறத பாத்திருக்கேன் மோகன். எட்டு பேரும் பொண்களை பெத்த அப்பாக்கள். ஈவிரக்கமில்லாம ஏமாத்தப்பட்ட பொண்கள் நின்னு கதறுறத பாத்திருக்கேன். அநீதிகளை விழுங்கி விழுங்கி வயிறே ஆசிட்டால நிறைஞ்சுடுத்து


’கபோதி, உனக்கெதுக்குடா முதுகெலும்பு ?. நீ நின்னு எரிஞ்சிருக்க வேண்டிய எடங்களிலே எல்லாம் குளுந்து கல்லா நின்ன கோழை தானேடா? அன்னிக்கு உன் வாயிலே எழுந்த சாபத்தையெல்லாம் துப்பாம உள்ளுக்குள்ள சேத்து வச்சிட்டே. எல்லாம் படிஞ்சு உன் முதுகெலும்பு உளுத்துப்போச்சு. உப்பு பட்ட இரும்பு மாதிரி துருப்பிடிச்சு தொங்கி போச்சு. இந்தா, என் முதுகெலும்பு ஒண்ணை ஒண்ணு கவ்விண்டிருக்கிற நூறு தேளு மாதிரி இருக்கு. நூறு கொடுக்கு. நூறு வெஷம்… என் மேலேயா தூக்கி வச்சிருக்கே இந்த பொற்கிரீடத்த? வெளையாடுறியா? கேலி பண்றியா? நான் பட்ட சிறுமைக்குமேலே இன்னும் சிறுமைப்பட்டு கூசி புழுவா மலமா இங்க நிக்கணும்னு நெனைக்கறியா?

[ராஜேஷ்]  நாம் அறச்சீற்றத்துடன் இருந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளில் அறம் அற்று நமக்குள் அடக்கிக்கொண்டவையே, நம் மனசாட்சியாக நம்முள் இறங்கி வலியாக உருவெடுத்து, சிலகாலம் கழித்து நோயாக (புற்றுநோய்)  தாக்கி இருக்கிறது. அதுவே ஊழ்.

மேலும்: பாரதியார் சொல்கிறார்

விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நி்யமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஊழின் பெருவலி யா உள - ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை வேறு எவையிருக்கின்றன ? ; மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - அதை விலக்குதற்கு வேறொரு வழியை ஆய்ந்து எண்ணினும், அவ்வழியையே தனக்கும் வழியாகக்கொண்டு அது அவ்வெண்ணத்தின் முற்பட்டு வந்து நிற்கும்.

உறுவலி, மதவலி என்பனபோலப் பெருவலி என்பது ஆகுபெயர். சூழினும் என்பது எச்சவும்மை. 'சூழினுந்தான் முந்துறும்' என்றமையால், சூழ்ச்சியை நிறைவேற்றுதல் ஒருகாலுங் கூடா தென்பதாம். சூழ்தலாவது நாற்புறமும் வளைந்து முற்றுகையிடுதல்போலப் பகைவர் ஒருவழியாலும் தப்பமுடியாவாறு தீரஎண்ணுதல். இங்குப் பகை ஊழ்.

மணக்குடவர் உரை
ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.

மு.வரதராசனார் உரை
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.

பொருள்: ஊழின் பெரு வலி யா உள - விதியைப் போலப் பெரிய வலியையு டையவை எவை உள்ளன? மற்று ஒன்று சூழினும் தான் முந்து உறும் - விதியை மாற்றும் ஒன்றை எண்ணினும் அவ் விதியே முற்பட்டுப் பொருந்தும்.

அகலம்: ஒருவன் விதைத்த வித்தின் விளைவை விட்டு வேறு வித்தின் விளைவை அடைய முடியாதது போல, ஒருவன் செய்த வினையின் பயனை விட்டு வேறொரு வினையின் பயனை அடைய முடியாதென்றார். அஃதாவது, ஒருவன் ஒரு வினையைச் செய்து அதன் பயன் அவனைப் பொருந்தும் காலையில் அப் பயனை மாற்றுதற்கு அவன் விரும்பின், அவனால் அதனை மாற்ற முடியாது. அப் பயனை மாற்றத் தக்க வேறு ஒரு வினையைச் செய்து, அதன் விளைவாகிய வேறு ஒரு விதியை ஆக்கி, அதனால் அப் பயனை மாற்ற வேண்டும். வலியை யுடையவற்றை வலி என்றார்.

கருத்து: விதியைப்போல வலி யுடையது வேறு யாதொன்றும் இல்லை.

No comments:

Post a Comment