Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங்

குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஏதிலார் - அன்னியர், பகைவர்
குற்றம்போல் - செய்கின்ற தவறுகளை, குற்றங்களை, பிழைகளை
தம் - தான் செய்கின்ற
குற்றம் - தவறு, பிழை, குற்றம்
காண்கிற்பின் - காணும் வல்லமையும் மனதும் இருட்ந்தால்
தீது - தீமையும், வருத்தமும் 
உண்டோ - இருக்குமோ?
மன்னும் - மன்னில்
உயிரக்கு  - வாழும் உயிர்களுக்கு

முழுப்பொருள்
மற்றவர்களின் குற்றங்களை தேடுவதில் எல்லோரும் வல்லவர்கள். நுழைந்து நுழைந்துத் தேடுவோம். மற்றவர்களுடைய பிழைகளுக்கு பூதக்கண்ணாடி பிடிப்பதில் கெட்டிக்காரர்கள். அதனால் பயன் ஒன்றில்லை. அப்படி பிறர்குற்றம் காண முடிந்தவர்களால் தன்னுடைய குற்றங்களை பார்க்க முடியும். அப்படி பார்த்தார்கள் எனில் அவர்கள் பிறர் குற்றங்களை புறம் பேசி நிலைமையை இன்னும் மோசமாக்க மாட்டார்கள். அதனால் இவ்வுலகிற்கு நன்மையே (ஏனெனில் புறம் பேசினால் நிலைமை மோசமாகும். தீமையே விளையும். அதனை காட்டிலும் பேசாதிருப்பது நல்லது). தீது இல்லை. புறம் பேசுவதே தீது என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

“பாட்டு எழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகை என்பது உமக்கே தெரியும்” என்ற “திருவிளையாடல்” திரைப்பட வசனத்தை யாரால் மறக்க முடியும்? சிலர் குற்றம் கண்டுபிடிப்பதை ஒரு முழு நேரத் தொழில்போலச் செய்வார்கள். எத்தனை குற்றம் கண்டுபிடிக்கிறார்களோ அதற்கு ஏதோ வெகுமதி இருப்பது போலச் செய்வார்கள்! இக்குணாதிசியம் நம்மிடம் இருந்தால் இக்குறள் நம்மக்கானது. நாம் நம்மை திருத்திக்கொள்ளவேண்டும். 


உதாரணமாக சொன்னால் அவன் கோபம் படுவான் என்று சொல்லுவோர் அவர் அவர் வீட்டில் தன் தாய் தந்தை சகோதர்கள் மனைவி கணவன் பிள்ளைகளிடம் மிகுந்த கோபத்துடன் நடத்துக்கொள்பவராக இருக்கக் கூடும். அவர் முதலில் தன்னுடைய கோபத்தை விட்டுவிட்டால் அவர் வாழ்வு மேலும் அமைதிப் பெறும்.

நமக்கு அடுத்தவர் தவறுகள் எப்போதுமே பெரியதாகத் தெரியும். ஆனால் நம் தவறுகள் நம் கண்ணுக்குத் தெரியாது. 

தராசில் பிறரை பிறர் குற்றங்களை ஏற்றி இவ்வுலகிற்கு காண்பிப்பதற்கு முன்பு தன்னை நிறுத்தி பார்த்துக்கொண்டால் நல்லது. ஆனால் அதனை செய்ய பெரும்பாலும் தயங்குகிறோம். அது அரிய செயல். அதனால் தான் தன் குற்றங்களை முதலில் கண்டு அதனை நிவர்த்தி செய் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் பிறர் குற்றங்களை பேசுவது நேரத்தை வீண் செய்வதாகும். அதற்கு பதிலாக அந்நேரத்தை (பிறர் குற்றங்களை காணுவதுப்போல) உன் குற்றங்களை நடுவுநிலைமையுடன் காண நீ தொடங்கினால் அதற்கான தீர்வுகளையும் காணுவாய். அதனை திருத்திக்கொள்வாய். நீ உருப்படுவாய். உனக்கு இம்மையிலும் (இப்பிறவியிலும்) மறுமையிலும் (அடுத்தபிறவியிலும்) நன்மையே (இன்பம்). அதனால் உன் சுற்றத்தில் இருப்பவருக்கும் நன்மையே. ஆதனால் இவ்வுலகிற்கும் நன்மையே. 

உலகில் குற்றங்களை கண்டுப்பிடிப்பது அவ்வளவு கடினமான செயல் அல்ல ஏனெனில் அது சுவாரசியமான ஒன்று. அதுவும் பிறருடைய குற்றங்களை காண்பது அவ்வளவு கடினமும் அல்ல. ஏனெனில் பிறருடைய குற்றங்கள் நம் கண் முன்னே இருப்பது. இதை அப்படி செய்து இருக்கலாம் அதை இப்படி செய்து இருக்கலாம் என்று புறம் கூறலாம். ஆனால் பிறர் தவறு செய்த பொழுது அவர்களுடைய சூழ்நிலைகள், எண்ணங்களை மற்றவர் அறிய வாய்ப்பு மிக குறைவு. அது மட்டுமின்றி அடுத்தவர் குற்றங்களை காண்பதில் ஒரு மகிழ்ச்சியும் அடைவர். எள்ளி நகையாடவும் செய்வர். மற்றவர் குற்றங்களை கண்ட பிறகு அதில் இருந்து மீண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றில்லை. ஆதலால் அது எளிதும் கூட.

அதுவே தன்னுடைய குற்றங்களை காண்பது அவ்வளவு எளிதும் அல்ல. நாம் பல வேலைகளில் இருக்கிறோம். ஆதலால் நமது குற்றங்களை காண நேரமும் இல்லை. மனதும் இல்லை. அப்படியே கண்டால் நமது திமிர் பிழைக்கான காரணத்தை சூழ்நிலையின் மீதும் பிறரின் மீதும் போடும். தன்னை பற்றிய உயர் பிம்பம் உடைந்துப்போகும். ஆதலால் பிழைக்காண்பது என்பது மகிழ்ச்சியும் தராது. அது துன்பத்தையே தரும். ஒரு தவறை உணர்ந்தபின்பு அதனை மறுபடியும் செய்யாமல் இருப்பதே சிறந்தது. ஆதலால் அதற்கு நிவர்த்தியான காரியங்களை செய்ய வேண்டும். அது அவ்வளவு எளிதான ஒன்றும் அல்ல.

ஆதலால் தான் தன் குற்றங்களை காண முடிந்தவனால் குற்றம் செய்ததால் வரும் தர்மசங்கடங்களை உணர்வான். அதனை களையெடுக்க முடிந்தவனால் அதனை எப்படி எதிர்க்கொள்வது எப்படி சரி செய்வது என்பது தெரியும். அதனால் அடுத்தவர் தவறு செய்தால் அதனை ஊதி பெரிதாக்காமல் அதனை பக்குவமாக அவரிடம் நேரடியாக கூறி அதில் இருந்து மீண்டுவர உதவுவார்கள்.

நமக்குத் தேவை, நம்மைப் பற்றிய சுய ஆராய்ச்சி. அதன் மூலம் வளர்ச்சி, முன்னேற்றம். நாம் என்னென்ன தவறுகள் செய்கிறோம்? ஏன் அப்படி செய்கிறோம்? மீண்டும் அதுபோலத் தவறுகள் நிகழாமல் இருக்க என்ன செய்வது? என்பது பற்றி யோசிக்க வேண்டும். அடுத்தவர்களைப் பற்றிக் குற்றம் கூற நினைக்கும் போதெல்லாம் நாம் நம்மைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். நாமும் அதே போன்ற தவறுகளைச் செய்கிறோமா? என்று யோசித்து நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் நாம் சிறந்த மனிதர்களாகி விடுவோம். மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பது போல நம்முடைய குறைகளைப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி ஒவ்வொருவரும் செய்வதனால், வரக்கூடிய மன சஞ்சலங்கள் குறைந்து மனம் அமைதி அடையும். சஞ்சலத்தால் வரக்கூடிய தீமையும் குறையும்.


இதனால் தான் என்னவோ பிறரை காணாமல் தன்னை யார் என்று கொண்டார் மாணிக்கவாசகர் போலும்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
திருக்கோத்தும்பி -  சிவனோடைக்கியம் - எட்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்
நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊனாரும் உடைதலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ
திருச்சிற்றம்பலம்

Who am I? Who is the mind? Who is the wisdom? Who will know me?,
if the Lord of the celestials did not take me in His fold!
Oh king bee, go and sing at the honeyful lotus (feet) of
the Lord of thiruvambalam Who takes alms in the harebrained
fleshy broken skull!

பொருள்: நான் யார்? என் உள்ளம் யார்? என் ஞானங்கள் யார்? என்பதை யார் அறிவார் என்று மற்றவர்களை கேட்கிறார். இறைவன் ஆண்ட பிறகு தான் நான் யார் என்று எனக்கு தெரிகிறது. அப்படி ஆளாமல் விட்டிருந்தால் நான் யார் என்றே தெரியாமல் போய் இருக்கும். (ஆன்மீக பாதையில் முதலில் ஆன்ம தரிசனம். பிறகு தான் இறை தரிசனம்). 

காந்தியும் திருநாவுக்கரசரும்
மஹாத்மா காந்தி அவர்கள் இறுதிவரையும் தன்னைப்பற்றி ஆராய்ச்சிச் செய்துக்கொண்டே இருந்தார். தன் தவறுகளை கண்டுக்கொண்டே இருந்து களைந்தார். சிவபெருமான் திருநாவுக்கரசர் மேலே கைலாயம் செல்லும் பொழுது துறவறத்தில் இவர் எல்லாவற்றையும் துறந்தாரா என்று சோதனைகள் வைக்கிறார். அப்பொழுது நாவுக்கரசரும் 81 வயது. கைலாயத்தின் வழியில் பொன், வைரம், மணிகள் என்று பலவற்றை வைத்து ஆசைகாண்பிக்கிறார். திருநாவுக்கரசர் அதன் எதன் அருகிலாவது செல்கிறாரா என்று பார்க்கிறார்/சோதனைசெய்கிறார். திருநாவுக்கரசர் காலில் பட்ட கற்களையும் முற்களையும் போன்று அவற்றை தூக்கி வீசுகிறார். அழகான பெண்களை முன்னே வரவைக்கிறார். அதிலேயும் திருநாவுக்கரசர் வெற்றிபெறுகினார். ஏனெனில் குற்றங்களில் அடி வேர்களை கண்டறிந்து அதனை வெட்டி எறிந்தவர் திருநாவுக்கரசர். அதனையே மஹாத்மா காந்தியும் செய்தார். காமக்கூறுகள் எங்கேயாவது இருக்கிறதா என்று பலவகைகளில் சோதனை செய்தார். மஹாத்மா ஆனார். ஆதலால் பிறர் குற்றம் காணாமல் தன் குற்றம் காணவேண்டும். கண்டு சரிசெய்தால் மேன்மையடைவோம்.  

திருமந்திரம் அறிதலைப்பற்றி கீழ்க்கண்டவாரு சொல்கிறது
தன்னை அறியத் தனக்குஒரு கேடுஇல்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே. (திருமந்திரம் 2355)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.].

மணக்குடவர் உரை
பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம்குற்றத்தையுங் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்கு தீது உண்டோ - நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ ?

அயலாரையும் பகைவரையுங் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்குப்பிறர் என்னும் பொருட்டாய் நின்றது. பிறர் குற்றம் போல் தம் குற்றமுங் காண்டலருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றார். கண்டவழித் தீவினை நிகழாதாதலின் அதனால் துன்பமுமிராதென்பதாம். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இனி , காண்கின்பின் என்று பிரிப்பினும் அமையும். உடல்நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்.

மு.வரதராசனார் உரை
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

சாலமன் பாப்பையா உரை
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கின் - பகைவரது குற்றங்களைக் காண்டல் போல் தமது குற்றங்களைக் காணின், பின் மன்னும் உயிர்க்கு தீது உண்டோ-பின்னர் நிலையுடைய மானிட உயிர்களுக்குத் தீமை உண்டோ? (இல்லை).

அகலம்: ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.

கருத்து: அன்னியர் குற்றங்களைக் காண்டல் போல் தன் குற்றங்களை ஒருவன் காணின், தன் குற்றங்களை விடுத்து மேம் படுவான்.

Thirukkural - Management - Avoiding Backbiting
Finding the shortcomings of others is always easier as we tend to look for the negative qualities of others. Listing out our own shortcomings is very difficult, as we are fond of our own faults. If a person, as in Kural 190, can look at his own faults as he observes and highlights others' faults, he will not do any harm to other living beings.

Can there be evil if we can see
Our own faults like those of others!

First set your home right before you set out to set others' homes right. We are subjective when we deal with our faults and we are objective when we deal with the faults of others. Learn to be objective to analyze your own faults and subjective to understand others' faults.

English Meaning - As I taught a kid - Rajesh
If one finds all the faults in oneself like he finds and talks about other's faults, then there can be no danger or harm can happen to him or her. Because once one knows and realizes all his mistakes then he or she will start towards rectifying them and become a better person.  Also, being aware of his own mistakes and understanding that he is not perfect, he will be compassionate towards others, understand others imperfection and not discuss/gossip about other's faults in public. 

Questions that I ask to the kid
When will there be no harm or danger to you?
What if you start looking into your mistakes like you see others mistakes?

No comments:

Post a Comment