Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

குறள் 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செல் - செல்லு (போ)
விருந்து - புதுமை, அதிதிகளுக்கிடு முணவு,  விருந்தாளி, அதிதி, புதியர், புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்; 
ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
வரு - மழை
வரு - வருகம் - இலை
விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்
பார்த்திருப்பான் - காத்துக்கொண்டு இருப்பான், எதிர்நோக்கி கொண்டு இருப்பான்
நல் - நல்ல
வருந்து - வருந்திச்செய்ய
வானத்தவர்க்கு - வானில் உள்ளவர்க்கு

முழுப்பொருள்
நல்ல உபசரிக்கும் பண்புள்ளவன் என்று யாரை குறிப்புடுவது என்றால் அதற்கு மூன்று இலக்கணங்களை கூறுகிறார் திருவள்ளுவர்

1) செல்விருந்து ஓம்பி - இதுவரை தன் இல்லத்தில் புதியோராய் விருந்தினராய் வந்தவருக்கு நன்கு உபசரித்து அவர்களை பேணி அவர்கள் மனம் நோகாமல் அவர்களுக்கு நல்ல உணவையும் வசதியையும் அளிப்பவர். ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பொழுது உணவளித்து உபசரிப்பது மட்டும் இன்றி அவர் வீட்டை விட்டு வெளியே ”செல்லும்” பொழுது உணவு கொடுத்து அனுப்புவதும் விருந்தோம்பலில் அடங்கும். ஆகவே தான் ‘செல்விருந்து’ என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். நம் இந்திய கலாசாரத்தில் அதனால் செல்லும் பொழுது மதிய உணவிற்கும் (புளிசாதம், தயிர் சாதம் போன்று), இரவு உணவிற்கு (இட்லி போன்று) அல்லது சில இனிப்புகள் எதையாவது கொடுத்து அனுப்புகிறார்கள்.

2) வருவிருந்து பார்த்திருப்பான் - வருங்காலத்தில் இதற்கு முன் வந்து சென்றவர்களுக்கும், இன்னும் புதியதாய் வருபவர்களுக்கும் விருந்து படைக்க எதிர்நோக்கி காத்திருப்பவர்.  சமைத்துவைத்துக்கொண்டு வருவிருந்துக்காக காத்திருப்பார். 

3) நல்வருந்து வானத் தவர்க்கு -  தேவர்களுக்கும், கடவுளுக்கும் விருந்து படைக்கும் பொழுது எவ்வளவு தன்னை வருத்தி உபசரிக்கிறோமோ அதே அளவு எந்த பாரபட்சமும் இல்லாமல் தன் இல்லத்திற்கு வந்தவரை உபசரிக்க வேண்டும். 

உதாரணமாக இன்றும் சில ஊர்களில் வீட்டுக்கு வந்துவிட்டுசெல்லும் விருந்தினர்களுக்கு கையில் சில உணவு பண்டங்களை கொடுத்து அனுப்பும் வழக்கம் உள்ளது. கல்யாணங்களில் கட்டுசாத கூடை என்று  கூறுவர். பல குடும்பங்களில் விருந்தினர் ஊர்க்குப்போனால் கையில் இட்லி, புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி (உடன் - வெங்காயம் தக்காளி கரி)  என்று ஏதாவது ஒன்றை கையில் கொடுத்து அனுப்புவர். இன்றைய காலத்தில் நாகரிகம் வசதி என்ற பெயரில் வழியில் வாங்கி சாப்பிடுவதை ஒருவித கௌரவமாக கொண்டு பல உயர் விழுமியங்களை நாம் இழக்கிறோம். 

இக்கருத்து மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறியதுபோல “கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்” என்று அடுக்கியது போல தேவராய் பிறப்பது ஒரு பிறவியென்பதை ஒட்டி இருக்கிறது.

தியடோர் பாஸ்கரன் அவர்கள் “செல்விருந்துதோம்பி வருவிருந்து பார்த்திருப்பார்” என்ற கட்டுரையில் இக்குறளை இப்படி எழுதியிருப்பார் - துறவிகள், சில நாட்களுக்கொருமுறை, அருகிலுள்ள ஊருக்குள் சென்று, யாசித்து உணவு பெற்று, அதை பள்ளியிலுள்ளத் எல்லாத் துறவிகளுடன் பகிர்ந்து உண்டனர். ஒரு வீட்டின் முன் சென்று அமைதியாக நிற்பார் துறவி. உணவு வேண்டி துறவிகள் தங்கள் இல்லத்திற்கு வருவதை மக்கள் ஒரு பேராகக் கருதினார்கள். இந்தப் பழக்கத்தைத் தான் வள்ளுவர், “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு” என்று எழுதியிருகின்றார் என்றும், திருக்குறளில் விருந்து என்ற சொல் துறவிகளின் வருகையைத்தான் குறிக்கின்றது என்று ஜீவபந்து ஸ்ரீபால் கூறிகின்றார். 

Aritappati Jain Caves (அரிட்டாபட்டி சமண குகைகள்)

ஒப்புமை
”செல்விருந் தாற்றி” (அகநா 203.16)

“வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய” (புறநா 177.15)

“வருவிருந் தோம்பி மனையறம் முட்டாப்
பெருமனைக் கிழத்தியார்” (சிலப் 22.132.3)

“அருவிலையிற் பெறுங்காசும் அவையே யாகி
அமுதுசெயத் தொண்டரள விறந்து பொங்கி
வருமவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
மகிழ்ந்துண்ண இன்னடிசில் மாளா தாக” (பெரிய.திருஞான 571)

”இல்லா இடத்தும் இயன்ற அளவினால்
உள்ள இடம்போற் பெரிதுவந்து மெல்லக்
”கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு” (நாலடி 91)

“நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல் - அட்டது
அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு” (நாலடி 271)

“இன்சொ லளாவல் இடமினிதூண் யாவர்க்கும்
வன்சொற் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து” (ஏலாதி.7)

“ஒன்றாக நல்ல துயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்ந் தடங்கினார்க் கீந்துண்டல்  என்றிரண்டு
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து” (அறநெறி 62)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

மு.வ உரை
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

சாலமன் பாப்பையா உரை
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

எழுத்தாளர் ஜெயமோகன் ”நமது விருந்தோம்பல்..” பதிவில் இருந்து (நன்றி) 
ஏனென்றால் சுற்றுலாப்பயணியை ஏமாற்றுபவர், சீண்டுபவர் நம் பிரதிநிதியாக நின்று அதைச் செய்கிறார். ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பார்’ என்று வள்ளுவர் விருந்தோம்புதலைச் சொன்னார். அந்தப் பெரிய பண்பாட்டை அவமதிப்பவர்கள் நம்மில் உள்ள இந்த புல்லுருவிகள்தான்.

எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் ஆன்மா துறவில் உள்ளது என்று உணர்ந்ததாகவும், அதனை விவேகானந்தரும் சொன்னதாகவும் அவரின்அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ் பயணக்கட்டுரையில் பதிவு செய்து இருக்கிறார். 
 
(அதில் இருந்து ஒரு பத்தி கீழே - அவருக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம்)
காலையில் எழுந்ததும் சமண பஸதிக்குச் சென்று பார்த்தோம். அப்போது ஒருவர் நாங்கள் செல்லும் கார் எண்ணைப் பார்த்து வந்து சாமியார் அழைப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் சென்றோம். ஒரு பெரிய போஜனசாலையில் தட்டுகளைக் கழுவி வந்து அமர்ந்தோம். எல்லா ராமகிருஷ்ண மடாலயங்களையும் போல பிரம்மாண்டமான கூடம். அமைதி. சுத்தம். மாபெரும் கட்டிடங்கள். ஒரு வகை உப்புமா போட்டார்கள். என்னால் அள்ளி வாயில் வைக்கவே முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது. நான் இரந்துண்டு வாழ்ந்தவன். வரிசைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்றிருக்கிறேன். கிடைத்ததை உண்டிருக்கிறேன். அவமதிப்பும்கூட பெரிய விஷயமல்ல. அது அவமதிப்பவனின் மனநிலையைக் காட்டுகிறது, அவ்வளவுதான். இது அப்படி அல்ல, இதன் பின்னால் உள்ளது ஒரு மாபெரும் மனச்சிறுமை. என் முன்னால் அமர்ந்து தின்றுகொண்டிருந்த அந்தக் காவிதாரி எங்களை மதிப்பிடுகிறார். நான் வைரமோதிரம் போட்டிருந்தால் அவர் என் முன்னால் வந்து நின்று இளித்திருப்பார் என்று எனக்கு தெரியும் என்பதே என் பிரச்சினை.

சுற்றிலும் பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டிடங்கள். அவை எல்லாமே தங்குமிடங்கள். பெரும்பாலும் காலியாகவே இருக்கவும் கூடும் என அங்கே பார்த்ததுமே தெரிந்துகொண்டேன். அது மெல்ல மெல்ல மனக்கொதிப்பை உருவாக்கியது. உடனே அங்கிருந்து சென்று விடவேண்டும், ஒரு சொல் கூட அந்தக் காவிதாரியிடம் பேசக்கூடாது என நினைத்தேன். அவரைப் பார்க்காமலேயே வெளியேறினேன்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது அவரிடம் கேட்டார்கள், அமெரிக்காவில் உங்களைக் கவர்ந்தது என்ன என்று. இங்குள்ள பொது அற அமைப்புகள்தான் என்று அவர் சொன்னார். பின்னர் எழுதினார், இந்தியா நூற்றாண்டுகளாகப் பெரும் அறநிலைகளை அறநெறிகளை உருவாக்கி நிலைநாட்டி வந்தது. அவையெல்லாம் நவீன காலகட்டத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன, நவீன அற அமைப்புகளை உருவாக்கி அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும் என்று. அவ்வாறு அவர் உருவாக்கிய அமைப்புதான் ராமகிருஷ்ண மடம். அதற்கு அவருக்குத் தெளிவான நோக்கம் இருந்தது.

விவேகானந்தர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார், இந்த நாட்டின் பாரம்பரியமும் கலைகளும் ஆன்மீகமும் நிலை நிற்பதே உலகியலை உதறி இந்த நாட்டு நிலவெளி முழுக்க அலைந்து திரியும் அன்னியர்களால்தான் என. இங்குள்ள பெரும்பாலான ஆன்மீக வழிகளில் துறவி ஆவதற்கு முன் பிச்சை எடுத்து உண்டு அலையும் வாழ்க்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லௌகீகம் சம்பந்தமான பயமும் கவலையும்தான் ஆன்மீகமான சிந்தனைக்குப் பெரும் தடைகள். அவற்றில் இருந்து முற்றாக விடுபட்டவனே உண்மையில் எதையாவது ஆழத்தில் சென்று சிந்தித்தறிய முடியும். ராமகிருஷ்ணரே அவரது மாணவர்களைப் பிச்சை எடுக்க அனுப்பியிருக்கிறார். விவேகானந்தரும் அப்படி பவிராஜக வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.

ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, கலையிலும் கூடத்தான். இந்நாட்டின் முக்கியமான எல்லா எழுத்தாளர்களும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்த வாழ்க்கை கொண்டவர்களே. பஷீராக இருந்தாலும், காரந்தாக இருந்தாலும். அவர்களைப் பேணும் அமைப்புகள் இந்நாடெங்கும் இருந்தன. ஒவ்வொரு இந்துவும் சமணரும் பௌத்தரும் சீக்கியரும் அந்த மனநிலை கொண்டிருந்தார்கள். அன்னியர்களை ஐயப்படுவதற்கும் புறக்கணிப்பதற்கும் பதிலாக அவர்கள் அன்னியர்கள் என்பதற்காகவே அவர்களைப் பேணும் ஒரு பண்பாடு. இன்றும் அந்தப் பண்பாடு நம் கிராமங்களில் உள்ளது. சாவடிக்குச் சென்று இரவுணவுக்கு எவராவது உள்ளனரா என்று பார்த்து உணவிட்டபின்னரே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்ற மரபு இன்றும் கூட பல்லாயிரம் தமிழகக் கிராமங்களில் உள்ளது.

சென்ற நூற்றாண்டில் பிரம்மசமாஜம் இந்த விழுமியங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. அலைந்து திரிபவர்களை சோம்பேறிகள் என்றும் குற்றவாளிகள் என்றும் அது சொன்னது. அந்த மனநிலை பெருகி ஒருகாலத்தில் அலைந்து திரியும் அன்னியர்கள் பேணப்படாது போய்விடுவார்கள் என விவேகானந்தர் அஞ்சினார். ஒருநாட்டின் ஆன்மீக சாரம் அந்த அன்னியர்களால், நாடோடிகளால்தான் நிலைநிற்கும் என்று அவர் சொன்னார். ஆகவே அதற்கான நவீன அமைப்பை உருவாக்க வேண்டுமென விரும்பி அவர் ராமகிருஷ்ண மடங்களை உருவாக்கினார். ஓர் இளைஞன் இன்னதென்றறியாத மன எழுச்சியால் உந்தப்பட்டவனாகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் உதறி எங்கு செல்வதென்றில்லாமல் செல்லும் அந்தப் பயணத்தில் எந்நேரத்திலும் அடையா வாசலும் உணவும் தலைசாய்க்க இடமுமாக அந்த அமைப்பு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

அங்கேதான் இந்த ஆசாமிகள் காவிகளைக் கட்டிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள் இன்று. இன்று இவர்கள் செய்யும் வேலை என்ன? விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பெயரைச்சொல்லி பெருநகர்களில் அமைப்புகளை உருவாக்குகிறார்கள். பெரும் பணக்காரர்களின் இல்லங்களைத் தேடிசென்று தொடர்புகளை உருவாக்குகிறார்கள். பல்லிளித்துப் பசப்பி நன்கொடைகளைப் பெற்று பெரும் கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். அவற்றுக்குள் நெய்விட்டு சோறு தின்று ஊன் வளர்த்து அமர்ந்திருக்கிறார்கள். சில வீணர்கள் சிலரை ஏமாற்றித் தின்று வாழ்வது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதற்கு இந்த தேசம் கண்ட விடிவெள்ளியின் பெயர் பயன்படுத்தப்படுவதே கொந்தளிக்கச் செய்கிறது.

என்னால் மிக எளிதாக ஓர் சிபாரிசைத் தொலைபேசியிலேயே ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் அது இன்றைய நான். முப்பதாண்டுகளுக்கு முன், பதறும் கண்களும் தயங்கும் நடையுமாக, கையில் பைசா இல்லாமல், பசித்துக் களைத்து நான் வந்து இந்த வாசலில் நின்றிருந்தால் என்னை இவர்கள் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். இந்த இடத்தில் இன்றும் என் அகம் அந்த அவமதிப்பை உணர்கிறது. இந்தக் காவி அணிந்த குமாஸ்தா ஒவ்வொரு அரசாங்க அமைப்பிலும் அமர்ந்திருந்து விதிகளைக்கொண்டு அந்த அமைப்பையே தோற்கடிக்கும் அதே ஆன்மாதான்.

நான் சென்ற ஒவ்வொரு முறையும் அரவணைத்து உணவிட்ட சமண நிலையங்களும் குருத்வாராக்களுமே எனக்கானவை. இது அல்ல. இது இந்து சமூகம் மேல் இருக்கும் ஒரு சீழ்க்கட்டி.

அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்

நான் சீனுவிடம் கேட்டேன், சிங்கப்பூரில் நான் ஆற்றிய உரையை வாசித்திருக்கிறீர்களா என. நானும் அதையேதான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் சார் என்றார் அவர்.   நான் இந்தியா என்று ஆரம்பித்துப் பேசும்போது என்னிடம் பேசவருபவர்கள் ஒரு அரசியல் கட்டமைப்பை, ஒரு வரைபடத்தை இந்தியா என எண்ணிப் பேசவருகிறார்கள். இந்த தேசத்து நிலப்பரப்பில் அலைய ஆரம்பித்து முப்பதாண்டுகளாகின்றன. நான் இந்தியா என நினைப்பது எனக்கு அன்னமிட்ட ஆயிரக்கணக்கான கைகளை. நான் மிக அபூர்வமாகவே பட்டினி கிடந்திருக்கிறேன். அனேகமாக எங்கும் இல்லறத்தாரால் கனிவுடன் மட்டுமே உணவிடப்பட்டிருக்கிறேன். எனக்கு என் தேசம் மனித உள்ளங்களில் குடியிருக்கும் அன்னபூரணிதான்.

கலை இலக்கியம் எதற்காக? (எழுத்தாளர் ஜெயமோகன்)

பதினைந்து வருடம் முன்பு ஒரு உயர்காவலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்தியக் காவல்துறை அமைப்பு என்பது உண்மையில் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. ஏறத்தாழ இருபதாயிரம் பேருக்கு ஒருகாவலர் வீதம் இங்குள்ளனர். உண்மையில் இந்தியாவில் உள்ள அமைதி என்பது போலீஸ் நோக்கில் ஓர் ஆச்சரியம்

”இங்க பசிச்சவன் கிட்ட கருணையும் நியாயமும் இருக்கு சார்” என்றார் அந்த அதிகாரி. அதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் நீங்கள் வேறுபடலாம். ஓயாது இந்திய நிலத்தில் அலைபவன் என்றமுறையில் இந்த மண்ணின் ஒவ்வொரு துளியிலும் ஊறிக் கொண்டிருக்கும் கருணையை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இந்திய நிலத்தில் எங்கும் முலைகனிந்த அன்னையரும் அகம் கனிந்த தந்தையரும் காணக்கிடைக்கின்றனர்.

அவர்களின் வாழ்வின் சாரமாக உள்ள அறம்தான் என் கற்பனையின் ஈரம் சென்று தொடும் விதை. என் பத்தொன்பது வயதில் அம்மா அப்பா இருவரும் இறந்தபின் கையில் ஒரு பைசா இல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி அலைந்திருக்கிறேன். என் நாட்டில் நான் ஒருவேளைக்குமேல் பட்டினிகிடக்க நேரவில்லை. ஒரு அன்னையை நான் இழந்தேன் . பல அன்னை முகங்கள் எனக்கு சோறூட்டின. அந்த முகங்களை இப்போது என்னிப்பார்க்கிறேன். அவைதான் இந்தியாவின் முகம்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்- (தன்பால் நின்று) செல்லும் விருந்தினரைப் பேணி (த் தன்பால்) வரும் விருந்தினரை (எதிர் நோக்கி) இருப்பவன், வானத்து அவர்க்கு நல் விருந்து - வானத்தின்கண் வாழும் தேவருக்கு நல்ல விருந்தினன் (ஆவன்).

அகலம்: செல், வரு என்பன வினைத் தொகைகள். அவை மேற்கூறிய பொருளன வாதலைத் ‘தருசொல் வருசொல்லாயிரு கிளவியுந், தன்மை முன்னிலை யாயீரிடத்த’, ‘ஏனை யிரண்டுமேனை யிடத்த’ என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அறிக.

இச் சூத்திரங்களை அறியாதார் ‘செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்’ என்பதற்குத் ‘தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான்’ என்று உரைப்பார்.

கருத்து: விருந் தோம்புவான் தேவர்களால் சிறப்புச் செய்யப் பெறுவான்.

திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த நூல்களுள்,  பிறைசைச் சாந்தக் கவிராயர் இயற்றிய, நீதிசூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா" ஒன்று ஆகும். அதில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....

தேசுபெறு மாறன் தெளித்த முளையமுதிட்டு
ஈசனுடன் போந்தான், இரங்கேசா! - பேசுங்கால்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

இதன் பதவுரை --- 

 இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!

தேசு பெறு மாறன் --- புகழ் பெற்ற இளையான்குடிமாற நாயனார், தெளித்த முளை அமுது இட்டு --- அன்று விதைத்த நெல்முளையை அமுதாக்கிப் படைத்து, ஈசனுடன் போந்தான் --- சிவபிரானுடன் சிவலோகம் சென்றார். (ஆகையால், இது) பேசுங்கால் --- எடுத்துச் சொல்லுமிடத்து, செல் விருந்து ஓம்பி --- உண்டு செல்லும் விருந்தாளிகளை உபசரித்து விட்டு, வருவிருந்து பார்த்து இருப்பான் --- இனி வரும் விருந்தாளிகளை எதிர்நோக்கி இருப்பவன், வானத்தவர்க்கு --- சுவர்க்கலோக வாசிகளாகிய தேவர்களுக்கு, நல் விருந்து --- இறந்த பிறகு நல்ல விருந்தாளியாவான் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

விளக்கவுரை ---  தமிழ்நாட்டில், இளையான்குடி என்னும் ஊரில் வாழ்ந்த மாறன் என்னும் வேளாளர், தாளாளராய், "தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது" என்றபடி பழுதற உழுது பயிரிட்டுச் செல்வம் பெருக்கி,"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" என்றபடி இல்வாழ்க்கையை வாழும் இயல்பினான் வாழ்ந்து வந்தார். இவர் சிவபத்தியில் சிறந்து இருந்தாராகையால், சிவனடியவரை அவன் எனக் கருதி அன்புசெய்து அமுது ஊட்டுவாராயினார். அதுகண்ட சிவபிரான் அவரது விருந்தோம்பல் திறத்தை அவர் வாழ்வினன்றித் தாழ்வினும் போற்றுவார் என்று காட்டி உலகத்தவர்க்கு அவருடைய சிவபத்தியின் சிறப்பை வெளிப்படுத்த அவருடைய செல்வத்தை மாற்றி, அவரை வறியவராக்கினார். அன்றியும், ஒருநாள் அரை இரவில் விடைமழை பொழியும் இருட்டில், சிவபிரான் தாமொரு விருத்த சிவனடியவர்போல் வேடம் தாங்கி, மெத்தப் பசித்தவர் போன்று அவர் வீட்டுக் கதவைத் தட்டினார். வறுமையின் கொடுமையால் உறக்கமின்றி இருந்த நாயனார், உடனே வந்து கதவைத் திறந்து, சிவனடியவரை வரவேற்று உபசரித்து, அங்கொரு புறம் அவரை எழுந்தருளிவித்து, வீட்டில் ஒன்றும் இல்லாதிருந்து, அவர்க்கு அன்னமிடும் ஏற்பாட்டுக்காகத் தம் மனைவியாரோடு யோசித்து, அன்று பகல் விதைத்த நெல்முளையை மிக வருந்தி வாரிக் கொண்டு வந்து, அவர் கையில் கொடுத்தார். அதை வாங்கி அவ் அம்மையார், பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை ஆகையால், தக்கபடி பதம்செய்து அமுதாக்கி அடியவர்க்குப் படைத்தார். பொய்ப் பசி கொண்ட அடியவர், அவர்களுடைய பத்தி வைராக்கிய உண்மை அன்புக்கு வியந்து, மழவிடைமேல் அவர்களுக்குக் காட்சி தந்து, அவர்களிருவரையும் தமது உலகத்துக்கு அழைத்துக் கொண்டு போயினர்.

திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த நூல்களுள், சிதம்பரம் பச்சைக் கந்தயைர் மடத்து சென்ன மல்லையர் இயற்றிய, "சிவசிவ வெண்பா" ஒன்று ஆகும். அதில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....

அன்னம்இடான் பொன்நா டுஅடைந்தும் தனதுஉடலைத்
தின்எனவே தின்றான், சிவசிவா! - மன்னிஅயல்
செல்விருந் துஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

 தண்டகாரண மகிமையில் சுகேது மன்னன் இட்டுண்டு வாழாமையில், நரகத்தில் தன் உடலைத் தின்றான் என்று கூறப்பட்டுள்ளது.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....                                 

"திருஇருந்த தண்டலையார் வளநாட்டில்
         இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்
         பகலாமோ, உறவாய் வந்த
பெருவிருந்துக்கு உபசாரஞ் செய்து அனுப்பி
         இன்னம் எங்கே பெரியோர் என்று
வருவிருந்தோடு உண்பு அல்லால், விருந்து இல்லாது
         உணும் சோறு மருந்து தானே".              
                   ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

 திரு இருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் --- அருச்செல்வத்தோடு பொருட்செல்வமும் பொருந்தி உள்ள திருத்தண்டலை என்னும் வளம் மிகுந்த நாட்டினில் இல்லறம் நடத்துகின்ற பெரியோர்கள், ஒரு விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ --- ஒரு விருந்தினராவது இல்லாமல் உணவு கொண்ட நாளும் ஒரு நாள் ஆகுமோ? உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி --- உறவு போல அன்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவு அளித்து, வேண்டிய உபசாரங்களைச் செய்து அனுப்பிய பின்னரும், இன்னும் பெரியோர் எங்கே  என்று - மேலும் விருந்தாக வரக்கூடிய சான்றோர்கள் எங்கே என்று ( ஆவலோடு காத்திருந்து) வரு விருந்தோடு உண்பது அல்லாமல் --- வருகின்ற விருந்தினருடன் உண்பது அல்லமால்,  விருந்து இல்லாது உணும் சோறு மருந்து  தானே --- விருந்தினர்  இல்லாமல் உண்ணுகின்ற சோறு ஆனது மருந்து போலக் கசப்பாகத் தான் இருக்கும்.

கருத்து --- "செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்து இருப்பான், நல்விருந்து வானத்தவர்க்கு" என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.

"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்பது கொன்றைவேந்தன். மருந்து என்னும் சொல் இங்கு அமுதம் என்னும் பொருளில் வந்தது.
    
 இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல் ஆகும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது. இதை, "விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்" என்றது கொன்றை வேந்தன். விருந்தினரை அன்புடன் உபசரிக்க வேண்டும் என்னும் பொருள் படவே, "அன்புடைமை" என்னும் அதிகாரத்தின் பின்னர், விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தை நாயனார் தமது திருக்குறளில் வைத்தார் என்னும் அருமையை உணர்க.

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த
     பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து
     ஒருப்படுத்த உறைப்பன் ஊர்;
மறைப் பெருந்தீ வளர்த்து இருப்பார்,
     வருவிருந்தை அளித்து இருப்பார்,
சிறப்பு உடைய மறையவர் வாழ்
     திருவரங்கம் என்பதுவே.    
                   --- பெரியாழ்வார் திருமொழி.

இதன் பொருள் ---
பிறத்தற்கு உரிய அறையிலேயே மாயமாய்ப் போய்விட்ட அந்தணனது நான்கு பிள்ளைகளையும் கொஞ்ச நேரத்திற்குள் பரமபதத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து கொடுத்து, தாயுடன் நேர்த்த வல்லமை உடையவனது வேதத்தில் கூறி உள்ளபடி, அக்கினியை வளர்த்துக் கொண்டு இருப்பவர்களும், வரும் விருந்தினரை உபசரித்துக் கொண்டு இருப்பவர்களும் மேன்மையை உடைய அந்தணர்கள் வாழுகின்ற ஊர் திருவரங்கம் ஆகும்.

இல்லா இடத்தும் இயன்ற அளவினால்
உள்ள இடம்போல் பெரிது உவந்து ---  மெல்லக்
கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.          
                    --- நாலடியார்.

இதன் பதவுரை ---

இல்லாவிடத்தும் --- பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் --- கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து --- பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு --- ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா --- அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.

ஈகைக் குணமுடையவர்கள் மறுமை இன்பம் பெறுவர் என்பது கருத்து.

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் ---  அட்டது
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.       
            ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் --- சமைத்து உண்ணுதல் என்பது, தமக்குள்ள பொருள் அளவினால் தம்மிடம் உறவு கொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும் தாம் சமைத்ததைப் பகுத்து உதவிப் பின் தாம் உண்ணுதலாகும்;  அட்டது அடைத்திருந்து உண்டொழுகும் ஆவது இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு --- அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின் கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டு உயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்கு மேலுலகக் கதவு மூடப்படும்.

இம்மையில் பிறர்க்கு ஒன்று ஈயாதவர்க்கு மறுமையில் துறக்க உலகின்பம் இல்லை என்றது.

இன்சொல், அளாவல், இடம்,  இனிது, ஊண்
வன்சொல் களைந்து வகுப்பானேல் --- மென்சொல்
முருந்து ஏய்க்கும் முள் எயிற்றினாய், நாளும்
விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து.    -
           -- ஏலாதி.

இதன் பதவுரை ---
முருந்து ஏய்க்கும் --- மயிலிறகின் அடியை ஒக்கும், முள் எயிற்றினாய் --- கூரிய பற்களையுடைய பெண்ணே!, யாவர்க்கும் --- விருந்தாய் வருவாரெல்லாருக்கும், இன்சொல் --- இன்சொல்லும், அளாவல் --- உள்ளங்கலந்த உறவும், இடம் --- தங்குமிடமும், இனிது --- ஆடையணி முதலிய பொருளும், ஊண் --- உணவும், வன்சொல் களைந்து --- கடுஞ் சொற்களை நீக்கி, மென்சொல் --- பணிவு மொழியும், நாளும் வகுப்பானேல் --- என்றும் முறையே வழங்குவானானால், விண்ணோர் --- தேவர்கள், விரைந்து --- முன் வந்து, விருந்து ஏற்பர்--- அவனை விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.

மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது அடியையும் ஒத்து விளங்கும் கூரிய பல்லையும் உடையவளே! தன் மனை நோக்கி வரும் விருந்தினர் யாவரிடத்தும் இன்சொல் கூறலும், கலந்து உறவாடலும், இருக்கை உதவலும், அறுசுவை உண்டி அளித்தலும் செய்து, கடுஞ்சொல் ஒழித்து, மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பான் ஆயின் எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.
   
ஒன்றாக நல்லது உயிர்ஓம்பல், ஆங்கு அதன்பின்
நன்றுஆய்ந்து அடங்கினார்க்கு ஈந்து உண்டல் – என்றுஇரண்டு
குன்றாப் புகழோன் வருக என்று மேல்உலகம்
நின்றது வாயில் திறந்து.           
--- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---
ஒன்றாக நல்லது உயிரோம்பல் --- அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் --- இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது --- வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.


வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ்வு எய்தி
இலங்குபூண் மார்பில் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கைப் பூசல் கொடிதோ அன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்.... 
--- சிலப்பதிகாரம், அழல்படு காதை.

இதன் பதவுரை ---
வரு விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி --- தம் இல்லத்து வரும் விருந்தினரைப் பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து --- விளங்கும் பூண் அணிந்த மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என --- சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய அணிகலங்களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் --- மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர் ;


அருந்தினர் அருந்திச் செல்ல
         அருந்துகின்றாரும், ஆங்கே
இருந்து இனிது அருந்தா நிற்க
         இன்னமுது அட்டுப் பின்னும்
விருந்தினர் வரவு நோக்கி
         வித்து எல்லாம் வயலில் வீசி
வருந்தி விண் நோக்கும் ஓர்
         ஏர் உழவர்போல் வாடி நிற்பார். --- தி.வி.புராணம். திருநகரச் சிறப்பு.

 இதன் பதவுரை ---
அருந்தினர் --- உண்ட விருந்தினர், அருந்திச் செல்ல --- உண்டு செல்ல, அருந்துகின்றாரும் --- உண்கின்றவர்களும், ஆங்கே --- முன் உண்டவர் போலவே, இருந்து இனிது அருந்தா நிற்க --- இருந்து மகிழ்ச்சியுடன் உண்ணா நிற்க, பின்னும் இன் அமுது அட்டு --- பின்பும் இனிய அமுதைச் சமைத்து, விருந்தினர் வரவு நோக்கி --- வரக்கடவராகிய விருந்தினர்களின் வருகையை நோக்கி, வித்து எலாம் --- விதை அனைத்தையும், வயலில் வீசி - விளைபுலத்தில் வித்தி, விண் வருந்தி நோக்கும் --- மழையை வருந்தி எதிர்பார்க்கின்ற, ஓர் ஏர் உழவர் போல் --- ஒரே ஏரினையுடைய உழவரைப்போல, வாடி நிற்பார் --- வருந்தி நிற்பார் (அவ் வேளாளர்) எ - று.

English Meaning - As I taught a kid - Rajesh
We should always give something when our guest leaves our house. We should always eagerly wait for our guests to come. We should treat our guests like God.

Questions that I ask to the kid
How should we treat our guests?
How should we display our hospitality?

2 comments:

  1. அருமையான தமிழ்ப்பணி! நன்றியும் வாழ்த்துகளும்

    ReplyDelete