குறள் 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
[பொருட்பால், அரசியல்,ஒற்றாடல்]
பொருள் :
கடாவுதல் - செலுத்துதல்; ஆணிமுதலியனஅறைதல்; குட்டுதல்; வினாவுதல்; தூண்டுதல்; விடுதல்.
கடாதல் - கடாவுதல், வினாவுதல்.
உருவம் - வடிவம்; உடல் அழகு நிறம் வேடம் சிலை மந்திரவுரு; கூறு தெய்வத்திருமேனி.
கடாஅ உருவொடு - யாரும் எளிதில் கண்டு பிடிக்க முடியாத உருவோடு
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
அஞ்சுதல் - பயப்படுதல்
அஞ்சாது - அஞ்சாமல்
கண்ணஞ்சாது - சந்தேகிக்கும் எந்த கண்களுக்கும் அஞ்சாமல்
யாண்டும் - எப்பொழுதும்
உகாஅமை - மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லாத உறுதி கொண்டமை
வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள
ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.
வல்லதே ஒற்று - இவ் வலிமைகளே ஒற்று .
முழு விளக்கம்
ஒரு ஒற்றனானவன் எவ்வாறு இருக்க வேண்டுமானால், அவனை யாரும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு உருவம் கொண்டவனாகவும் அப்படியே சந்தேகித்தாலும் சந்தேகிக்கும் கண்களை கண்டு அஞ்சாதவனாகவும் எப்பேர்ப்பட்ட நேரத்திலும் மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லாமல் காக்கும் வலிமை உடையனவாகவும் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.
பண்டைய கால அரசாட்சிகளில் ஒற்று என்பது மிகவும் இன்றி அமையாத ஒன்று. பகை நாடு தனக்கு எதிராக சதி செய்கிறதாயினும் அல்லது பகை நாடுகளில் நிலவும் பொதுநிலவரம், அவர்களின் அப்போதைய படைபலம் ஆகியவற்றை கண்டு அறிவதாயினும், ஒற்றர்கள் மிகப் பெரும் பங்காற்றினர்.
இதனால் தான் ஒற்றர்களை ஐந்தாம் படைஎனக் கூறுவர் (யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை மற்ற நான்கு படைகள்).
இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒற்றர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர்.
இக்குறளுக்கு உதாரணமாக பொன்னியின் செல்வனில் வரும் ஆழ்வார்க்கடியான் (ர் ) நம்பி ஐ கூறலாம். ஒரு வைஷ்ணவராக, நாமமும் தடியும் கொண்டு, எவரும் சந்தேகமுறாது, சாதாரண தோற்றத்துடன் வளம் வருவதாக விவரித்து இருப்பார் கல்கி.
ஒப்புமை
”இற்றது காலமாக இலங்கையர் வேந்தன் ஏவ
ஒற்றர் வந் தளவு நோக்கிக் குரங்கென உழல்கின் றாரை” (கம்ப.ஒற்றுக்.24)
“தாயினும் பழகினாரும். தன்னிலை தெரிக்க லாகா
மாயைவல் லுருவத்தான்” (கம்ப.அணிவகுப்பு.3)
பரிமேலழகர் உரை
கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.
('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.).
மணக்குடவர் உரை
வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.
மு.வரதராசனார் உரை
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் சந்தேகப்படாத வேடத்தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.
No comments:
Post a Comment