குறள் 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல் ]
பொருள்
கைம்மாறு - மறு, பிரதி; பதிலுதவி.
வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.
வேண்டா - வேண்டாம்
ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.
கடப்பாடு - கடமை; முறைமை; கொடை; ஒப்புரவு; அதிகப்படுதல்.
மாரி - மழை; நீர்; மேகம்; மழைக்காலம்; பூராடநாள்; புள்வகை; சாவு; அம்மைநோய்; ஒருதேவதை; துர்க்கை.
மாட்டு - அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல்முடிவு கொள்ளும் முறை; அடி; சொல்.
மாரிமாட்டு -
என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.
ஆற்றுங் - ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
கொல்லோ - கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
முழுப்பொருள்
எந்த பிரதிபலன் இன்றி எல்லோருக்கும் உதவுவது கடமையாக கொண்டு பெய்யும் மழைக்கு கைம்மாறாக என்ன செய்து விட முடியும் இந்த உலகினால் , என்பதே இக்குறளின் பொருளாகும்.
ஒன்றை எதிர்பார்த்து நாம் செய்வது உதவி அன்று.எந்த பிரதி பலனையும் எதிர் பாராமல் செய்யும் உதவியே உதவி எனக் கூறுகிறார் வள்ளுவர்.
நாம் கோவில் உண்டியலில் இடும் பணம் கூட, எதையோ எதிர்ப்பார்த்து தானே? அதற்கான புண்ணியம் நம்மை வந்து அடைய வேண்டும் என்பது தானே அச்செயலின் அடிநாதம். அதன் பொருட்டு தானே நம் கையால், உண்டியலில் பணம் இட வேண்டும் என நாம் ஆசைப்படுவது. இவ்வாறு எதிர்பார்ப்புடன் செய்யும் செயலை விட, முகமறியா ஒரு ஏழைக்கு, எந்த எதிர் பார்ப்பின்றி ஆர்ப்பாட்டம் இல்லாமல் செய்யும் உதவி எவ்வளவோ சிறந்தது.
ஒப்புமை
”நம்மாட் டுதவிய நன்னர்க் கீண்டொரு
கைம்மா றாற்றுதல் என்றும் இன்மையின்” (பெருங் 4:3:11-2)
“செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தந்த செல்வத்
தயரதற் கென்ன கைம்மா றுடையம்யாம் தக்க தென்பார்’ (கம்ப.கைகேசி சூழ்வினைப் 89)
“விருந்தெவன் செய்கோ தோழி....
மலையிமைப் பதுப்போல் மின்னிச்
சிலைவ லேற்றொடு செறிந்தவிம் மழைக்கே” (நற்.112:1-9)
“ஆரிய னவனை நோக்கி யாருயிருதவி யாதும்
காரிய மில்லான் போனான் கரணையோர் கடன்மை யீதால்
பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்து மென்னார்
மாரியை நோக்கிக் கைம்மா றியற்றுமோ வைய மென்றான்” (கம்ப.நாகபாசப்.271)
இதிகாச உதாரணம் ஒன்றைக் கூற வேண்டும் எனில் கர்ணனை தவிர சிறந்த சான்று வேறு இல்லை.
தான் சாகும் தருவாயில் கூட , தான் செய்த உதவிகளினால் அடைந்த அனைத்து புண்ணியத்தை கூட தானம் செய்த பெருமை கர்ணனை சேரும்..
இக்கணத்தில் ,கர்ணனின் ஈகை பண்பிற்கு சான்றாக விளங்கும் ஒரு சிறிய கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.ஒரு முறை கண்ணன் ,பாண்டவரக்ளுக்கு நிறைய பொன்(சரியாக நினைவில்லை அது பொன்னா அல்லது வேறு ஏதோ செல்வமோ) கொடுத்து இன்று முடிவிற்குள் இது அனைத்தையும் தானம் செய்து விடுங்கள் எனக் கூறி விடுவார்.பாண்டவர்கள் சிறிது சிறிதாக எல்லோருக்கும் பிரித்து கொடுத்து கொண்டே இருப்பர் .நாள் முடியும் தருவாயில் அனைத்தையும் கொடுத்து முடிக்க முடியாமல் போய் விடும்.
கர்ணனிடம் இதே போன்று அச் செயலை கொடுக்கும் பொழுது .,அவ்வளவு தானே என்று, முதலில் எதிர்ப்படும் சாமானியன் இடம் அனைத்தையும் கொடுத்து விடுவான்.நீயே அனைவருக்கும் கொடு என்று.
அதாவது எல்லோருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த புண்ணியம் தனக்கு வந்து அடைய வேண்டும் என்று எண்ணாமல் உதவி செய்யும் மனப்பான்மையை எடுத்துக் காட்டுவதற்காக கூறப்படும் கதை அது.
பரிமேலழகர் உரை
[அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின் , ஒப்புரவு அறிதலென்றார்.மேல்,மனம் மொழி மெய்களால் தவிரத் தகுவன கூறினார், இனிச் செய்யத் தகுவனவற்றுள் எஞ்சி நின்றன கூறுகின்றாராகலின், இது தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது.)
மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.).
மணக்குடவர் உரை
ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.
No comments:
Post a Comment