Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

குறள் 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
[அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி

அன்பிற்கும் -  ஒருவர் மீது கொண்ட அன்பிற்கு

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உண்டோ -  வலிமை இருக்கிறதா ?

அடைக்கும் - அடைத்தல் சேர்த்தல்; தடுத்தல் பூட்டல்; அடைக்கப்படுதல்; மறைத்தல் சாத்துதல் சிறைவைத்தல், காவல்செய்தல்; வேலியடைத்தல்.

தாழ் - தாழ்ப்பாள்; சீப்பு; சுவர்ப்புறத்துநீண்டஉத்திரம்; தாழக்கோல், திறவுகோல்; முலைக்கச்சு; நீளம்; வணக்கம்.

அடைக்குந்தாழ் - வெளிக்காட்டாமல் அதனை அடைக்கும் தாழ்ப்பால் / கதவு

ஆர்வம் - அன்பு; விருப்பு நெஞ்சு கருதின பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம்; பக்தி ஏழுநரகத்துள்ஒன்று.

ஆர்வலர்  ஒரு குறிப்பிட்ட செயல்பாடு அல்லது விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஒரு நபர்.

ஆர்வலர் - அன்புடையவன்

புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

கணீர் - கண்ணீர்
கண்ணீர் - கண்ணிலிருந்து வழியும் நீர்.

புன்மை - மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.

புன்கணீர் - அவர்கள் கண்களில் துளிர்த்து சிந்தக்கூடிய சிறு கண்ணீர்த் துளிகளே

பூசல் -  போர்; பேரொலி; பலரறிகை; கூப்பீடு; வருத்தம்; ஒப்பனை.

தரும் - தருதல் - கொடுக்கும் 

பூசல் தரும் - உரத்துச் சொல்லிவிடும்.

முழுப்பொருள்
உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் அன்பிற்கு பிறரிடம் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாதவாரு உண்டோ அடைக்கும் தாழ்/கதவு ? என்று கேட்டு இல்லை என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் அன்புடையவர்கள் (தான் அன்பு கொண்ட) பிறர் துன்பம் படுவதை கண்டு சிந்தும் கண்ணீர் துளியே உலகிற்குப் பறைசாற்றிவிடும் அவர் அவர் மீது எவ்வளவு அன்பு கொண்டு உள்ளார் என்று. 

அதனால் தான் சான்றோன் குணங்களில் முதலாவதாக அன்பு இருக்கிறது

மேலும் 

மேலும்: அஷோக்

பரிமேலழகர் உரை
அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ-அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ; ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள் நின்ற அன்பினை எல்லாரும் அறியத் தூற்றும் ஆதலான்.

விளக்கம் 
(உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை., கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான் அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உளதோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டவிடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும்.

உம்மை சிறப்புப் பற்றியது. புன்கண் புன்கூர்ந்த கண். புன்மை துன்பம். ஆர்வலர் துன்பம் அவர் கண்ணின் மேல் ஏற்றப்பட்டது.

இனி, துன்பக்கண்ணீரன்றி நீண்டகாலத்திற்குப்பின் கண்ணன்ன கேளிரைக் காணும்போது சிந்தும் காதற்கண்ணீரும் உண்டென அறிக.

ஒப்புமை
”யாக்கைய தியல்பினும் அன்பினும் கொண்டுதன்
காட்சிக் கண்ணீர் கரந்தகத் தடக்கி” (பெருங் 1:36:147-8)

“உன்னுபே ரன்புமிக் கொழுதியொத் தொண்கணீர்
பன்னுதா ரைகள்தரத் தொழுதெழும் பரதனை” (கம்ப.எதிர்கொள் 26)

பொருள்: அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டோ - (அகத்தினின்று வெளிப்படாமல்) அடைத்து வைக்கும் (வலிய) கதவு அன்பிற்கும் உண்டோ? ஆர்வலர் புன்கண் ஈர் பூசல் தரும் -அன்பு செய்யப்பட்டாரது துன்பம் (அக் கதவை) பிளக்கும் தாக்குதலை உண்டாக்கும்.

அகலம்: அன்பு செய்யப்பட்டாரது துன்பம் அன்புடையார் அகத்தினின்று வெளிப்படாமல் அன்பை அடைத்து வைத்திருக்கும் கதவினை உடைத்து அன்பை வெளிப்படுத்திவிடும் என்றவாறு. தாழ் என்பது ஆகுபெயர், அதனை யுடைய கதவிற்கு ஆயினமையால். ஈர் என்பது வினைத்தொகை. ஆர்வம்-அன்பு செய்யப்படுந் தன்மை. பூசல்-பொருதல்‡தாக்குதல். ஆர்வம் என்னும் பண்புப்பெயர் ஈறும் ஈற்றயலும் கெட்டு, வலர் என்பதனோடு புணர்ந்து ஆர்வலர் என்றாயிற்று. வலர் - வல்லவர். ‘ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ என்பதற்குத் ‘தம்மால் அன்பு செய்யப்பட்டவரது துன்பங் கண்டுழி’ என்ற சொற்களை வருவித்து, ‘அன்புடையார் (கண் பொழிகின்ற) புல்லிய கண்ணீரே (உள் நின்ற அன்பினை எல்லாரும் அறியத்) தூற்றும்’ என்று உரைப்பாரும் உளர். அவர் ‘ஆர்வலர்’என்பதற்கு ‘அன்பு செய்யப்பட்டார்’ என்பதே பொருள் என்பதை அறியார். அன்றியும், ‘துன்பம்’ என்னும் பொருள் தரும் ‘புன்கண்’ என்ற சொல்லைப் புன், கண் எனப் பிரித்தும், அடைக்கும் தாழ் உண்டோ? என்ற வினாவிற்கு விடையில்லாதும் பொருள் உரைத்து இடர்ப்பட்டனர்.

கருத்து: அன்பு செய்யப்பட்டார் துன்ப முறுதலைக் காணப்பொறார் அன்புடையார்.

மணக்குடவர் உரை
அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.

மு.வரதராசனார் உரை
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

சாலமன் பாப்பையா உரை
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

நன்றி: MovingMoon
தன்னுயிர் ஒத்த அன்பர்
.. தவித்திடும் நிலையின் போதவ்
இன்னலைக் கண்டும் நெஞ்சம்
.. இளகிடா திருப்பர் யார்சொல்?
அன்பகம் பெருகா வண்ணம்
.. அடைத்திடும் பூட்டும் உண்டோ?
தன்னிலை மறக்கக் கண்ணீர்
.. ததும்பிடும், கதவைச் சாய்த்தே (1)

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
புகழ்பெற்ற குறள் இது. ஆனால், இதன் ஆழ்ந்த பொருளை எல்லாரும் புரிந்துகொண்டார்களா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அன்புடைமை’ அதிகாரத்தில் வரும் முதல் குறள் :

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ? ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும். 

இதன் பொருள் தெரிந்த ஒன்றுதான். அன்பை அடைத்து வைக்கும் தாழ் எங்காவது உண்டா என்ன ! அன்புக்குரியவர்களின் கண்களில் அரும்பிவிடுகின்ற துளியளவுக் கண்ணீர் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். 

என்ன புரிந்துகொண்டுள்ளோம் ? கண்ணில் கொஞ்சம் தண்ணீர் கசிந்துவிடும். அதனால் அன்பைத் தாழிட்டு அடைத்து வைக்க முடியாது. 

பெருங்கதைகளின் இறுதி வரியாக அமைந்த ஒன்று இங்கே குறளாக எழுதப்பட்டுள்ளது. 

இதை விளக்க, புகழ்பெற்ற இந்தத் திரைப்படத்தை எடுத்தாள்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். முதல் மரியாதை திரைப்படத்தை நினைவில்கொண்டு வாருங்கள்.

சுற்று வட்டாரத்திலுள்ள ஊர்கள் அனைத்திற்கும் நியாயம் கூறும் பெரிய மனிதர் அவர். ஊர் மக்களிடம் குன்றாத மதிப்புள்ளவர். அதற்கொப்ப மாண்புள்ள நடத்தையுடையவர். 

அவ்வூருக்குப் பரிசல் செலுத்திப் பிழைக்க வந்து சேர்கிறாள் அவள். சின்னஞ்சிறு பெண். குறும்பும் சூட்டிகையுமானவள். ஊர்ப் பெரியவருக்கும் அச்சிறு பெண்ணுக்கும் இடையே ஏட்டிக்குப் போட்டியான உரையாடல்களும் எங்கே முடியுமென்று கணிக்க முடியாத காட்சிகளும் தொடர்கின்றன. 

பெரியவரின் உள்ளத்தில் வெளிக்கூறமுடியாத துன்பங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ளும் பரிசல்காரி பெண்மைக்கேயுரிய பெருந்தகைமையின்படி தன்னையறியாது அவர்மீது இரங்குகிறாள். மெத்தை வாங்கியும் தூக்கத்தை வாங்க முடியாத துர்ப்பாக்கியசாலி அவர் என்று தெரிந்துகொள்கிறாள். அந்த இரக்கம் அன்பாகிக் காதலுமாகிறது. இருவேறு திறத்து ஆண் பெண்ணுக்கு இடையே முகிழ்க்கும் அன்பு காதலாவது இயற்கையின் கட்டாயமல்லவா ? அங்கே வேறுபாடுகள், தோன்றிய எண்ணத்திற்கு ஊறுபாடுகள் விளைவிக்க உதவாதவை, அல்லவா ? அவள் நிலையில் அதுவே நிகழ்கிறது. 

பெரியவர் அச்சிறுபெண்ணின் கருத்தை உணர்ந்திருந்தும் மேற்கருதாது இருக்கிறார். ஊருக்கும் உறவுகளுக்கும் தாமும் அப்பெண்ணும் நகைப்பொருளாகக் கூடாது என்பதில் உறுதி காட்டுகிறார். 

பல்வேறு களேபரங்களின்பின் பெரியவரின் குடும்பத்திற்கு விளையவிருந்த மானக்கேட்டைத் தவிர்க்கவேண்டி கொலை செய்யும் பரிசல்காரி சிறைக்குச் சென்றுவிடுகிறாள். யாவற்றையும் உணர்ந்த பெரியவர் அவளைக் காண சிறைக்குச் செல்கிறார். 

இருவருக்குமிடையே கம்பிகளுள்ள கதவு. கண்கள் பேசிக்கொள்கின்றன. அதுவரை இருவரும் தம் அன்பைச் சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் அவர்கள் நெஞ்சங்களில் அந்த அன்புதான் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது.

அவரைக் கண்டதும் அவள் கண்களில் நீர் தேங்குகிறது. அவள் கேட்கிறாள் “உன் மனசில நான் இல்லை ?”

முதல் மரியாதை பட climax @7:55 

அதற்குமேல் பெரியவரால் என்ன சொல்ல முடியும் ? எதை மறுத்து நிற்க முடியும் ? அவர் கண்களும் நீரால் நிரம்புகின்றன. “என் மனசில நீதான் இருக்கே. என் மனசில நீ மட்டும்தான் இருக்க” என்று ஒப்புக்கொள்கிறார். இருவரும் கண்ணீர் பெருக நிறைந்து நிற்கின்றார்கள் !

மறைக்கப்பட்ட அன்பு அதற்குமேல் கட்டுக்குள் நிற்க மறுக்கிறது, கண்ணீராகப் பெருகி வழிகிறது. தாழிட்டு அடைக்க முடியவில்லை. அணையுடைத்து வெளியேறி வெளிப்படுத்திவிட்டது. அங்கே சொற்கள் சிற்சிலவே. அன்பை உணர்த்தியபடி கண்களில் நீர் ஊறிக்கொண்டிருந்தது. 
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ? ஆர்வலர் 
புன்கண்ணீர் பூசல் தரும். 

ஆர்வலர் என்றால் அன்புள்ளவர்கள், அன்புற்றவர்கள் என்று பொருள். சமூக ஆர்வலர்’ என்றால் சமூகத்தின்மீது அன்புடையவர்கள். பூசல் என்றால் வெளிப்படும்படி தோன்றுவது, பலரறிய வெளிப்பட்டுவிடுவது. புன்கண்ணீர் என்றால் ‘சிறு துளியளவுக் கண்ணீர்.’ 

அன்பை யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அடைத்து வைக்கும் தாழ் என்று எதுவும் உண்டா ? அந்த அன்பினால் அன்புக்குரியவர்களின் கண்களில் தோன்றும் துளியளவுக் கண்ணீர், அவர்கள் உற்றுள்ள அன்பைப் பலரறிய வெளிப்படுத்திவிடும்.

English Meaning - As I taught a kid - Rajesh
When one has true love and affection upon others, can there by a latch to lock in and hide love? No says Thiruvalluvar. Because, Love will reveal itself through tears when a loved one is in trouble.

Questions that I ask to the kid
can there by a latch to lock in and hide love? 

2 comments:

  1. வ.உ.சிதம்பரனார் குறளுக்கு உரை எழுதியது எனக்கு தெரியாத ,,,,ஒரு உண்மையாக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. ஆம்,அய்யா, வ உ சி அவரது உரை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு திருக்குறளை கொண்டு சேர்க்க பெரிதும் துணை செய்யும்!

      Delete