Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிருந் தொழும்

குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

கொல்லான் - பிற உயிர்களைக் கொல்லாதவன்; குறிப்பாக தானோ அல்லது பிறர் இறைச்சி உண்பதற்காக பிற உயிரை கொல்லாதவன்.

புலால் - ஊன்முதலியன; புலால்நாற்றம்; தசைநரம்பு

புலாலை -> பிறர் விற்கும்  / கொடுக்கும் இறைச்சியை கூட.

மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல்.

மறுத்தானைக் -> மறுத்தவன்.
புலாலை மறுத்தானைக்  -> பிறர் கொன்று விற்கிற புலாலைக் கூட மறுப்பவன் என்பதையும் உள்ளடக்குவதற்காக திருவள்ளுவர் கொல்லான் என்று நிறுத்தாமல் புலாலை மறுத்தானைக்  என்று சேர்கிறார்.

கூப்புதல் - கைகுவித்தல்; குவித்தல்; சுருக்குதல்.
கைகூப்பி - கைகூப்புதல் - கைகூப்பிவணங்குதல்.

எல்லாம் - முழுதும்
எல்லா உயிருந் -> உலகில் வாழும் அனைத்து உயிர்களும். இங்கே மனிதனை கூறாமல் எல்லா ஜீவராசிகளையும் (விலங்குகளையும்) உள்ளடுக்குகிறார் திருவள்ளுவர்)

தொழும் - தொழுதல் - toḻu-   1 v. tr. [K. tuḷil, M.toḻuga.] To worship, adore, pay homage to;வணங்குதல். தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்(குறள், 828).  

தொழும் - வணங்க தக்கவன்

முழுப்பொருள்
பிற உயிர்ளை தானோ அல்லது பிறர் இறைச்சி உண்பதற்காக கொல்லாது, பிறர் விற்கும் / கொடுக்கும் இறைச்சியை கூட (உண்ண) மறுத்து வாழ்கின்றவனை இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களும் இருகரம் கூப்பி வணங்கதக்கவன். (வணங்கும் என்று பொருள் அல்ல). எல்லா உயிர்களும் வணங்கதக்கவர்கள் தேவர்கள் ஆதலால் இவனும் தேவர்களுக்கு இணையானவன் என்று பொருள்.

எல்லா உயிர்களும் உன்னை வணங்கதக்கவனாக இருக்க வேண்டுமா?  பிறர் உயிர்களை கொன்றோ (பிறர் கொன்றதை) பெற்றோ உண்ணாது இருந்தால் எல்லா உயிர்களும் தொழும். ஏனெனில் இவன் கொல்லாமல் இருப்பதனால் தானே நாம் உயிருடன் இருக்கிறோம் என்று நன்றியுடன் நினைந்து வணங்கும்.

எழுத்தாளர் ஜெயமோகன் கொல்லாமை பற்றி இரண்டு கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளார். அவை இதோ
1) உயிர்க்கொலை (சுட்டியை தட்டுக)
நாராயணகுருவிடம் ஒருவர் சொன்னார், குரு நாம் ஏன் செத்த பசுவைச் சாப்பிடக்கூடாது? அது செத்துவிட்டதே? அதன் பாலைக்குடிக்கிறோமே, அது பசுவின் குருதிதானே?”

குரு நியாயம்தான் என்று சொல்லிவிட்டார். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கேட்டார். ”அம்மா இருக்காங்களா?”  அவர்””போனவருஷம் போய்ட்டாங்க குரு”’ என்றார். ”தின்னுட்டீங்களா?” என்றார் குரு.

நான் என் மீது இருக்கும் கொசுவை சாதாரணமாக அடித்துக்கொல்வேன். அதேபோல ஓர் எருமையை மண்டையில் உலக்கையைப்போட்டு அடித்துக்கொல்வேனா? மாட்டேன். ஒரு நாயை கல்லால் அடிப்பதைப்பற்றிக்கூட என்னால் யோசிக்க முடியாது. எல்லாமே உயிர்தானே, கருணை என்றால் எல்லாவற்றுக்கும் தானே என்றெல்லாம் கேட்க முடியுமா என்ன?

அதாவது உயிர்கள் எல்லாம் நமக்கு ஒன்று அல்ல. அவற்றுக்குள் பேதம் உள்ளது. பெரிய உயிர் சின்ன உயிர் என உள்ளது. அரிய உயிர் எளிய உயிர் என உள்ளது . ஓர் உயிரின் நுண்ணறிவு, அதன் வாழ்நாள்… அனைத்துக்கும் மேலாக அதற்கும் நமக்குமான உறவு. அது நமக்குள் எவ்வகைப்பட்ட குறியீடாக உள்ளது என்பது. ஒரு மனிதன் நமக்கு மிக முக்கியமான உயிர். நாய் இன்னமும் குறைவான உயிர். ஓணான் இன்னும் கொஞ்சம் குறைந்தது. புழு இன்னமும் குறைந்தது.

ஆம், எல்லா உயிரும் நமக்கு ஒன்றல்ல. ஒரு நாயைக்கொன்றால் நம்மில் யாருமே இரவு தூங்க மாட்டோம். பூச்சிமருந்தடித்து ஒரேநாளில் ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொல்வோம்.இயற்கையே அந்த பேதத்துடன் தான் படைத்துள்ளது. கொசு கொல்லக்கொல்ல பெருகும். யானையை கொன்றால் அடுத்த குட்டி பிறக்க கால்நூற்றாண்டு ஆகும்.

உயிர்க்கொலை என்பது இந்த பூமியின் ஓர் இயற்கையான நிகழ்வு. அதற்கு எதிராக பண்பாடு உருவாக்கிக்கொண்ட விழுமியம்தான் கருணை என்பது. எல்லா விழுமியங்களும் ஓர் நடைமுறைத்தேவையில்  இருந்து உருவானவையே. அவை ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புகின்றன. வீரம் என்பதும் கருணை என்பதும் ஒரே சமூகத்தால் உருவாக்கப்படுகின்றன.ஒரு இடத்தில் கொலை வீரமாக கருதப்படுகிறது. இன்னொரு இடத்தில் அது பாவமாக.

அதேபோலத்தான் கருணையும்.  அது முழுமுற்றான ஒன்றல்ல. எந்த விழுமியமும் முழுமுற்றானதல்ல. அவை சார்புநிலை உடையவை. செடியை பிடுங்கி நறுக்கி உண்பது கருணைக்கு மாறானதல்ல, கொசுவைக் கொல்வது போல. ஆனால் ஆட்டை வெட்டி உண்பது கருணைக்கு மாறானது.

எளிமையான பதிலே இதுதான், கீரையை நறுக்குபவர்கள் ஆட்டைக் கொல்வார்களா? ஆடு நம் மனதில் வெறும் உயிரல்ல. அது ஒரு குறியீடாக, நெருக்கமானதாக உள்ளது. அதன் பழக்கங்கள், அவற்றின் வழியாக வெளிப்படும் அதன் மனம் நாம் அறிந்ததாக உள்ளது. கொசுவைக் கொல்லும்போது நாம் வெறுமொரு உயிரைக் கொல்கிறோம். ஆட்டைக் கொல்லும்போது ஓரு மனதையும் சேர்த்தே கொல்கிறோம். நமக்கும் ஆட்டுக்கும் இடையே உள்ள உறவைக் கொல்கிறோம். அதன் மூலம் உருவான ஒரு குறியீட்டைக் கொல்கிறோம்.

விழுமியங்கள் என்பவை சமூகக் கட்டுமானங்கள்தான். உதாரணமாக சென்ற தலைமுறையினருக்கு மரங்களை வெட்டுவதில் குற்றவுணர்ச்சியே இல்லை. ஒரு காயைப்பறிப்பதுபோல வெட்டுவார்கள். நமக்கு இப்போது குற்றவுணர்ச்சி உள்ளது. நம் தேவைக்காக ஒரு மரத்தை வெட்ட நம்மால் முடியாது. வெட்டினால் நிம்மதி இழப்போம். இந்த விழுமியம் சமீபகாலமாக, கடந்த 50 வருடங்களில், மானுடகுலத்தில் உருவாக்கப்பட்டது.

கருணை என்ற விழுமியம் மனிதர்கள் சமூகமாக உயிர்வாழ ஆரம்பித்த  காலத்தில் அவர்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம். இயற்கையை எதிர்மறைச் சக்தியாகக் காணாமலிருக்க சக உயிர்களுடன் ஒரு நல்லுறவை உருவாக்கிக்கொள்ள. அதற்கும் மேலாக சகமனிதன் மீதான வன்முறையின்மைக்கான குறியீடாக.

ஆகவே கொல்லாமை என்பதும் ஒரு முழுமுற்றான நடைமுறை அல்ல. அது ஒரு குறியீட்டு ரீதியான விழுமியமே.  கொல்லாமையை கடைப்பிடிப்பவன் நெஞ்சில் கருணை அதிகரிக்கும், சகமனிதன் மீதும் அக்கருணை உருவாகும் என்ற நம்பிக்கை. முதலில் மனிதனைக் கொல்லாதீர்கல். அடுத்து நெருக்கமான மிருகங்கலைக் கொல்லாதிருங்கள். அடுத்து சுயலாபத்துக்காக உயிர்களை கொல்லாதிருங்கள். அடுத்து நமக்கு தீங்கு அளிக்காத உயிர்களைக் கொல்லாதிருங்கந்- இவ்வாறு அந்த விழுமியம் வளர்கிறது. அதுவே அதன் இயல்பான வளர்ச்சி

அதன் அடித்தட்டில் இருந்து திருப்பிக் கேட்பது அபத்தம். செடிகளைக் கொல்கிறாயே அப்படியானால் உயிர்களை ஏன் கொல்லக்கூடாது? உயிர்களை கொல்கிறாயே ஏன் மனிதனைக்கொல்லக்கூடாது என்று தான் அது செல்லும்.

புலால் உண்ணும் வழக்கம் நாம் குரங்குகளாக இருந்தபோதே இருந்திருக்கலாம். சிம்பன்ஸிக்கள் கர்ப்பமாக இருக்கும்போது மாமிசம் உண்கின்றன. உபரியான புரோட்டீனுக்காக உண்ண ஆரம்பித்து எளிய உணவு, கனமான உணவு என்பதனால் நீண்டு சுவைக்கு அடிமையாகி இன்று வரை நீள்கிறது.

நான் அசைவம் உண்பவன் . அந்த சுவைக்காக மட்டுமே. அசைவம் உண்பவன் என்பதனால் அதை நியாயப்படுத்த மாட்டேன். அது மனிதனுக்கு இயல்பான,நல்ல உணவு அல்ல. அசாதாரண உடலுழைப்புள்ளவர்களுக்கு மலிவான புரதமாக அது இருக்கலாம். ஆனால் தேவையானதோ  தவிர்க்க முடியாததோ அல்ல.

இன்றைய உடலுழைப்பற்ற சூழலில் மாமிச உணவு கெடுதலானது. ஏன் பலசமயம் விஷம் போன்றது. ஆனால் பழகியபின் விடுவது கடினம். அதன் பின்னணியில் உள்ள கொலை என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றுதான்

அடுத்த ஐம்பது வருடங்களில் செயற்கை புரோட்டின் வந்து மாமிச உணவே இல்லாமல் ஆகிவிடலாம். நம்முடைய வாரிசுகள் ‘அடாடா மிருகங்களை கொன்று தின்ற கொடூரர்களா நம் முன்னோர்’ என எண்ணலாம். இன்று நாம் நம் முன்னோர் இழைத்த சாதிக்கொடுமைகளை அறிந்து அதிர்வது போல!

வர்த்தமானர் முதல் காந்தி,நாராயணகுரு வரை கொல்லாமையை ஏன் சொன்னார்கள் என்றால் அது கருணைக்கான பயிற்சி என்பதனால்தான். ஒன்றில் இருந்து ஒன்றாக வன்முறையை கைவிடுவதற்கான பயணம் என்பதனால்தான்.

அது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் என் நாவின் பலவீனத்தால், என் ஆளுமையின் ஆழமின்மையால், என்னுடைய சிறுமையால் நான் அசைவன்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

அந்த உயிர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்

2)  அருகர்களின் பாதை - 26 பயணக் கட்டுரையில் ஓசியான் பற்றிய குறிப்பில் கொல்லாமை பற்றி கீழே வருகிறது

ஓசியான் சமணர்களுக்கு முக்கியமான ஒரு தலம். ராஜஸ்தானின் ஓஸ்வால் இனக்குழுவின் பிறப்பிடம் இது என்று சொல்கிறார்கள். ஓஸ்வால்கள் இன்று துணி வணிகத்தில் ஓங்கியிருக்கிறார்கள். அவர்களின் ஓசியா மாதாஜி கோயில் இங்குள்ளது என்று குறித்து வைத்திருந்தேன்.

இந்தக் கோயில் ஒரு மலைமேல் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில். 12ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்டது. இங்குள்ள இரு கோயில்கள் சண்டி கி மாதா கோயில் மற்றும் அம்பா மாதா கோயில் ஆகியவை 1178இல் கட்டப்பட்டவை.

இந்த ஊர் பற்றிய ஒரு ஆர்வமூட்டும் தகவல் வாசித்தேன். இவ்வூருக்கு ஒரு காலகட்டத்தில் உப்கேஸ்பூர் என்று பெயர் இருந்தது. இங்குள்ள சாமுண்ட மாதாவுக்கு ஒரு காலகட்டத்தில் எருமைகளை பலிகொடுத்தார்கள். ஸ்ரீ ரத்ன பிரபா சூரி என்ற ஆச்சாரியார் அதை நிறுத்தினார். ஆகவே தேவி கோபம் கொண்டு ஆச்சாரியாரைக் கடும் நோவுக்கு ஆளாக்கினார். ஆனால் அந்த வலியைத் தாங்கிக் கொள்வதையே ஒரு பெரும் தவமாக ஆச்சாரியார் செய்தார்.

தேவி மனமிரங்கி ஆச்சாரியாரிடம் மன்னிப்புக் கோரினாள். ஆச்சாரியார் தேவிக்கு நல்லுரை சொன்னார். பக்தர்கள் கொடுக்கும் உயிர்ப்பலிகளின் பாவம் முழுக்க தேவிக்கே வரும் என்றும் விளைவாக அவளே நரகத்தில் உழலவேண்டியிருக்கும் என்றும் சொன்னார். தேவி அந்த நல்லுரை கேட்டு மனம் திருந்தி இனிமேல் பலி தேவையில்லை, சிவப்புநிறமான பூக்கள் கூடத் தேவையில்லை என்று முடிவெடுத்தாள். அதன் பின் ஆச்சாரியார் சாமுண்டிதேவிக்கு சாச்சி மாதா என்று பெயர் சூட்டினார்.

இந்த ஆச்சரியமான கதை நாட்டார் வழிபாட்டுமுறையை எப்படி சமணம் மாற்றியமைத்தது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாகும். இந்தியா முழுக்க இந்த மாற்றத்தை சமணம் செய்திருக்கிறது. இது ஒரு பெரிய பண்பாட்டு மாற்றம். உயிர்ப்பலி இல்லாமலாவதென்பது உண்மையில் அந்த இனக்குழுவின் அடிப்படை மனநிலையையே மாற்றியமைக்கிறது. வன்முறைநீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் உள்மோதல்கள் குறைகின்றன. அந்தச்சமூகம் பிறசமூகங்களுடன் சுமுகமான உறவுகொள்ள ஆரம்பிக்கிறது. வணிகத்திலும் பிற சமூகச்செயல்பாடுகளிலும் வெற்றி அடைய ஆரம்பிக்கிறது. தமிழகத்திலும் சாதிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் இந்த அம்சத்தைக் காணலாம்.

பரிமேலழகர் உரை
கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும். மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென் றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.

சாலமன் பாப்பையா உரை
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

பொருள்: கொல்லான் புலாலை மறுத்தானை -(ஓர் உயிரையும்) கொல்லாத வனாய்ப் புலாலை விலக்கியவனை, எல்லா உயிரும் கை கூப்பி தொழும் -எல்லா உயிர்களும் கைகளைக் குவித்து வணங்கும்.

அகலம்: கைகூப்பித் தொழுதல் மனிதர்க்கே உரியதாயினும், அதனை உபசார வழக்காக ஏனைய உயிர்களின் மேலும் ஏற்றிக் கூறினார். உயிரைக் கொல்லாமலும் புலாலைக் கொள்ளாமலும் இருக்கும் மனிதன் எல்லா உயிர்களாலும் கடவுளாகப் போற்றப்படுவன் என்ற வாறு.

கருத்து: கொலையும் புலையும் நீத்தோன் கடவுளை ஒப்பன்.

-----------------------------------------------------------------------------------
 இவ்வதிக்காரத்தின் குறள் கருத்துக்களின் வலிமையைக் காரணங்காட்டி, வள்ளுவரை சமண மதத்தினராகச் சொல்வோருண்டு.

இவ்வதிகாரத்தின் நிறைவுக் குறளான இக்குறளில், புலால் மறுத்தல், மற்றும் புலால் உண்டாகக் காரணமான செயலைச் செய்யாமை இவ்விரண்டின் உயர்வையும் சொல்லி, அவர்களை உலகின் உயிர்களெல்லாம் எவ்வாறு வாழ்த்தும் என்று சொல்லி நிறைவு செய்கிறார்.

சாதி குலம் முதலியவற்றை எந்த நிலையில் உணர்ந்து வைத்து ஒழுகல் வேண்டுமோ அவ்வளவில் நிறுத்தல் வேண்டும். அவை அபிமானத்துக்கு இடமாகி இறுமாப்பினையும் அகங்காரத்தினையும் வளர்க்கும் கருவிகளாகும்படி பீடித்தல் கூடாது என்பதை

"சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்,
ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு,
பேதைகுணம், பிறர்உருவம், யான் எனது என் உரைமாய்த்து,
கோது இல் அருது ஆனானைக் குலாவு தில்லைக் கண்டேனே"

என்ற திருவாசகம் (கண்டபத்து) வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம்.

புலால் உண்ணும் குலத்தில் பிறந்தவர்களானாலும், அவர்கள் புலால் உண்ணுதல் என்னும் தீ நெறியாகிய வெம்மை நெறியை விடுத்து, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தண்மை உடையவராய் இருந்தால், அவர்களை எல்லா உயிர்களும், எக்காலத்தும் கைகூப்பி வணங்கும் என்பது பலவேறு புராணங்களில் கண்ட வரலாறு.

பெரியபுராணத்தில் வரும் நாயன்மார்களில் ஒருவரான, நந்தனார் என வழங்கும் திருநாளைப் போவார் நாயனார் பற்றித் திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பிகள் கூறுமாறு காண்க.

"நாவார் புகழ்த்தில்லை அம்பலத்தான் அருள் பெற்று,நாளைப்
போவான் ஆவனாம் புறத்திருத் தொண்டன்தன்                                                                  புன்புலைபோய்,
மூவாயிரவர் கை கூப்ப முனி ஆயவன் பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர் இம்மண்டலத்தே".

இதன் பொழிப்புரை ---

பெரியோர்களால் வாயாரத் துதிக்கப்பட்ட புகழினை உடைய
தில்லையம்பலவாணருடைய திருவருளைப் பெற்றுத், தில்லைக்கு "நாளைப்போவார்" என்ற பெயர் பெறும், புறத்திருத் தொண்டராய்த் தமது புன்மையுடைய புலைப்பிறவி போய் நீங்கி, தில்லை மூவாயிரவரும் கைகுவித்துத் தொழும்படி முனியாகியவருடைய பதி, மரங்கள் நெருங்கிய பொழில்கள் சூழ்ந்த ஆதனூர் என்று இந்நிலவுலகத்து எடுத்துச் சொல்லுவர்.

நாளைப் போவார் நாயனார் தனது புன்மையான புலைத்தன்மை உடைய பிறவி நீங்கி, தில்லைவாழ் மூவாயிரவரும் ஒணங்கும் தன்மை பெற்ற முனிவராகத் தில்லை அம்பலவாணப் பெருமானின் திருவருள் பெற்றுத் திகழ்ந்தார்.

ஆதனூரில் தில்லை நினைவு வந்த காலம் முதல் தமது குலத்தை நினைந்து, தில்லையினுள் செல்வது தமக்குக் கூடாது என்று அஞ்சி நின்றவர் நந்தனாரே ஆவர். இறைவன் பக்கத்தே அணுகவிடாது. நந்தனாரைத் தடுத்தாரும் இல்லை.  பக்கத்தே வந்து தீண்டி ஊன் அமுதூட்டும்படி கண்ணப்ப நாயனாரை விடுத்தாரும் இல்லை.

கண்ணப்ப நாயனாரையும், திருக்குறிப்புத் தொண்டரையும் கையால் பற்றித் தம்மிடத்தில் வைத்த இறைவர், நந்தனாரை மெய்திகழ் வெண்ணூலும் வேணிமுடியும் கொண்ட மறைமுனிவராக்கி அருகு வரவழைத்தார் இறைவர். மறைமுனிவர் ஆனால் அன்றோ அருகு செல்ல இயலும் என்று எண்ணிப் பயந்து கொண்டொழுகிய நந்தனாரின் மனநிலையும் ஒழுக்கமுமே இதற்குக் காரணம்.

பினவரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க....

நாளைப்போ வேன்என்று
     நாள்கள் செலத் தரியாது
பூளைப்பூ ஆம்பிறவிப்
     பிணிப்பு ஒழியப் போவாராய்ப்
பாளைப்பூங் கமுகு உடுத்த
     பழம்பதியில் நின்றும்போய்
வாளைப்போத்து எழும்பழனம்
     சூழ்தில்லை மருங்கு அணைவார்.

இதன் பொழிப்புரை ---

இவ்வாறு `நாளைப் போவேன்` என்று நாளும் நந்தனார் சொல்லிவர நாள்களும் கழிதலால், பூளைப் பூப்போன்ற நிலையாத இப்பிறவிச் சூழல் ஒழியப்போதற்கு ஒருப்படுவாராய், பூம் பாளைகள் நிறைந்த கமுக மரங்கள் செறிந்த சோலைகளை உடைய ஆதனூரினின்றும் புறப்பட்டு, வாளைமீன்கள் துள்ளி எழுந்து பாய்வதற்கு ஏற்ற நல்ல நீர்வளமுடைய வயல் சூழ்ந்த தில்லையின் பக்கத்தினை அணைவாராய்.

பூளைப்பூ --- இது மிக மென்மையானது; எந்நேரத்திலும் அழிதற்குரியது. அதனால் இதனைப் பிறவிக்கு ஒப்பிட்டார்,

        
செல்கின்ற போழ்து அந்தத்
     திருஎல்லை பணிந்துஎழுந்து
பல்குஞ்செந் தீவளர்த்த
         பயில்வேள்வி எழும்புகையும்
மல்குபெருங் கிடைஓதும்
         மடங்கள்நெருங் கினவுங்கண்டு
அல்கும்தம் குலம்நினைந்தே
         அஞ்சி அணைந்து இலர்நின்றார்.

இதன் பொழிப்புரை ---

நந்தனார் தாம் செல்கின்ற போது, அத்திருத் தில்லையின் எல்லையினை வணங்கி எழுந்து நின்று, அங்குப் பெருக எழும் செந்தீயை வளர்த்திடும் வேள்விச் சாலையில் எழுகின்ற ஓமப் புகையையும் பெருகும் ஓசையையுடைய நான்மறைகளும் ஓதப் பெறும் மடங்கள் நெருங்கி இருப்பனவற்றையும் கண்ணுற்று, அத்தகைய புண்ணிய விளைவு மிகும் தூய இடத்திற்குச் செல்வதற்குத் தமது குறைவுடைய குலத்தின் தகைமையை எண்ணிப் பயந்து, அங்கு மேலும் உட்செலாது புற எல்லையில் நின்றார்.


நின்றவர்அங்கு எய்த அரிய
         பெருமையினை நினைப்பார், முன்
சென்று, இவையும் கடந்து, ஊர்சூழ்
         எயில் திருவாயிலைப் புக்கால்
குன்று அனைய மாளிகைகள்
         தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு
         உள என்பார் ஆகுதிகள்.

இதன் பொழிப்புரை ---

இவ்வாறு அங்கு நின்ற நந்தனார் அங்குத்தாம் சென்று அடைதற்கு அரிய பெருமைகளை நினைப்பாராய், முன்சென்று எல்லையைக் கடந்து, தில்லையைச் சூழ்ந்து இருக்கும் மதிலின் திருவாயிலில் புகுந்தால், அப்பால் அங்கு மலை போன்ற பெரிய மாளிகைகள் தோறும் நிலவி இருக்கும் வேள்விச் சாலைகள் மூவாயிரம் அங்கு இருக்கும் எனச் சொல்வார்கள்.

இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்றுஅஞ்சி
அப்பதியின் மதில்புறத்தின் ஆராத பெருங்காதல்
ஒப்புஅரிதாய் வளர்ந்து ஓங்க உள்உருகிக் கைதொழுதே
செப்புஅரிய திருஎல்லை வலங்கொண்டு செல்கின்றார்.

இதன் பொழிப்புரை ---

இந்நிலையில், `எனக்கு இவ்வெல்லையினின்றும் உட்போதல் அரிது` என்று மிகவும் அஞ்சி, அம்மதிலின் புறத்தே பெருமானின் திருவடிகளில் ஆராத பெருவிருப்பாய், அன்பு தனக்கு வேறு ஒப்பரிதாய் வளர்ந்து ஓங்கிட உள்ளம் உருகி, அங்கு நின்றவாறே கை தொழுது, சொலற்கரிய பெருமை வாய்ந்த தில்லைப் பதியின் திருஎல்லையைப் பலகாலும் வலங்கொண்டு வந்தார்.


இவ்வண்ணம் இரவுபகல்
         வலஞ்செய்து, அங்குஎய்த அரிய
அவ்வண்ணம் நினைந்து அழிந்த
         அடித்தொண்டர், அயர்வுஎய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
         மன்றில்நடம் கும்பிடுவது
எவ்வண்ணம்? எனநினைந்தே
                  ஏசறவி னொடும் துயில்வார்.

இதன் பொழிப்புரை ---

இவ்வண்ணமாக இரவும் பகலும் வலம் செய்து, அங்குத்தாம் தமது குலத்தின் தன்மையால் உட்போதற்கு அரிய தன்மையை நினைந்து மனம் அழிந்த நிலையில், நந்தனார் உள்ளம் அயர்ச்சி கொண்டு, மையின் கருமை நிறமுடைய கண்டத்துச் செல்வனின் திருக்கூத்தை எவ்வாறு கும்பிடுவதென்று நினைந்தவாறே வருந்தித் துயில்வாராக,


இன்னல்தரும் இழிபிறவி இதுதடை என்றே துயில்வார்,
அந்நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி,
மன்னுதிருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு
முன்அணைந்து கனவின்கண் முறுவலொடும் அருள்செய்வார்.

இதன் பொழிப்புரை ---

துன்பத்தைத் தருகின்ற இழிந்த இப்பிறவி தடையாயுள்ளதை உட்கொண்டவாறே அன்றிரவு துயில் கொள்ளும் நந்தனாரின் நிலையினை, அம்பலத்துள் நிறைந்து ஆடுகின்ற பெருமானார் அறிந்தருளி, சீர்மை வாய்ந்த அத்திருத்தொண்டரின் வருத்தங்கள் யாவற்றையும் தாம் தீர்த்திடற்கு, அவர் கனவின்கண் சென்று புன்முறுவலுடன் அவருக்கு அருளிச் செய்வாராகி.

இப்பிறவி போய்நீங்க எரியின்இடை நீ மூழ்கி,
முப்புரிநூல் மார்பருடன் முன்அணைவாய் எனமொழிந்து,
அப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரிஅமைக்க
மெய்ப்பொருள் ஆனார்அருளி, அம்பலத்தே மேவினார்.

இதன் பொழிப்புரை ---

`இப்பிறவி நீங்கிட நெருப்பிடத்தே நீ முழ்கி எழுந்து, பின்பு முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய தில்லைவாழ் அந்தணருடன் என்முன்பு வந்திடுவாய்` என மொழிந்தருளி, அத்தன்மையாகவே தில்லைவாழ் அந்தணர்க்கும் அன்று இரவின்கண் அவர்கள் கனவில் `நந்தனார்க்கு நெருப்பு அமைத்துக் கொடுத்திடுக` என மெய்ப்பொருளாகிய சிவபெருமானும் அருள்புரிந்து தில்லையம்பலத்துள் மேவினார்.


தம்பெருமான் பணிகேட்ட தவமறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயில் முன்பு அச்சமுடன் ஈண்டி,
எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம் என்று ஏத்தித்
தம்பரிவு பெருகவரும் திருத்தொண்டர் பால் சார்ந்தார்.

இதன் பொழிப்புரை ---

கனவின்கண் தம் பெருமான் தமக்கு இட்ட பணியினைக் கேட்ட தவமறையோர்களான தில்லைவாழ் அந்தணர்கள், பெருமானின் திருவாயில்முன் அச்சத்துடன் அணைந்து, `எம் பெருமான் நமக்கு அருள் செய்தவாறு நாம் செய்வோம்` என்று பெருமானைப் போற்றித், தம் ஈசன்பால் அன்பு பெருகிட வருகின்ற திருத்தொண்டராய நந்தனாரிடத்து வந்துற்றார்கள்.


"ஐயரே! அம்பலவர் அருளால்இப் பொழுது அணைந்தோம்,
வெய்யஅழல் அமைத்து உமக்குத் தரவேண்டி" எனவிளம்ப
நையும் மனத் திருத்தொண்டர் "நான் உய்ந்தேன்"                                                    எனத் தொழுதார்
தெய்வமறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார்.

இதன் பொழிப்புரை ---

`ஐயரே! நாங்கள் அம்பலவர் அருளால், கொடிய தழலாய நெருப்பினை உமக்கு அமைத்துத் தருதற்காக இங்கு வந்துள்ளோம் என்று கூறுதலும், அதுகேட்டு, நைந்துருகும் மனமுடைய திருத்தொண்டராய நந்தனாரும், `நான் உய்ந்தேன்` எனத் தொழுதார். அதுபொழுது தெய்வமறையின் நெறிநிற்கும் தில்லைவாழ் அந்தணர்களும் தாங்கள் நெருப்பமைத்த தன்மையைச் சொன்னார்கள்.


மறையவர்கள் மொழிந்ததன் பின்,
         தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில்
         முன் ஆக, பிஞ்ஞகர்தம்
நிறை அருளால், மறையவர்கள்
         நெருப்பு அமைத்த குழி எய்தி,
இறையவர்தாள் மனம் கொண்டே
         எரிசூழ வலம் கொண்டார்.

இதன் பொழிப்புரை ---

தில்லைவாழ் அந்தணர்கள் நெருப்பமைத் தமையை மொழிந்ததும், தென்திசை மதிலின் புறத்தில் பிறை வந்து உராயுமாறு உயர்ந்த திருவாயில் முன்னாகத், தில்லைப் பெருமான் திருவருளின் நிறைவால், அத் தில்லைவாழ் அந்தணர்கள் நெருப்பு அமைத்த தீக்குழியை நந்தனார் வந்தடைந்து, எம்பெருமான் திருவடிகளை மனத்தில் எண்ணிக்கொண்டு எரியைச் சூழ்ந்து வலமாக வந்தருளி.


கைதொழுது நடம் ஆடும்
     கழல் உன்னி அழல்புக்கார்,
எய்திய அப் பொழுதின்கண்,
      எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவு ஒழித்து,
     புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் நூல்விளங்க
     வேணிமுடி கொண்டு எழுந்தார்.

இதன் பொழிப்புரை ---

கைகளைக் கூப்பித் தொழுது கூத்தியற்றும் சேவடிகளை மனத்தில் நினைந்து, அந்நெருப்பினுள் புகுந்தார். புகுந்த அப்பொழுதின்கண், அந்நெருப்பிடத்து மாயையின் விளைவாய பொய்ம்மை நிரம்பிய ஊன் உடம்பை நீக்கிப் புண்ணியம் நிறைந்த பெருமுனிவரின் வடிவாகி, திருமேனியில் திகழ்கின்ற வெண்ணூல் விளங்கிட, சடைமுடி கொண்ட ஒரு தவமுனிவராக மேலே எழுந்தார்.


செந்தீமேல் எழும்பொழுது
         செம்மலர்மேல் வந்து எழுந்த
அந்தணன்போல் தோன்றினார்,
         அந்தர துந்துபி நாதம்
வந்து எழுந்தது, உயர்விசும்பில்
         வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின்
         பனிமலர் மாரிகள் பொழிந்தார்.

இதன் பொழிப்புரை ---

சிவந்த நிறமுடைய நெருப்பினின்றும் எழும் போது, செந்தாமரை மலர்மேல் இருக்கும் நான்முகனைப் போன்ற அழகிய வனப்புடன் தோன்றினார். அது பொழுது வானினின்றும் துந்துபிகளின் முழக்கம் எழுந்தது. உயர்ந்த வானிடத்தே தேவர்கள் கண்டு மகிழ்ந்து ஆர்த்து, பசிய மகரந்தப் பொடி பரக்கும் இதழுடைய மந்தார மரத்தின் மலர்ந்த பூக்களின் மழையினைச் சொரிந்தனர்.


திருவுடைய தில்லைவாழ்
     அந்தணர்கள் கைதொழுதார்,
பரவுஅரிய தொண்டர்களும்
     பணிந்துமனம் களிபயின்றார்,
அருமறைசூழ் திருமன்றில்
     ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப்
     போவாராம் மறைமுனிவர்.

இதன் பொழிப்புரை ---

திருவுடைய தில்லைவாழ் அந்தணர்களும் கண்டு கைகூப்பித் தொழுதார்கள். போற்றற்கரிய சிறப்புடைய அடியார்களும் பணிந்து, தங்கள் மனத்தில் பெருமகிழ்ச்சி கொண்டனர். இப்பால் அரிய மறைகள் சூழ்கின்ற திருவுடைய அம்பலத்தே ஆடுகின்ற சேவடிகளை வணங்குதற்குத் திருநாளைப் போவாராம் மறைமுனிவர் வந்து கொண்டிருக்க.

"ஐயர்" என்பது பெருமையுடையார் என்ற பொருளில் வரும்
வழக்கு. அன்றிச் சாதிப்பெயர் பற்றி வருதல் முன்னாள் வழக்கமல்ல. பெருமை காரணமாய் அன்றி இடுகுறியளவில் சாதிப்பெயராய் வழங்குதல் பிற்கால வழக்காகி விட்டது.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் நாயானார், பாணர் குலத்திலே அவதரித்தவர். அவர் செந்நெறியில் நின்று ஒழுகியதால், திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு தொழுது, அவரோடு இருக்கவேண்டும் என்று எண்ணி வந்தார். அவரை அன்போடு வரவேற்றார் ஆளுடையபிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தப் பெருமானார். தமது திருவாக்கினாலே திருநீலகண்ட யாழ்ப்பாணரை "ஐயர்! நீர் உளமகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம்" "ஐயர்! நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு செய்தவாறு", "ஐயர்! நீர் யாழிதனை முறிக்குமதென்" என்றெல்லாம் அருளியது எண்ணிப் பார்த்தால் சாதியை வைத்துத் தமிழர்கள் தீண்டாமையை அக் காலத்தில் வளர்க்கவில்லை என்பதும், அது பின்னாளில் சாதியை வைத்து, உயுர்வு தாழ்வு கற்பித்த அறிவிலிகளால் உண்டான தீ வழக்கம் என்பதும் தெரியவரும்.

இது மட்டுமல்ல. திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்ற அடியவர்களும் சூழ, திருஞானசம்பந்தர் திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய போது, அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கனார் திருநீலநக்க நாயானார். இவர் அந்தணர் குலத்தில் பிறந்தவர். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக்க திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்று இரவில் ஞானசம்பந்தர் தம் மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும், பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ் அந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகையருகில் பள்ளிகொண்டார். (நாயன்மார் காலத்தில் சாதி வேற்றுமையும் தீண்டாமையும் உண்டு. அக் கொடுமைகளை ஒழிக்கவே, இறையருளால் நாயன்மார்கள் தோன்றினார்கள் என்பது உணரத்தக்கது.)

நந்தனார் என வழங்கும் திருநாளைப் போவாரையும், திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், அறுப்பது மூவரில் வைத்து திருக்கோயில்களில் படிமம் உள்ளது. இன்றும் சைவப் பெருமக்கள் வணங்கி வருவது காணலாம். இவர்கள் அவதாரத் திருநாளைக் குருபூசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வார் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.

இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக் கிரமத்தில் தீண்டாக் குலம் ஆனது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும், அம் மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி, காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார். காவிரியிலிருந்து தண்ணீர் குடத்தோடு அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் எனும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரை பலமுறை அழைத்தும் செவிமடுக்காததால், பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். அக்கல் அவரின் தலையில்பட்டு குருதி பெருக, அதைக் கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் பக்தியையும் உயர்வையும் உணர்த்த விரும்பிய இறைவன், இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சிக் கொடுத்ததோடு, சாரங்கரை, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தன் திருமுன் நிறுத்தும்படியும் ஆணையிட அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு பாணருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.

வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபில் ஒப்பற்றவாரக விளங்கிய வள்ளல்பெருமான், ஜீவகாருண்ணியமும், ஆன்மநேயமுமே சிறந்து விளங்கி, மனிதர்கள் யாவரும் ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்களாய் விளங்கவேண்டும் என்று விழைந்தவர். உயிர்கள் மட்டுமல்ல, பயிர்கள் படும் துன்பத்தையும் காணச் சகியாதவராய் இருந்த இருந்தவர். "என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்" என்று முழங்கி, உயிர்கள் எல்லாம் அன்பின் வழிநின்று மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்று சன்மார்க்கம் என்னும் பெருவழியே உலகுக்குக் காட்டியவர்.

‘‘கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்; புலால் உண்ணக் கூடாது; எந்த உயிரையும் கொல்லக் கூடாது; சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது; இறந்தவர்களை எரிக்கக் கூடாது; சமாதி வைத்தல் வேண்டும்; எதிலும் பொது நோக்கம் வேண்டும்; பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; சிறு தெய்வ வழிபாடு, அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது; உயிர்களை துன்புறுத்தக்கூடாது; மதவெறி கூடாதது" ஆகிய கொள்கைகளை வலியுறுத்திய வள்ளல்.

"வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம்
     வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த
     வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்,
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
     நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்,
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
     இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்"

"கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த
     கடும்துயர் அச்சம் ஆதிகளை,
தருணநின் அருளால் தவிர்த்து, அவர்க்கு இன்பம்
     தரவும், வன்புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
     உஞற்றவும், அம்பலம் தனிலே
மருவிய புகழை வழுத்தவும், நின்னை
     வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்"

"புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில்
     புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்,
என்பொலா மணியே! எண்ணி நான் எண்ணி
     ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்,
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
     மயங்கி, உள்நடுங்கி, ஆற்றாமல்
என்பு எலாம் கருக இளைத்தனன், அந்த
     இளைப்பையும், ஐய! நீ அறிவாய்"

என்று பலவாறாக அப் பெருமானார் பாடி அருளிய திருவருட்பாப் பாடல்களை இன்றும் ஓதி உருகி வழிபடாதார் ஒருவரும் இல்லை.

"கைகூப்பி எல்லா உயிரும் தொழும்" என்று நாயானார் காட்டியபடியே, இப் பெருமானார்களை உலகமக்கள் கைகூப்பித் தொழுகின்றனர்.

English Meaning - As I taught a kid - Rajesh
People who do not kill and who do not eat meat would be worshipped by all the living organisms in the world. 

Questions that I ask to the kid
Whom does the living organism in the world worship?

No comments:

Post a Comment