Saturday, September 26, 2020

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது


குறள் 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் 
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்

இரவார் - தாம் யாரிடமும் யாசிக்க வேண்டாதவர்

இரப்பார்க்கு - தம்மிடம் கையேந்துவார்க்கு

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஈவர்- ஈவு - கொடை; நன்கொடைப்பொருள்; பங்கிடுகை; பிரித்துக்கண்டபேறு; ஒழிகை.

கரவு- மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை

கரவாது - வஞ்சனை செய்யாது; களவு செய்யாது; பொய் சொல்லாது

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு.

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

மாலையவர் - இயல்பினர், குணத்தினர்.

முழுப்பொருள்

உழவர்களின் சிறப்புகள் என்ன?
1. பிறரிடம் யாசிக்க மாட்டார்கள். தங்கள் உழைப்பில் வரும் வருமானத்திற்குள் வாழ்பவர்கள். வருமானத்திற்குள் எளிமையாக வாழ கற்றுக்கொண்டவர்கள்.

2. தன்னிடம் யாசிப்பவர்களுக்கு தன்னால் இயன்றவற்றை கொடுத்து உதவும் நற்பண்பையும் மனதையும் கொண்டவர்கள் உழவர்கள். அது அவர்கள் விளைவிக்கும் உணவுப்பொருட்களில் இருந்துப்பெற்ற தன்மை என்றுக்கூட கொள்ளலாம். [ஏனெனில் சமீபத்தில் விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வந்த ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் கூறினார், கைகாசைப்போட்டு உதவி செய்வதற்கும் விளைந்ததை எடுத்துக்கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விவசாயி அவன் வயலில் விளைந்ததை மனதார எடுத்து தருவான். அதனால் அவன் செல்வம் குறைந்ததாகவோ அல்லது செலவு செய்ததாகவோ எண்ண மாட்டான். அவனுக்கு அது பாரமாகவும் இருக்காது].

தன்னிடம் உதவி என்று யாசிப்பவர்க்கு மட்டுமல்ல. தன்னிடம் உணவுப்பொருட்களுக்கென இவ்வுலகமே உழவர்களிடம் தான் யாசிக்கிறது. இவ்வுலக மக்களுக்கே உணவு கொடுத்து மகிழ்பவர்கள் உழவர்கள்.

3. பிறரிடம் வஞ்சனை செய்யமட்டான். பிறர் பொருட்களை களவு செய்யமட்டான்.

4. தன் கையினால் உழவு செய்து கதிர் விளைவித்து உண்ணுவான்

மேற்சொன்னவற்றை தங்களுடைய இயல்பாக கொண்டவர்கள் உழவர்கள்.

கைவினை கரவேல் என்று ஆத்திச் சூடியும், இரப்போர்க்குக் கரப்பிலார் என்று சம்பந்தர்.புகலி(8) தேவாரமும் அத்தகைய கொடையுள்ளத்தினரையே கூறுகின்றன.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.).

மணக்குடவர் உரை
பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.

மு.வரதராசனார் உரை
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

சாலமன் பாப்பையா உரை
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்


குறள் 1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
இடுக்கண் -  மலர்ந்தநோக்கமின்றிமையல்நோக்கம்படவரும்இரக்கம்; துன்பம் வறுமை

கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

கொன்றிட - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

அடுத்து -  அடுத்தல் - கிட்டல்; சேர்தல் மேன்மேல்வருதல்; சார்தல் ஏற்றதாதல்; அடைதல் பொருத்தல்.

ஊன்றும் - ஊன்றுதல் - நிலைபெறுதல்; சென்றுதங்குதல்; நடுதல்; நிலைநிறுத்துதல்; பற்றுதல்; தீண்டுதல்; தாங்குதல்; முடிவுசெய்தல்; அமுக்குதல்; தள்ளுதல்; உறுத்துதல்; குத்துதல்;

நல் - நல்ல, மிகுந்த

ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன் காலாள் கணவன் தொண்டன் ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம் அரசு தொட்டால்வாடி பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி.

இலாத - இல்லாத

குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.
.

முழுப்பொருள்
துன்பங்கள் வரும் பொழுது அவற்றை முட்டுக்கொடுத்துத் தாங்கும் நல்ல குடும்பத்தலைவர்கள் நல்ல பிள்ளைகள் இல்லாத ஒரு குடும்பம் வீழும். அது எப்படிப் பட்டது தெரியுமா ?? எவ்வளவு பெரிய அல்லது சிறிய மரமானாலும் அதன் அடியில் கோடாரிக்கொண்டு வெட்டினால் சாய்ந்து வீழ்வதுப்போலாகும்.

ஆதலால் வாழ்வாதாரங்களானது முறிபடும்போது, ஊன்றுகோலெனத் தாங்கிப்பிடிக்க ஒருவர் வேண்டும். குடியைத்தாங்கி வழி நடத்த உயர்த்திப்பிடிக்க மனஉறுதியும் திறமையும் செயலின்கண் கவனமும் ஒருவருக்கு வேண்டும். 

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”இவனே
முழுமுதல் தொலைந்து கோளி யாலத்துக்
கொழிநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாயந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ” (புறநா 58:5)

“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைக்கண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்” (நாலடி 197)


பரிமேலழகர் உரை
இடுக்கண்கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய மரம். (முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார், 'தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன ஓங்குகுலம் நைய அதனுட் பிறந்த வீரர் தாங்கல் கடன்' (சீவக.காந்தருவ-6) என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுதலானே வீழும்: பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல்போலத் தாங்கவல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம்.  (நவியம்-கோடரி). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று.

மு.வரதராசனார் உரை
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

 

குறள் 1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

செய்வார்க்கு - செய்பவர்க்கு 
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

பருவம் - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.

மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு.

செய்து செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

கருத - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.
கெடும் - கெடும்; கேடும் விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை
.
முழுப்பொருள்
குடும்ப பாரத்தை தாங்கி குடும்பத்தை உயர்த்தும் குடும்பதலைவர்களுக்கு காலம் வயது என ஏதுமில்லை. அதாவது இக்குடும்பதலைவன் இளைஞன் என்பதனால் பொறுப்பு துறப்போ தாமதமோ இல்லை. அல்லது இவன் சற்று பெரிதானவுடன் பக்குவமும் அனுபவமும் வந்த உடன் குடும்ப பொறுப்பை எடுத்துக்கொள்ளலாம் என்றில்லை. அவன் முன் அப்பொறுப்பு இருந்தால் அவன் எடுத்து அதனை செய்யவேண்டும். 

ஆதலால் தம் குடியை மேன்மையுறச் செய்யும் செயல்களில் முனைப்புடன் ஈடுபடுவோர்க்கு, இதுதான் உற்ற காலமென்று ஒன்றுமில்லை. நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை என்ற சொலவடை நலிவுற்றவர்களை உயர்த்துபவர்களுக்கும் பொருந்தும். அவ்வாறு குடும்ப பொறுப்புகளை செய்யாமல்  வயதையும் அனுபவத்தையும் காரணம்காட்டி சோம்பித்திரிந்தாலோ அல்லது தனது வீண்பெருமைகளையும் புகழையும் தகுதியையும் காரணம் காட்டி தட்டிக்கழித்தாலோ அவனுக்கும் அக்குடும்பத்திற்கும் கேடு உண்டாகும். வழிதவறிப்போவான் குடும்பமும் வழிதவறிப்போகும். 

ஆதலால் தன்முன் ஒரு குடும்ப பொறுப்போ செயலோ இருந்தால் வயதுக்கு மீறிய செயல் அல்லது அனுபவம் வந்தப்பின்பு செய்கிறேன் அல்லது என் தகுதிக்கு ஏற்ற செயல் என்றெல்லாம் சாக்கு சொல்லாமல் அச்செயலை செய்து முடித்தால் குடும்பம் முன்னேறும் இல்லையேல் குடும்பம் வீணாய் போகும். அது அவனுக்கும் தீங்கு விளைவிக்கும். புகழும் கெடும்.

மேலும், ஒரு குடியை செய்வார் வீட்டில் மூத்தவராக த்தான் இருக்கவேண்டும் என்றில்லை. இளையவர்களும் பொறுப்பு எடுத்து செய்யலாம். வயதோ வரிசையோ ஒரு பொருட்டல்ல. அதேப்போல் ஒரு அலுவகத்தில் மேலாளரோ அல்லது குழுத் தலைவர் தான் ஒரு செயலை செய்யவேண்டும் என்றில்லை. குழுவில் உள்ள யார் வேண்டுமானாலும் பொறுப்பு எடுத்துச் செய்யலாம்.  இது எனது வேலை இல்லை என்று தலைமைப்பண்பு உள்ளவர் கூறமாட்டார். பதவி இருந்தால் தான் வேலை செய்வேன் என்றில்லை. ஒரு தலைவன் என்பவன் பொறுப்புகளை துறக்க மாட்டான். 

Ownership: Leaders are owners. They think long term and don’t sacrifice long-term value for short-term results. They act on behalf of the entire company, beyond just their own team. They never say “that’s not my job." என்பது Amazon நிர்வாகத்தில்  கடைநிலை ஊழியர் முதற்கொண்டு எல்லா ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தலைமைப் பண்பு.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச்செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்துகொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை - ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை. (காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர்ச் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ? என்று உட்கோடல். மேல் 'இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது' (குறள்-481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.).

மணக்குடவர் உரை
குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தம் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான். இது குடிசெய்வார் இன்பநுகர்ச்சியை விரும்பாரென்றது.

மு.வரதராசனார் உரை
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who wants to lift his family, community, nation does not have a best time. i.e., he doesn't have something like a best time or opportune time to start his work or do his work. He doesn't have time to mature, age, learn and do his work. He has to take the responsibility working right from day 1 . A person with ownership or responsibility to raise a family, community, nation cannot be lethargic or live his laurels. If one is lethargic or living in laurels then everything will deteriorate and destroy. When a responsible goes the wrong way even his family would go in the wrong way and get lost.

Hence, when one's family or community responsibility is bestowed upon him, one should not excuse that it is beyond his age or his experience. 

Questions that I ask to the kid
Do family head, community leader, national leader have best time to start or to do work? Why?

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

 

குறள் 1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

வன்கண்ணர் -  வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை

போல - ஓர்உவமவுருபு

தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

தமரகம் - மூச்சுக்குழல்; உடுக்கை.

தமரகத்தும் -  – தமது குடியையும்

ஆற்றுவார் - தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள்
ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்
ஆற்றல் -  சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

முழுப்பொருள்
தன்னுடைய நாட்டை காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு போர்க்களத்தில் சண்டையிடும் வீரத்தன்மை உயிருக்கு அஞ்சாத வீரரிடம் மட்டுமே உண்டு. அதுப்போல தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய உறவினர்களை உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான செயல்களை ஆற்றுபவரிடமே குடும்ப பாரம் வந்து சேரும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

குடும்பத்தை உயர்த்துவது என்பது ஒரு தலைமைப்பண்பே. அது தமிழ் (மற்றும் இந்திய) கலாச்சாரங்களில் வேரூண்றி உள்ளது. ஏன் குருவி தலைமீது பனங்காயை சுமத்துகிறார்கள் என்று சலித்துக்கொள்ள வேண்டாம். எண்ணமும் செயலும் வலிமையும் இருப்பதால் தான் உறவினர்கள் குடும்பத்தலைவரிடம் வருகிறார்கள். 

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.

மு.வரதராசனார் உரை
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

சாலமன் பாப்பையா உரை
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

Friday, September 25, 2020

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை


குறள் 1020
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு

இல்லார் - இல்லாதவர்

இயக்கம் - இயங்குகை; குறிப்பு வழி இசைப்பாட்டுவகை; சுருதி பெருமை மலசலங்கள்; வடதிசை கிளர்ச்சி பரப்புகை.

மரப்பாவை - மரப்பொம்மை, சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை.

நாணால் - நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

மருட்டி - மயக்கந்தருவது; கள்; மயங்கும்படிமினுக்குபவள்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

மருட்டியற்று - மயக்குவது போலாம்

முழுப்பொருள்
அகத்திலே (மனதிலே) நாணம் இல்லாதவர்கள் உயிருடன் வாழ்வது எப்படிப்பட்டது தெரியுமா? மரத்தாலான பொம்மைகளை கயிற்றில் கோர்த்து உயிருடன் இருப்பதுப்போல் காட்டி மயக்குவது போலாம். மயக்கம் தெளிந்த உடன் அவை உயிரற்றவை என்று தெரிந்துவிடும்.  ஆதலால் அகத்திலே நாணம் இல்லாதவர்கள் உயிர் இல்லாத மரப்பாவைக்கு சமம்.



ஒப்புமை
”மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள்” (கம்ப.கைகேசி சூழ்வினை 34)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின்கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும். (கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.

மு.வரதராசனார் உரை
மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person is not ashamed (i.e. he doesn't have shyness (for earning bad reputation) in his/her heart) and his/her existence is like wooden toys/puppets tied on a rope. A person who carefully observes it will know that they are dead organisms. [A dead organism cannot do anything productive by themselves. It is better for them to go under earth and decay]

Questions that I ask to the kid
How is a person who is not ashamed of bad repute is considered as?

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

 

குறள் 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

கொள்கை - கருத்து; கோட்பாடு; பெறுகை; நோன்பு; ஒழுக்கம்; நிகழ்ச்சி; இயல்பு; செருக்கு; நட்பு; பாண்டவகை.

பிழைப்பின் பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

நின்ற - நின்று - niṉṟu   id. adv. Always, permanently; எப்பொழுதும் நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை )

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

நின்றக்கடை -  நிலைத்து விடுமானால்

முழுப்பொருள்
ஒருவரிடம் ஒழுக்கம்/ கோட்பாடு இயல்பாக இல்லையென்றாலோ குற்றஞ்செய்தாலோ அவருடைய குலத்தின் பெயர் கெட்டுவிடும். அதுவே ஒருவரிடம் நாணம் இல்லையென்றால் அவருக்கு வரக்கூடிய நன்மையெல்லாம் கெட்டுவிடும். 

அனைத்து நன்மைகள் எனில் பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் ஆகியவை அடங்கும் என்றுகூறுவார் பரிமேலழகர்.

நாணம் இருந்தால் ஒழுக்கம் தானாய் வரும். ஏனேனில் நாணத்திற்கு அஞ்சி ஒழுக்கத்தை பின்பற்றுவோரும் உண்டு. பின்பு ஒழுக்கம் பழகி ஒழுக்கத்தை விரும்புவர். நாணத்திற்கு அஞ்சினால் சோம்பல், மறதி ஆகியவற்றிக்கு இடம் கொடுக்காமல் இருப்பர். நாணத்திற்கு அஞ்சினால் வினைத்திட்பத்தில் உறுதியாக இருப்பர். நாணத்திற்கு அஞ்சினால் கல்வி, கேள்வி, செல்வம், காலம், பெரியோர், சிற்றினம் சேராது இருத்தல், கண்ணோட்டம், ஆள்வினை, ஊக்கம் போன்றவற்றிற்கு உரிய மதிப்பு கொடுப்பர். நாணம் நல்வழிப்படுத்தும். ஆதலால் ஒழுக்கத்தை விட நாணத்தை சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தில் கொண்டு திருவள்ளுவர் கூறியதாக கொள்ளலாம். அதில் தவறில்லை.

மேலும்: அஷோக் உரை

“கலத்தினிற் பிறந்தமா மாணியிற் காந்துறு
நலத்தினிற் பிறந்தது நடந்த நன்மைசால்
குலத்தினிற் பிறந்திலை கோளில் கீடம்போல்
நிலத்தினிற் பிறந்தமை நிரப்பி னாயரோ” (கம்ப.மீட்சி.65)


பரிமேலழகர் உரை
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person is indisciplined or commits mistakes, his family name will be deteriorated . However, if a person is not ashamed of bad name then he would not get any good things in life such as education, character, work, social groups etc.  Because if a person is ashamed of getting a bad name or reputation, then he will automatically follow discipline, will have bias for action, will not be lethargic, will be afraid to do mistakes, will be afraid of being part of wrong people, groups, habits. So the feeling of being ashamed itself will drive a person in good path

Questions that I ask to the kid
What happens to a person if he/she is not ashamed of bad repute? 
What happens to a person if he is ashamed of bad repute and stays away from it?

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்


குறள் 1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 

பொருள்
நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

வேலி - விலங்குகள் பயிரை அழிக்காதபடி முள் முதலியவற்றால் அமைக்கும் பாதுகாப்பு; மதில்; காவல்; நிலம்; வயல்; ஒருநிலஅளவை; பசுக்கொட்டில்; ஊர்; காண்க:முள்ளிலவு; ஓசை; காற்று; கொடிவகை.
கொள்ளாது, 

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?
 
வியல் - பெருமை; அகலம்; மிகுதி; பொன்; காடு; மரத்தட்டு; பலதிறப்படுகை.

ஞாலம் -  உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணலர்  -விரும்ப மாட்டார்

மேலாதல் - சிறத்தல்

மேலாயவர் - உயர்ந்த பண்புகளை உடையவர்

முழுப்பொருள்
இவ்வுலகில் மண்ணையும் பொன்னையும் விரும்புவோரே மிக மிக அதிகம். ஆனால் பழிபாவங்களுக்கு அஞ்சி நாணத்தை வேலியாக கொள்வதை வாழ்வியலாக கொண்டோரிடம் நாணத்தை விட்டுவிடு உனக்கு பொன்னும் பூமியும் தருகிறேன் என்று கூறினால் அவர்கள் பொன்னும் பூமியும் விரும்பாது நாணத்தை விரும்புவர். நாணத்தை விரும்பி அதனை பழகும் அத்தகையவர் உயர்ந்தோர் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார். (பழி பாவங்கள் புகுதாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுதும் நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள், 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உயர்ந்தவர் தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.

மு.வரதராசனார் உரை
நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...