Index Pages

Thursday, September 17, 2020

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

 

குறள் 927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

ஒற்றி -  ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல்.

உள்ளூர் - ஊர்நடு; சொந்தஊர்.

நகப்படுவர் - நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை

ஒற்றிக் - ஒற்றுதல் - ஒன்றிற்படச்சேர்தல்; அடித்தல்; தாளம்போடுதல்; அமுக்குதல்; தாங்குதல்; தீண்டுதல்; தழுவுதல்; துடைத்தல்; தள்ளுதல்; அடுத்தல்; கட்டுதல்; வீழ்த்துதல்; தத்துதல்; காற்றுவீசுதல்; ஒட்டிக்கொள்ளுதல்; மோதுதல்; ஒற்றடம்போடுதல்; நினைதல்; உய்த்துணர்தல்; மறைதல்; உளவறிதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

சாய்பவர் - சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல்.

சாய்பவர் - மயங்கியிருப்பவர்

முழுப்பொருள்
போதைப்பொருளான மதுவின, கள்ளினை மறைந்திருந்து அருந்துவோர் பிறருக்கு தெரியாது என்று நினைப்பர். ஆனால் இவன் மறைந்திருந்து உண்ணுகிறான் என்று அவன் சொந்த ஊர் மக்களுக்கு தெரிந்துவிடும். மறைந்திருந்து மது அருந்துபவனை கண்டு என்றும் ஏளனமாய் சிரிக்கும் இகழும். ஏனெனில் இப்படி மதிகேட்டு மதுவருந்துகிறானே என்று.

மறைந்திருந்து குடித்தது ஊருக்கு எப்படித் தெரியும்? முதலாவதாக கள்ளின் நாற்றம்/வாசனை. இரண்டாவதாக கள் தரும் மயக்கதால் அவனிடம் உடனடியாக தெரியும் தள்ளாடும் உடல் மொழி மாற்றங்கள் பேச்சில் தெரியும் மாற்றங்கள். மூன்றாவதாக நாளடைவில் ஏற்படும் உடலில் தெரியும் மாற்றங்கள் (உடலுக்கு வரும் உபாதைகள், முகமும் கண்ணும் இழக்கும் பொலிவு என பல மாற்றங்கள்) மற்றும் குணத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் செயலில் செயல்திறனில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கவனத்தில் தெரியும் மாற்றங்கள். இப்படி பல வழிகளில் ஊர்மக்கள் தெரிந்துக்கொள்வர்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.).

மணக்குடவர் உரை
தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.

மு.வரதராசனார் உரை
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

சாலமன் பாப்பையா உரை
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

No comments:

Post a Comment