குறள் 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]
பொருள்
உவந்து - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்
உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.
உறைவு - தங்குகை; சிறுகுகை; உறைதல்; இருப்பிடம்.
உறைவி - உறைபவள்
உறைவர் - இருக்கின்றார்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
உள்ளத்துள் - உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே
என்றும் - என்றைக்கும், எந்நாளும், எப்போதும்
இகந்து - இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல்
உறைவர் - இருக்கின்றார்; அன்பில்லா என் காதலர்
ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர்.
என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.
இவ் - இந்த
ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.
முழுப்பொருள்
மகிழ்ந்து என்னை நீங்காது என் உள்ளத்துள்ளே என்றும் தங்கியிருக்கும் எனது காதலரை அயலார் என இகழ்கிறார் இவ்வூர் மக்கள். இவ்வூர் மக்களின் அறியாமையை உரைக்கிறாள் காதலி ஏனெனில் தாமகவே உவந்து தான் காதலன் காதலியின் மனதில் இருக்கிறானாம். வேறு எவ்வித வற்புறுத்ததினாலும் அல்ல.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
குறள் 1130
குறள் 1204
”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)
“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)
“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)
”பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத் தகல்வறி யானே” (நற் 388:9-10)
“நொதுமல் சுழுறும் இவ் வழுங்கல் ஊரே” (குறுந் 12:6)
“பொய்க்கும் இவ் வூரே” (ஐங்குறு.154:4)
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.).
மணக்குடவர் உரை
அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர். தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.
மு.வரதராசனார் உரை
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
சாலமன் பாப்பையா உரை
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.
No comments:
Post a Comment