குறள் 330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]
பொருள்
உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.
நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.
யார் - யாவர்
நீக்கியார் - போக்குகியவர்
என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்;
செயிர் - குற்றம்; கோபம்; போர்; வருத்துகை; நோய்.
உடம்பின் - உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி
செல்லாத் - செல்லா-தல் - cel-l-ā- v. intr. செல்² + ஆ-.1. To be paid or discharged, as loan; கடன்தொகை செலுத்தப்படுதல். 2. To be dead andgone; இறந்துபோதல். அவர் செல்லானார். Loc.
தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.
வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.
யவர் - அவர்
முழுப்பொருள்
நோய்/நோய்கள் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறவியில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தவர்கள் கூறுவர்.
குறள் 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் என்று முன்னரே கூறியிருந்தார் திருவள்ளுவர். நாம் பிறருக்கு செய்யும் துன்பம் நமக்கு நோயாக வரும் என்பதே அக்குறளின் கருத்து.
பிற உயிர்களை கொல்லுதல் அவ்வுயிர்களுக்குச் செய்யப்படும் மிகப் பெரிய துன்பமாகும். கொலை செய்தால் இம்மையிலும் நோயாக வரும் மறுமையிலும் ஊழ்வினைப்பயனாக நோயென வரும். ஆதலால் எச்சரிக்கிறேன் உன்னை, பிற உயிர்களை கொல்லாதே என்று கண்டிப்பாக அறிவுறுத்துகிறார்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”அக்கேபோல் அங்கை யொழிய விரலுழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்” (நாலடி 123)
பரிமேலழகர் உரை
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.).
மணக்குடவர் உரை
முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உயிர்க்கொலை, வாழ்வை உபாதைகளில் தள்ளும்.
Comments
Post a Comment