முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

குறள் 535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்
[பொருட்பால், அரசியல், பொச்சாவாமை]

பொருள்
முன்னுறக் -முன்னுதல் - கருதுதல்; எதிர்ப்படுதல்; அடைதல்; அணுகுதல்; பொருந்துதல்; பின்பற்றுதல்; கிளர்தல்; படர்ந்துசெல்லுதல்; முற்படுதல்; நிகழ்தல்.

காவாது - காத்துக்கொள்ளாது 

இழுக்கி - தவறுதல்; வழுக்குதல் இழத்தல் தளர்தல் துன்புறுதல் தள்ளிவிடல்; மறத்தல் பின்வாங்கல்.

யான் - தன்மையொருமைப்பெயர்

தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

பிழை - தவறு; குற்றம்:குறைவு

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம்.

இரங்கிவிடும் - இரங்குதல் - வருந்துதல்; அருளல் மனமழிதல்; அழுதல்; கழிவிரக்கம்கொள்ளல்; ஒலித்தல் யாழொலித்தல்; கூறுதல் ஈடுபடுதல்

விடும் - ஆகும் 

முழுப்பொருள்

நான் இப்பொழுது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். பின்பு மகிழ்ச்சியில்லாமல் இருக்கும் ஒரு நிலைவருமானால் அன்று மறதியின் விளைவை உணர்ந்து அன்று முதல் மறதி இல்லாமல் இருக்கிறேன். ஆதலால் இன்று ஏன் மறதியைப் பற்றி பேசுகிறீர்கள்? அதற்காகவே இக்குறள் மூலமாக ஒரு எச்சரிக்கை விடுக்கிறார் திருவள்ளுவர்

துன்பங்கள் வருவதற்கு முன்பே அவை வராத வண்ணம் காத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு காக்க தவறியவன் அதாவது காப்பதற்கான செயல்களை செய்ய (சோர்வினால்) மறந்தவன் பிழை புரிந்துவிட்டான் என்று அர்த்தம். துன்பம் வந்த பிறகு, தான் ஆற்றிய அப்பிழையை எண்ணி வருந்த நேரிடும். பின்பு வருந்துவதற்கு பதிலாக முன்பே ஒரு செயலை செய்து முடித்துவிடலாம். Regret minimization  என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். 

வருத்தங்கள் நமக்கு (மன)நோயை உண்டாக்கக்கூடிய ஆற்றல் பெற்றது. அது மெல்ல உடல்நோயை உண்டாகும். அது ஒரு முடிவில்லா சுழற்சியாக மாறக்கூடும். பலர் தான் செய்த பிழைகளாலும் தான் முன்பே ஆழ்ந்து யோசித்து இருந்தால் இந்த பிழைகளை தவிர்த்து இருக்கலாம் என்ற ஒரு சுழற்ச்சியில் உழன்றுக்கொண்டு (dwelling in the past. analysis paralysis) இருப்பார்கள். ஒரு சிலசமயம் கழிவிரக்கத்தில் உழளுவார்கள். ஆதலால் துன்பங்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மறதி என்னும் சோர்வை தவிர்க்க வேண்டும். 

யோசித்துப்பார்தால் வாழ்வில் ஒரு 4-5 வருடங்கள் வேகமாக போய்விடும். 4-5 வருடங்கள் கழித்து பின்நோக்கி பார்த்தால் நம்மிடம் இருந்த வாய்ப்புகளை நாம் எப்படி தவறவிட்டோம் அல்லது வாய்ப்புகளை நோக்கி செல்ல மறந்துவிட்டோம் என்று உணர்வோம். ஆனால் அது கண்கெட்டப்பிறகு சூரிய நமஸ்காரம் போன்று ஆகும்.

அதனால் தான் "Bias for Action" என்றென்பது ஒரு மிகமுக்கியமான தலைமைப்பண்பு.

இக்கருத்துக்கொப்ப பழமொழி (325) நானூறு பாடலொன்று இவ்வாறு சொல்கிறது.

முன்னை உடையது காவா திகந்திருந்து,
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல்,-இன்னியற்
பைத்தகன்ற அல்குலாய்!-அஃதாதல் வெண்ணெய்மேல்
வைத்து மயில் கொள்ளுமாறு

கொக்கின் தலையில் வெண்ணை வைத்து பிடித்தாற்போல என்ற ஒரு சொற்றொடர் வழக்கில் உள்ளது. அதையே மயிலைவைத்து சொல்லும் பழமொழியும் உண்டு. பறவை இங்கு பொருட்டல்ல. அது என்ன கொக்கின் அல்லது மயிலின் தலையில் வெண்ணை வைத்துப்பிடிப்பது. வெண்ணை வைத்து, அது உருகி, அப்பறவையின் கண்ணை மறைக்கையில் பிடிப்பதுபோலாகும், முன்னர் ஒருவர் உணர்ந்ததை தாம் கைக்கொள்ளாது, பிறகு ஆராய்ந்து காணுவேன் என்பது. இக்கருத்தைக் குறள் தன்மையில் சொல்கிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின்வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.
(காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.

மு.வரதராசனார் உரை
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

சாலமன் பாப்பையா உரை
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

No comments:

Post a Comment