உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

குறள் 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது
[காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்]

பொருள்
உவக்காண்- uvkkāṇ   adv. At that time, அப் பொழுது. 2. There, in that place, அவ்விடம். (குறள்.) (p.) உவக்காணெங்காதலர்செல்வார். Lately when my husband left me--  ; உங்கே, உவ்விடம்; உங்கேபார்

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

காதலர் - காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன்.

செல்வார் - பிரிந்து சென்றுவிடுவார்

செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

இவக்காண் - இங்கே; இந்நேரமளவும்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

மேனி - நிறம்; வடிவம்; உடல்; அழகு; நன்னிலைமை; நிலத்தின்சராசரிவிளைச்சல்; காண்க:குப்பைமேனி.

பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.

ஊர்வது - ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல்.

முழுப்பொருள்
உவக்காண் என்பது இறந்தகாலத்தை குறிக்கும் ஒரு சொல். தலைவி (காதலி) சொல்கிறாள் திருமண உடன்படிக்கைக்கு முன்பான நாட்களில் அவ்வவ்ப்போதுதான் நானும் தலைவனும் ஒன்றுகூடுவோம் /சந்தித்துக்கொள்வோம். அப்பொழுதே தலைவன்(காதலன்) என்னை (காதலி) பிரிந்து சென்றாலே என் மேனி மேல் பசப்பு நோய் ஊர்ந்து பரவிவிடும். ஆதலால் இப்பொழுது திருமண உடன்படிக்கை ஆன பின்பு நாங்கள் இருவரும் ஒன்றாய் ஒரே வீட்டில் வாழும் காலங்களில் கேட்கவாவேண்டும்? அவர் என்னைவிட்டு பிரிந்து சென்றால் பசலை என் மேனி மேல் பரவுதலை பற்றி கேட்கவே வேண்டாம். என்னால் தாங்க முடியாது. 

காதலன் நீங்கப் பசலைப்பூத்ததை தம் தோழிக்குச் சொல்லும் குறுந்தொகை வரிகளும் உண்டு.


ஒப்புமை
1) நற் 237:6, 242:6; குறுந் 367:3; ஐங் 206:1, 207:2; அகநா 4:13

2) 
3) இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே (குறுந் 205:5-7)

4) “..... பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே” (குறுந் 399:2-4)

5) அவர், தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே” (கலி.130:20-21)
“முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391)
“நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினும் நுணுகும் நல்லார்” (சீவக.1880)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

சாலமன் பாப்பையா உரை
முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.

2 comments:

  1. இவக்காண் - இங்கே பார் - here
    உவக்காண் - அதோ கண் தொலைவில் பார் - there
    (அவக்காண்) - அங்கே கண்டதை நினைவுபடுத்திப் பார் - it
    வேறுபாடு

    ReplyDelete
    Replies
    1. ஐயா
      வணக்கம். தங்களின் குறிப்பை குறித்துக்கொண்டேன். நீங்கள் சொன்ன பொருள்கள் சரியென்றே எனக்கும் படுகிறது.

      உவக்காண் னுக்கு agarathi .com இல் இருந்து "At that time, அப் பொழுது" பொருள் எடுத்தேன்.

      இக்குறளுக்கு பொருத்தமாகவும் தோன்றிற்று.


      இக்குறளின் பொருளை தவறாக உய்த்துணர்ந்தேனா? தவறு இருப்பின் திருத்தவும்.



      அன்புடன்
      ராஜேஷ்

      Delete