யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

குறள் 895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
யாண்டுச் - எங்கு; எப்பொழுது; ஆண்டு

சென்று - செல்லும் - செல்லுதல் -  நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

யாண்டும் - எப்போதும்; எவ்விடத்தும்.

உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்.

ஆகுதல் - ஆவது என்பது; ஆதல்; ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆகார் - விருப்பத்திற்கு உரியவராக இல்லாது இருத்தல் ; வளரமாட்டார்

வெந்  - வெம் - வெம்மை -வெப்பம், கடுமை; சினம்; விருப்பம்; வீரம்.

துப்பின் - துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.

செறல் - கோபம்; கொல்லுகை.

செறப்பட்டவர் - கோபத்திற்கு உள்ளானவர்

முழுப்பொருள்
மிக பெரிய வலிமையுடைய அரசனின் கோபத்திற்கு ஆளான ஒருவர் எங்கு சென்றாலும் எப்பொழுதும் வாழமுடியாது. ஆதலால் பெரியோரிடம் பிழை செய்யாது இருத்தல் வேண்டும். அரசரின் கோபம் பெரிய தவறுகளுக்கு வரும் என்பதை நாம் சொல்லித்தான் அறியவேண்டும் என்றில்லை.

அவர்கள் எங்குசென்றாலும் வாழ முடியாது என்பதற்கு காரணம்: இவர்களை பற்றிய செய்தி (அதாவது இவர்கள் செய்த தவறுகள்) மிக வேகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடும். ஆதலால் இவரை பற்றி எல்லோரும் அறிந்து இவரிடம் பழகி அரசரின் கோபத்திற்கு ஆளாக மாட்டார். மேலும் பெரிய தவறு செய்வோரிடம் பழக்கம் வைத்துக்கொள்வதை அடிப்படையாகவே யாரும் விரும்பமாட்டார்.

கி.வா.ஜவின் ஆராய்ச்சியுரை, இக்குறளோடு முற்றும் ஒப்பதாய சீவக சிந்தாமணிப் (1089) பாடல் வரியினைச் சுட்டுகிறது: “வேந்தொடு மாறு கோடல் விளிக்குற்றா தொழிலதாகும்”. அதாவது அரசனோடு மாறுபட்ட கருத்தில் நிற்பது கேட்டினை அடைய எண்ணுபவரது தொழிலாகும் என்கிறது இவ்வரி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார். (இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா உரை
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

No comments:

Post a Comment