மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

குறள் 904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
மனையாளை - மனையாள் - மனைவி, இல்லாள்; மருதநிலத்தின்தலைவி; மனையையுடையாள்.

அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்

மறுமை - மறுபிறவி; மறுவுலகம்.

இலாளன் - இல்லாதவன் 

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

ஆண்மை -  ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

இன்று -  இல்லை; இந்தநாள்; ஓரசைச்சொல்.


முழுப்பொருள் 
மனைவியை கண்டு அஞ்சி வாழும் ஒருவன் மனைவியின் ஆணைக்கிணங்க வாழும் ஒருவனுக்கு மறுபிறவியில் பயன் ஏதும் இல்லாதவனாய் பிறப்பான். அத்தகையவன் எத்தகைய செயல் திறன் படைத்திருந்தாலும் அவனுடைய சிறப்பை இவ்வுலகம் பாராட்டாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.

மு.வரதராசனார் உரை
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

No comments:

Post a Comment