நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

குறள் 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

நட்டல் - naṭṭal   v. n. loving (நள்ளு); 2. transplanting, நடல், ஊன்றுகை

மிகுதிக் - அதிகம்; எழுத்துஇரட்டிக்கை; நிறைவு; திரள்; பொலிவு; மீதி; சிறப்பு; செருக்கு

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

மேற் - மேற் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

இடித்தற் - இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக.

முழுப்பொருள்
ஒருவரிடம் நட்புக்கொள்வதென்பது ஒன்றுகூடி சிரித்து மகிழ்ந்து குலாவுதற்கு மட்டும் அல்ல. நட்பென்பது நண்பர் நெறி மீறி அறிந்தோ அறியாமலோ தவறான பாதையில் சென்றாலோ அல்லது தவறுகளை செய்தாலோ அல்லது கீழ்மையானவற்றை செய்தாலோ யாருக்கும் காத்திருக்காமல் நேரே நண்பனிடம் சென்று அத்தவறுகளை எடுத்துரைத்து அந்த தவறுகளை தகர்த்து அதனை மறுபடியும் செய்யாதவாரு பார்த்துக்கொள்பவனே நண்பன். அத்தகையதே நட்பு.

இப்பொழுதெல்லாம் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களைத் தேடும்போது அங்கு வேலை செய்பவர்களிடம் உங்கள் நண்பர்களைப் பரிந்துரை (Referral) செய்யுங்கள் என்கிறார்கள். நண்பர்கள் மூலம் உங்களுக்குச் சிறந்த வேலைகள் கிடைக்கலாம்! 

வாழ்க்கைப் பிரயாணத்தில் நம்முடன் அதிக நேரம், அதிக தூரம் உடன் வருபவர்கள் நண்பர்கள். நல்ல நட்பைப் போல உயர்ந்தது வேறு எதுவுமே இல்லை எனலாம். அப்படிப்பட்ட நண்பர்களை நாம் முறையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். “உன்னுடைய நண்பன் யார் என்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” என்பது பழமொழி. 

பொதுவாக நண்பர்கள் என்றாலே நமக்கு ஜாலியாக இருப்பதுதான் தோன்றும். சிலர், “என்னடா, எங்களுடன் குடிக்க மாட்டேன் என்கிறாய். நீ என்ன ஃப்ரண்ட்?” என்பார்கள். அப்படிப்பட்டவர்களின் சகவாசம் வேண்டுமா? அவர்களை நீங்கள் நண்பர்கள் என்று சொல்ல வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். 

நல்ல நண்பர்களை எப்படிக் கண்டு கொள்வது? உங்களுக்குத் துன்பம் வரும்போது யார் ஓடி விடுகிறாரோ அவர் நிச்சயமாக நண்பர் இல்லை. இன்னும் சிலர் உங்களால் என்ன ஆதாயம் என்று பார்த்து நட்புக் கொள்வார்கள். அவர்களையெல்லாம் உங்கள் நட்பு வட்டாரத்தில் சேர்க்கக் கூடாது.

நம்முடைய நண்பர்களைத் தீர்மானிப்பது குணங்கள் மற்றும் அணுகுமுறை.

நம்முடைய மிகச் சிறந்த நண்பர் யார்? நாம் யாருக்குச் சிறந்த நண்பர்? நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? உங்கள் நண்பரை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்? இரண்டிற்கும் ஒரே அளவுகோல் தான். நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறினைச் செய்யும்போது, அதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் நம்மிடம் எடுத்துக் கூறி நம்மைத் திருத்தப் பார்ப்பார்கள். அவர்கள்தான் நம் சிறந்த நண்பர்கள்.

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக மட்டுமல்ல. தவறு செய்யும்போது முன் வந்து கண்டித்துச் சொல்வதற்கும் தான்!

கலித்தொகைப் பாடல், “மேல்நின்று மெய்கூறும் கேளிர்” என்கிறது. அறநெறிப் (47) பாடல்லொன்று, “காய உரைத்து கருமம் சிதையாதார் தூயரோ டொவ்வாரோ தக்கார்க்கு”, என்று அழகாகச் சொல்கிறது.

“இடிக்கும் கேளிர்’ (குறுந் 58.1)
“தன் தீமை பலகூறிக் கழறலின்” (கலி 3:21, 45:21)

“கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈ தடாதென் றொன்ற வேதுவோ டறிவு காட்டி
இடிக்குந ரில்லை நீயே யெண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்கின்ற போது மேன்மேல் முடிவின்றி முடிவ துண்டோ” (கம்ப.நிந்தனைப்.59)



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

No comments:

Post a Comment