கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

குறள் 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
[பொருட்பால், அரசியல், கல்லாமை]

பொருள்
கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

கல்லா ஒருவன் - கல்வி கற்காதவர்கள்.

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

தலைப்பெய்து - தலைப்பெய்தல் - ஒன்றுகூடுதல்; கிட்டுதல்; பெய்துரைத்தல்; கூடுதல்.

சொல்லாட - சொல்லாடுதல் - பேச்சில்வழங்குதல்; பேசுதல்.

சோர்வு - தளர்ச்சி; மறதி; மெலிவு; இழுக்கு; சொரிகை; திருட்டு; விபசாரம்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
கல்வி கற்காதவர்களின் குணம் அல்லது தன்மை எப்படிப்பட்டது தெரியுமா? அத்தகைய கல்வி அல்லாதவர்களிடம் நாம் ஒன்றுக்கூடும் பொழுது சிறிது நேரம் பேசினாலே நமக்கு சோர்வு உண்டாகும். ஆனால் கற்றவர்களிடம் பேசினால் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படும். 

கல்வி என்றால் கற்கை. அந்தக் கற்கையானது கல்விக்கூடங்களில் தான் பெறமுடியும் என்றில்லை. பலர் பயிற்சியாலும் அனுபவத்தாலும் அவதானிப்பினாலும் கற்றோரிடம் பழகுவதால் பெற முடியும். உதாரணமாக தமிழகத்தின் இலக்கிய சாதனையாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அவர் தனது ஒன்பது வயது வரை மட்டும் படித்துள்ளார் (சுமார் 3 ஆம் வகுப்பு). ஆனால் அவர் எழுதிய ஒவ்வொன்றும் உலகத்தரம் வாய்ந்தவை. பல கதைகள், சிறுகதைகள், நாவல்கள் பல காலங்கள் கடந்து நிற்கும் தகுதி வாய்ந்தவை. 

ஆதலால் இக்குறள் கல்வியறிவினை எத்தகைய முறையிலும் பெறாதவர்களை பற்றியே என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால்” (பழமொழி 2)

“அயர்வில் கேள்விசால் அறிஞர் வேலைமுன்
பயில்வில் கல்வியார் பொலிவில் பான்மைபோல்” (கம்ப.மராமர.70)

பரிமேலழகர் உரை
கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும்.
('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

No comments:

Post a Comment