உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

குறள் 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
உவப்பத் - உவப்பு - மகிழ்ச்சி; களிப்பு; பொலிவு; விருப்பம்; உயரம்; விளையாட்டு; மேடு

தலைக்கூடி - தலைக்கூடுதல் - ஒன்றுசேர்தல்; நிறைவேறுதல்

உள்ளப் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

அனைத்தே - அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

புலவர் - புலமையோர்; பாவாணர்; ஞானிகள்; தேவர்; குறுநிலமன்னர்; கூத்தர்; கம்மியர்; ஓவியம்முதலியகலைவல்லார்; சாளுக்கியர்; ஒருவகைச்சாதியார்; சிலஇனத்தவரின்பட்டப்பெயர்

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு

முழுப்பொருள்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது அவ்வையாரின் மூதுரைப்பாடல். அதுவும் நற்றாமரைக் குளத்தில் நல்ல அன்னப்பறவை வந்து சேருவது போல. யாரோடு யார் சேர்வர் என்பதைச் சொல்லும் அழகான பாடல்

“நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

விளம்பிநாகனாரின் நான்மணிக் கடிகைப் பாடலொன்று, “கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்” என்கிறது. அதாவது கல்வி அறிவை உடையவர்களை விரும்பிச் சேர்பவர்களும் கற்றவர்களே.

ஞானிகளின் புலவர்களின் புலமைபெற்றவர்களின் செயல் அல்லது அவர்களின் பெருமையென்ன?
மற்றவர்கள் கூடி வரும் பொழுது அவர்கள் உள்ளம்  மகிழுமளவு கலந்து பேச வேண்டும். உள்ளம் எப்பொழுது மகிழும்? இருவரும் ஒருவருக்கொருவர் தாங்கள் கற்றதையும் பெற்றதையும் பகிர்ந்துக்கொள்ளும் பொழுது ஏற்படும். அது கற்பதனால் ஏற்படும். இப்படி கலந்து பேசி உள்ளம் உவகையில் இருக்கும் பொழுது பிரிய நேரிடும். அப்போது மீண்டும் இவரை  எப்பொழுது சந்திப்போம் என்று ஏங்க வேண்டும். அத்தன்மைவாய்ந்ததே புலவரின் பெருமையாகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தவலரும் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்
தும்பர் உறைவார் பதி” (நாலடி 137)

பரிமேலழகர் உரை
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில்.
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.

மு.வரதராசனார் உரை
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

No comments:

Post a Comment