செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

குறள் 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
செவி காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை.

உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை

கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ்

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

அவி -  வேள்வித்தீயில்இடும்கடவுளர்க்குரியஉணவு; உணவு சோறு நெய் நீர் ஆடு கதிர் கதிரவன் காற்று மேகம் மலை மதில் பூப்பினள்

உணவின் - உணவு -  சோறு; உணவுப்பொருள்; மழை

ஆன்று - நிறைந்து:விரிந்து; நீங்கி.

ஆன்றார் -  அறிஞர்; தேவர்:பெரியோர்:பண்புள்ளோர்.

ஆன்றாரொடு - அறிஞர் உடன்

ஒப்பர் -
ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
நம் செவியிற்கு இடப்படும் உணவென்பது கேள்விச்செல்வம். அது வானுலகத்தோர்க்கு வேள்வியில் இடப்படும் அவியை போன்றதாகும். இப்பூமியில் வேள்விகளை நடத்தும் பொழுது அவியினை உணவாக தேவர்களுக்குப் படைப்பார்கள் மானிடர்கள். அந்த அவியனை உண்டு இவ்வுலகத்திற்கு நன்மை செய்வார்கள் தேவர்கள். வானுலகத்தவர்களுக்கு உணவில்லையா என்ன? ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். உணவை அளித்ததனால் பயனும் கிட்டிற்று. அதுமட்டுமின்றி வேள்வி எனப்படுவது வேதங்கள் ஒலிக்கும் இடம். வேதங்கள் ஞானத்தின் ஊற்று. அவி என்பது அனலை வளர்ப்பதற்கு. வேள்வியில் நெருப்பு வளர வளர மாசுகள் அழிந்துவிடும். நெருப்பைப் போல் பசிக்கொண்டது வேறேதுமில்லை.  கேள்விச்செல்வமும் இந்த வெளியில் இடப்படும் அவியைப் போன்றது தான். அது வளர்ந்துக்கொண்டே இருக்கும். வேள்வியை பற்றியும் அதில் இடப்படும் அவியைப் பற்றியும் கீழ்க்காணும் பத்திகளில் அறிந்து அதனை கேள்விச்செல்வதுடன் ஒப்பிட்டு கேள்வியின் சிறப்பை உணர்க.

வேள்வியை பற்றி [வெண்முரசு - நூல் ஐந்து – பிரயாகை – 21]
நெருப்பின் பசிக்கு அளவே இல்லை. அதை உணவு அணைக்கமுடியாது. உண்ணும்தோறும் வளரும் பசி என்றால் நெருப்பு மட்டுமே. நெருப்பைவிட ஆற்றல்மிக்க ஏதும் இப்புவியில் இல்லை. பிரம்மத்தின் புன்னகை ஒளி என்றால் அதன் சினமே நெருப்பு. வெண்ணிற நெருப்பு இன்னும் அழுத்தமானது. செந்நிற நெருப்பு தன்னை நெருப்பென காட்டிக்கொள்கிறது. வெண்ணிற நெருப்பு அதில் எரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் வெம்மைகொண்டது. இப்புவியில் உள்ள அனைத்தும் இருத்தல் கொண்டவை. ஒன்றே ஒன்றுதான் அழிதலே இருப்பாகக் கொண்டது. காலத்தையும் வெளியையும் சுமந்துகொண்டிருக்கின்றன அனைத்தும். நெருப்போ அவற்றை ஒவ்வொரு கணமும் உதறிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்றால் என்ன என்று எண்ணினீர்கள்? நெருப்பென்றால் நெளிவு. மாட்டேன் மாட்டேன் என உதறும் விரைவு. வேண்டாம் வேண்டாம் என மறுக்கும் திமிறல். சொல்லப்போனால் இங்கே உள்ளவை இரண்டே. நெருப்பும் நெருப்பு அல்லாதவையும். நெருப்பல்லாத அனைத்தையும் உண்ணுவதே நெருப்பின் இயல்பென்பதனால் பசியும் உணவுமன்றி இங்கு ஏதும் இல்லை. நெருப்பை அன்றி மானுடன் அறிவதற்கேதுமில்லை இங்கே. நெருப்பை வளர்ப்பதுபோல புனிதமானது ஏதுமில்லை. நெருப்புக்கு அவியிடுவதைப்போல மகத்தானது ஏதுமில்லை. நெருப்பில் மூழ்கி அழிவதுபோல முழுமையும் வேறில்லை. அவி என்பது அனலை வளர்ப்பதே என்று அறிக.

மேலும் அவியை  பற்றி [வெண்முரசு  நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 11]
பிரம்மனின் காமமே அக்னிதேவன் என்கின்றன நூல்கள். மாளாப் பெருங்காமத்தின் அனலே அக்னி. ஆயிரம் நாக்குகளால் ஆன ஒளி. தொட்டுத்தொட்டுத்தாவும் துடிப்பு. உச்சம் கொண்டு அந்தரத்தில் எழுந்து நிற்கும் விசை. அணைந்து புகைந்து கருகி மறைகையிலும் எங்கோ தன் பொறியை விட்டுச்செல்பவன். குளிர்ந்திருக்கும் அனைத்திலும் உள்நின்று எரிபவன். அமைந்திருக்கும் அனைத்திற்குள்ளும் தழலாடும் தனியன்.
ஏழுமுனிவரும் பங்குகொண்ட பெருவேள்வி ஒன்றில் மூன்று எரிகுளங்களிலாக எழுந்து பொன்னொளியுடன் நின்றாடினான் எரியிறை. அக்னியின் முன் அத்தனை பெண்களும் அழகிகளாகிறார்கள். அங்கிரஸின் அறத்துணைவி சிவை பேரழகியாக சுடர்ந்தாள். அவளை நோக்கி நா நீட்டி தவித்தாடியது நெருப்பு. அதன் நடனத்தை எதிரொளித்து தழலாடியது அவள் உடலின் மென்மை.
எரிந்து எரிந்தமைந்தது எரியிறையின் காமம். அதில் தெறித்த பொறி பறந்துசென்று அருகே ஒரு காய்ந்த மரத்தை பற்றிக்கொண்டு வானோக்கி இதழ் விரித்து பெருமலராகியது. ஒன்றிலிருந்து ஒன்றென பற்றி எரிந்துகொண்டே இருந்தான் அக்னிதேவன். அவன் காமத்தில் அவியாகி அழிந்தது காய்ந்து நின்றிருந்த மலைச்சரிவின் காடு.

கம்பர் நாட்டுப்படலத்தில் (15), “மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்” என்று கேள்வியை நோயறுக்கும் மருந்தைவிட சிறந்தது என்கிறார்.

“அவியுணவினோர் புறங்காப்ப” (புறநா.377:5)

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
(செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

மு.வரதராசனார் உரை
கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

சாலமன் பாப்பையா உரை
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

No comments:

Post a Comment