Skip to main content

இவறலும் மாண்பிறந்த மானமும்

குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
இவறலும் - இவறல் - ivaṟal   n. இவறு-. 1. Wish;விருப்பம். யாதுகொ லிவற லென்றான் (இரகு. சீதை 13). 2. Covetousness, avarice; பேராசை இவறலின்றிக் கோத்தொழி னடாத்து மன்றே (சீவக. 2583).3. Miserliness, niggardliness; உலோபம் (தொல்.சொல். 396, உரை ) 4. Forgetfulness; மறதி (பிங்.)  

மாண்பு - பெருமை; அழகு; நன்மை; மாட்சிமை.

இறந்த - இறந்துபடுகை; சாவு

மானமும் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.


மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.
மாணா - மாட்சிமையற்ற தன்மை
மாணார் - மாட்சிமையற்றபகைவர்

உவகையும்  - உவகை - மகிழ்ச்சி; களிப்பு; அன்பு; காமம்; இன்பச்சுவை

ஏதம் - துன்பம், குற்றம், கேடு.

இறைக்கு -  உயரம்; தலை கடவுள் தலைவன் அரசன் உயர்ந்தோன்; மூத்தோன் பெருமையிற்சிறந்தோன்; கணவன் பறவையிறகு; கடன் வீட்டிறப்பு மறுமொழி மணிக்கட்டு குடியிறை சிறுமை அற்பம் காலவிரைவு; சிவன் பிரமன் மாமரம்

முழுப்பொருள்
இவறல் என்ற சொல்லுக்கு விருப்பம், பேராசை என்று அகராதி கூறுகிறது. இவை இரண்டும் இக்குறளுக்கு பொருந்தும் சொற்களே. முறைதவறியவற்றில் விருப்பம் கொள்வது, தீயவற்றில் விருப்பம் கொள்வது தவறாகும். உதாரணமாக இராவணன் சீதையின்ப் பால் கொண்டது அன்பு என்றாலும் அது தவறு ஆகும். அதனுடைய பலனாக அவன் அனைத்தையும் இழந்து மாண்டான். "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி" என்ற கம்பராமாயண வரிகளை நினைவில் கொள்க. அதுப்போல் பேராசையும் தவறு. தனக்கு தேவையான செல்வத்தை அவன் நன்கு ஆட்சி செய்தால் அது தானாக வந்து சேரும். தேவையின் அளவிற்கு அதிகாமாக ஆசைப்படுதல் தவறு.

பெருமை அழகு மாட்சிமை இறந்த பிறது நீடிக்கின்ற வலிமை பெருமை ஆகியவை பயனற்றது ஆகும். மாண்பு இருக்கும் வரையிலேயே வலிமையும் பெருமையும் சிறந்தது. இல்லையேல் அவற்றிற்கு பொருள் இல்லை. 

பெருமை படக்கூடிய எந்த செயலையும் செய்யாது பொருள் அல்லாதவற்றில் பெருமைப்பட்டுக்கொள்ளதல் மகிழ்தல், திளைத்தலில் ஒரு பொருளும் இல்லை. மெய்யானவற்றில் மகிழவேண்டும்

ஆதலால் தவறானவற்றின் மீது விருப்பம் கொள்ளுதல், பேராசை கொள்ளுதல், மாட்சிமை அல்லாது இருத்தல், பெருமை அல்லாதவற்றில் மகிழ்தல் ஆகியவை குற்றங்கள் ஆகும். கேடு விளைவிக்கும். ஆதலால் இவற்றை ஒரு தலைவன் (ஏன் எவன் ஒருவனும்) செய்யக்கூடாது. 

மேலும்: அஷோக் உரை

இவறல் இருக்கக்கூடாமையை சீவக சிந்தாமணியும் “இவறலின்றிக் கோத்தொழினடாத்து மன்றே (சீவக. 2583)” கூறுகிறது.

ஆள்வோர்க்கு ஏன் இவறல் கூடாது என்பதற்கு, கலித்தொகை வரிகள் காரணம் கூறுகின்றன. “ஈதலில் குறைகாட்டா தறனறிந் தொழுகிய தீதிலான் செல்வம் போல்”  என்ற வரிகள் ஈகையுடைமையே அறம் அறிந்து ஒழுகல் என்றும் அத்தகையோர் தீதிலார் என்றும் அவரது செல்வம் வளரத்தக்கது என்றும் கூறுகின்றன. ஆள்வோர்க்கு இவை அத்துணையுமே தேவை.

பரிப்பெருமாள் என்னும் உரையாசிரியர் இவறலை, தனக்கு உரிமையில்லாவதற்றில் பெருவிருப்பம் கொள்வது மற்றும் உரிய பொருளை பிறர்க்கு கொடுக்கும் வள்ளன்மை இல்லாமை என்னும் இரண்டுமாயது என்கிறார்.  மாண்பு இறந்த மானமானது தொடங்கிய வினை நன்மை பயவாதெனினும் தொடர்ந்து வீன் பெருமைக்காகக் தொடர்ந்து அதனாலேயே அழிவது. துரியோதனன் அழிந்ததும் இதனால்தான். எளியோரை வதைத்து அதில் உவகைக் கொண்டதால் அழிந்தார்கள் வாதாபியும் இல்வலனும்.


ஒப்புமை
“ஈதலிற் குறைகாட்டா தறனறிந் தொழுகிய
தீதிலான் செல்வம்போல்” (கலி 27:1-2)

“அறத்தாற்றின் ஈயாத தீகையன்று” (முதுமொழிக்காஞ்சி 48)

“செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமல்
வைவன வந்த போதும் வசையில் வினிய கூறல்
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃக லின்மை
உய்வன வாக்கித் தம்மோடுயர்வன உயர்ந்த தோளாய்” (கம்ப.அரசியல்.31)

“....ஒன்றீ கலான்பொருள்
காத்தவன் புகழ்எனத் தேயுங் கற்பினாள்” (கம்ப.சூர்ப்பனகை.26)

“துயரஞ்செய் மானங்களாய்” (திருவாய்.7.8:7)

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை 
மனச்சிறையில் கரந்த காதல் 
உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து 
தடவியதோ ஒருவன் வாளி
(நன்றி: ஜெயமோகனின் வலையத்தில் இருந்து [சுட்டியை தட்டவும்])

காவியம் என்பது கடல்போல் விரிந்து செல்லும் பேருள்ளம் கொண்ட கவிஞனால் கடவுளுக்கு நிகரான இடத்தில் நின்று இவ்வாழ்க்கையை நோக்கி எழுதப்படுவது. அவனுக்கு அந்தத் தளத்தில் மானுட உண்மைகளே கண்ணுக்குப்படுகின்றன, எளிய விருப்புவெறுப்புகள் அல்ல.

கம்ப ராமாயணத்தின் நாயகன் ராமன். அறத்தின் மூர்த்தியாக ஒரு மானுடனைப்பற்றிப் பேசுவதே கம்பனின் நோக்கம். ஆனால் காவியகர்த்தனாகிய கம்பன் கவிதையின் ஆயிரம் கால் புரவியில் ஏறிக்கொள்ளும் போது கம்பன் எனும் மானுடனை சிறிதாக்கி மெலெழுகிறான். அது நிகழாவிடில் அந்நூல் காவியமே அல்ல.

ராமனின் அனைத்துச் சிறுமைகளும் கம்பனால் தான் சொல்லப்படுகின்றன. ராவணனின் அனைத்து மாட்சிகளும் கம்பன் சொல்லாலேயே துலங்கி வருகின்றன. புலவர் குழந்தையே கம்பனில் அள்ளியே தன் காவியத்தை ஆக்கியிருக்கிறார். கம்பன் எவரையும் கீழிறக்கவில்லை. அவன் காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி.

ராவணன் ராமனின் அம்பு பட்டு விழும் உச்ச கட்டம். கம்பனின் சொற்கள் இப்படி எழுகின்றன. கோல் பட்டுச் சீறி எழும் ராஜநாகத்தைப் போல…

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்…

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.
இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.

பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.

பரிமேலழகர் உரை
இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின் நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும், இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம்.
(மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும், 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம். இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

சாலமன் பாப்பையா உரை
நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order பாயிரவியல் 01 கடவுள் வாழ்த்து  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 02 வான்சிறப்பு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 03 நீத்தார் பெருமை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 04 அறன்வலியுறுத்தல்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] இல்லறவியல் 05 இல்வாழ்க்கை  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 06 வாழ்க்கைத் துணைநலம்  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 07 மக்கட்பேறு  [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 08 அன்புடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 09 விருந்தோம்பல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 10 இனியவைகூறல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 11 செய்ந்நன்றி அறிதல் [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 12 நடுவு நிலைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 13 அடக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 14 ஒழுக்கமுடைமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ] 15 பிறனில் விழையாமை [ குறள் வரிசை ] [ பதிவு வரிசை ]...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள் நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர். ஒருவர்க்குச் -  ஒருவர் செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி கல் -  வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி. மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு. எழுத்துப் - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம். போல் - ஓர்உவமவுருபு...