தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும்

குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள்
தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.
தெரிதலும் - ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுதல். அதற்கு தேவையான வலிமையையும் ஆராய்தல், செயலின் சிறப்பாக செய்வதற்கான மாற்றுகளை ஆராய்தல்
தேர்ந்து செயலும் - தேர்ந்துசெயல் - செயல்கை கூடும் வகையறிந்து செயல்புரிகை ஆற்றலும்
ஒருதலை - n. id. +. 1. One-sidedness; ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம்(குறள், 1196). 2. Positiveness, certainty; நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225),
ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம்.
ஒருதலையாச் சொல்லலும் - கேட்போர் மறுக்க முடியாத அளவிற்கு நிச்சயமாக உரைத்தல்/ சொல்லுதல்
வல்ல(து) - வலிமையுள்ள(து); திறமையுள்ள(து).
அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்,  2. Office and functions of a minister;மந்திரித்தன்மை.

முழுப்பொருள்
இக்குறளில்  ஒரு அமைச்சர் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்கிறார்.

முதலாவதாக, ஒரு செயலை செய்யும் பொழுது அதனை பற்றிய தெளிவு அமைச்சருக்கு மிக முக்கியம். ஏனென்றால் அதனை செயல்படுத்த வேண்டும் மற்றவருக்கு  எளிதாக விளங்கும் அளவு தெரிவிக்க வேண்டும். ஆதலால் அச்செயலை பற்றிய புரிதலுக்கான ஆராய்ச்சியை திறம்பட செய்தல் மிக அவசியம். ஒரு செயலுக்கு தேவையான மாற்றுகளையும், செயலின் விளைவுகளையும், செயல் ஆற்றப்படும் இடத்தின் தன்மையையும், காலத்தின் தன்மையையும், சிறப்பாக செய்வதற்கு தேவையான வலிமையையும், செய்யும் பொழுது வரக்கூடிய இடர்களையும், இடர்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் ஆராய்ந்து இருக்க வேண்டும். செயல் அறம் சார்ந்த ஒன்றா என்றும் தெரிந்து இருக்க வேண்டும். ஆராய்ந்தப்பின் சிறந்த ஐயமில்லா (பெரும்பாலும்) நிலைப் பிரியா முடிவினை எடுத்தல் வேண்டும். ஆக ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக எவ்வித ஐயப்பாடுகளும் இல்லாமல் அறிந்துக்கொள்ளுதல் மிக அவசியம். 

இரண்டாவதாக, ஒரு செயலை திறம்பட செயலாற்றுவது அமைச்சருக்கு அவசியம். ஒரு செயலை தெரிந்துக்கொள்ளுதல் வேறு அதனை களத்தில் ஆற்றுவது வேறு. களத்தில் பல சவால்கள் உள்ளன. உதாரணமாக செயலை ஆற்றும் மனித வளம், செயலுக்கு தேவையான நிதி, செயலுக்கு வரக்கூடிய இடர், காலத்தின் தன்மை, இடத்தின் தன்மை என்று பல உள்ளன. இவை அனைத்தையும் கற்று தேர்ந்து இருக்க வேண்டும். தன்னிடம் வேலை செய்வோரிடம் வேலையை செய்து முடித்துக்கொள்ளும் தலைமை பண்பு இருத்தல் வேண்டும். ஒரு செயலை துவங்கும் பொழுது எல்லோருக்கும் பரவலாக ஊக்கம் இருக்கும். ஆனால் சிறிது காலம் கழித்து ஊக்கம் குறையும். சில நேரங்களில் இடர்கள் வரும் பொழுது ஊக்கமே இல்லாமல் மக்கள் துவண்டு இருப்பர். அத்தகைய ஊக்கமில்லா நேரங்களில் ஊக்கமுடையச் செய்வது தலைமையின்/அமைச்சரின் பொறுப்பாகும். மேலும், செயலை செய்யும் பொழுது நாம் திட்டமிட்ட மாதிரி நடக்காது. நீண்ட கால நன்மையையும் தற்கால சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு எது நன்மை பயக்கும் அதனை செய்யவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி திட்டங்களை புதுப்பித்துக்கொண்டு செயலாற்ற வேண்டும்.

மூன்றாவதாக, ஒரு செயலை தலைவனிடமும், மற்ற அமைச்சர்களிடமும், செயலின் பங்கு வகிக்கும் முக்கிய தலைவர்களிடமும், மக்களிடமும் தொடர்புக்கொண்டு செயலை அவர்கள் எவ்வித ஐயப்பாடுமில்லாமல் தெளிவாக உணரும் படி  திறம் பட ஞயம் பட உரைத்தல் வேண்டும். ஆயினும் சொல்லும் கருத்தில் ஒரு தீர்க்கம் வேண்டும். அதாவது நிச்சயத்தன்மை. ஏனெனில் ஒரு செயலை விளக்கும் பொழுதோ ஆற்றும் பொழுதோ பிறர் பல கருத்தினை கூறுவர். ஒவ்வொருவர் கூறுவதுக்கு ஏற்றவாரு செயலை மாற்றிக்கொள்ள கூடாது. தன் நிலையில் இருந்து பிரியக்கூடாது. (அதற்காக அமைச்சர் பிறருக்கு செவி கொடுக்கக்கூடாது என்றில்லை. அவையெல்லாம் திட்டம் தீட்டும் பொழுதே ஆராய்ந்து இருக்க வேண்டும்). அப்படி செய்தால் (செயலை ஆற்றும்) மக்களிடம் குழப்பமே ஏற்படும். ஒரு அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் இருப்பர். நாம் ஒரு திட்டத்தை தீட்டினால் அதனால் இன்னொரு அமைச்சருக்கு வேலை அதிகமாக கூடும். அதனால் அவர் தனது வேலையை குறைக்க நமது திட்டத்தை குறைச்சொல்லக்கூடும். அந்த அமைச்சர் நமது நண்பர் அல்லது வேண்டியவர் என்பதற்காக ஒருதலையாக நடந்துக்கொண்டு செயல்படக்கூடாது. எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதோ அதனை செய்ய வேண்டும். இது குறிப்பாக நிர்வாகத்திற்குப் பொருந்தும். 

ஆக இம்மூன்று பண்புகளும் அமைச்சருக்கு அவசியம் என்கிறார் திருவள்ளுவர். இது நிர்வாகத்தில் வேலை செய்யும் தலைவர்களும் பொருந்தும். 

ஒர் அமைச்சன் தன்னுடைய ஆற்றலால் அடுத்து வருவனவற்றை முன் கூட்டியே கூர்த்த மதியால் உணர்தலும், அதற்கு ஏற்றவாறு தாம் செல்லும் பாதையை திருத்திக்கொள்வதையும், கம்பர் மாரீசவதைப் 167 படலத்தில், “ஆற்றலால் அடுத்ததெண்ணும் அமைச்சரை”, என்கிறார்.

சிறுபஞ்சமூலப் 57 பாடல் இக்குறளில் பேராற்றல் உள்ள அமைச்சருக்கு இருக்கவேண்டியனவாக, அவன் அறிந்திருக்க வேண்டியனவாக இவ்வாறு கூறுகிறது.

“தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்
இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் – துன்னி
அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான்”

மேலும்
“செறிந்தவர் தெளிந்த நூலால் சிறந்தன தெரிந்து கூறி
அறிந்தவை ஆற்ற கிற்கும் அமைதியான் அமைச்சன்” (சூளா.மந்திரப்.9)

“செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியுங்  காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்” (கம்ப.மந்திரப் 9)


மேலும்: அஷோக் உரை

தூக்கி வினை செய்
அழகு அலாதன செய்யேல்
 நன்மை கடைப்பிடி.
பேதைமை அகற்று

செய்வன திருந்தச் செய்
பருவத்தே பயிர் செய்
கௌவை அகற்று
தோற்பன தொடரேல். 
வித்தை விரும்பு

ஞயம்பட உரை
சுளிக்கச் சொல்லேல்
மிகைபடச் சொல்லேல்
மொழிவது அற மொழி.

பரிமேலழகர் உரை
தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.)

மணக்குடவர் உரை
ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தெரிதலும் -ஒரு வினையைச் செய்யும் வகைபலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந்ததை அல்லது முழுவாய்ப்பாகவுள்ளதை ஆராய்ந்து அறிதலும்; தேர்ந்து செயலும் -அங்ஙனம் அறிந்தபடி செய்யுங்கால் வெற்றிக் கேதுவான வழிகளைக் கையாளுதலும்; ஒருதலையாச் சொல்லலும் - சிலரைப் பிரித்தல் பேணுதல் பொருத்தல் பற்றி இன்னதே செய்யத்தக்க தென்று திட்டவட்டமாகச் சொல்லுதலும்; வல்லது அமைச்சு -வல்லவனே அமைச்சனாவான்.

ஐயுறவாகவும் கவர்படவும் சொல்லின் வெற்றியின்மையொடு கேடாகவும் முடியுமாதலின், 'ஒருதலையா' என்றார்.

மு.வ உரை
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

No comments:

Post a Comment