நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

குறள் 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன்
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நெடு - நீண்ட
நெடுநீர் - கடல்; நீட்டித்துச் செய்யும் இயல்பு [Dilatoriness, dispositionto procrastinate]

மறவி - மறதி; கள்; தேன்; பதநீர்; மறதியுள்ளவன்; அழுக்காறு; இழிவு; குற்றம்.

மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு

துயில் உறக்கம்; கனா; தங்குகை; இறப்பு; புணர்ச்சி; ஆடை.
நான்கும் - நான்கு குணங்களும்

கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை.
கெடும் - அழியும்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
நீரார் - குணம் படைத்தோர் 
காமக் - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை
கலன் - அணிகலன்; கீழ்மகன்; மரக்கலம்; பூண்; யாழ்; கோட்சொல்லி; வில்லங்கம்.

முழுப்பொருள்

சிலந்தியின் உழைப்பை மேற்காணும் யூட்யுப் வீடியோவில் காணலாம்

எறும்பின் உழைப்பை மேற்காணும் யூட்யுப் வீடியோவில் காணலாம்


ஒருவனை அழிக்கும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அவனது நாட்டிற்கும் அவனுடைய அலுவகத்திற்கும் தீங்கு விளைவுக்கும் நான்கு குணங்களை திருவள்ளுவர் கூறுகிறார் அவை கீழே குறிப்பிடப் படுகின்றன. மேலும் ஒரு செயல் செய்வது கடினம். அதனால் தான் குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்றும் குறள் 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்றும் கூறியுள்ளார்). ஏன் ஒரு செயல் கடினம் என்றால் கீழ்காணும் முக்கியமான காரணங்களும் உள் அடங்கும்.

முதலாவதாக, நெடுநீர். காலம் தாழ்த்தாது செய்யவேண்டிய செயலை காலம் தாழ்த்தி செய்யும் இயல்பு. ஒரு செயலை செய்ய வேண்டிய நேரத்திற்குள்ளாக செய்யாமால் நீட்டித்து செய்யும் இயல்பு. பெரும்பாலும் இத்தகைய இயல்பு விளைவுகளை வேறு மாதிரி தரும் அல்லது பலனே தராது. ஆதலால் இத்தகைய இயல்பு அழகல்லாதது. துன்பத்தையே தரும். உதாரணமாக ஒளவையார் சொன்னதுப்போல் விவசாயத்தில் "பருவத்தே பயிர் செய்"-ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் விளைச்சல் இருக்காது. பருவத்தில் பயிர் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார்ப்போல் நிலத்தை ஆயுத்தம் செய்து இருத்தல் வேண்டும். அப்படி செய்தால் தான் தக்க நேரத்தில் மழை வந்த பின்பு பயிர் செய்ய முடியும். மழை வந்த பின்பு நிலத்தை ஆயுத்தம் செய்வது கடினமான/ முடியாத செயல்.

மேலும் பல காரியங்களை தள்ளிப்போட்டால், ஒரு முக்கியாமான காரியம் வரும் பொழுது எல்லா காரியங்களும் கழுத்தளவு வந்து நம்மை பயமுறுத்தும். அத்தகைய நிலையில் நாம் எந்தச் செயலை செய்வது என்று திண்டாடுவோம். 

ஆதனால் எதையும் நாளை என்று சொல்லாமல் இன்றே செய். புதுவருடத்திற்காகவும் புது வருட தீர்மானத்திற்காகவும் (resolution) காத்திருக்காதே.

பொதுவாக இரண்டுநிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு செயல் என்றால் அதனை உடனே செய்துவிடு.

இரண்டாவதாக, மறவி. மறதி. ஒரு தலைவனுக்கு அல்லது தனி நபருக்கு பல கடமைகள் இருக்கும். அத்தகைய கடமைகளை மறவாமல் செய்தல் வேண்டும். ஒரு கடமையை சிறப்பாக செய்து மற்றொன்றில் மறந்து கோட்டை விட்டால் அது துன்பத்தையே தரும்.

வேலையில் கவனம் செய்து வீட்டையும் வீட்டில் உள்ள பெற்றோர் மனைவி பிள்ளைகளையும் மறந்தால் என்ன ஆவது? சென்ற நாட்கள் மறுபடியும் வராது. குழந்தைகளை சான்றோராக வளர்க்கும் பொறுப்பில் இருந்து தவறி பின்பு அவர்கள் பெரிய ஆளா உலகில் தகாத செயல்களை செய்தால் அது இழிவே. அதனால் அவர்களுக்கு துன்பமே. குறள் 435 "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" என்று முன்னமே கூறி இருக்கிறார். குறள் 138 "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்" என்றும் முன்னமே கூறி இருக்கிறார். ஆதலால் தன் கடமையில் இருந்து மறவ கூடாது. [மேல் சொன்ன குறள்கள் கடமை என்று வள்ளுவர் சொல்லவில்லை. குடும்ப பொறுப்புடன் சற்று தொடர்பு செய்தேன்]

இதுப்போல் உதாரணமாக ஒரு அறுவை சிகிழ்ச்சை மருத்துவர் சிகிழ்ச்சையில் ஒரு செயலை மறந்தாலும் அது நோயாளியின் உயிரையே பாதிக்கக்கூடும்.

மூன்றாவதாக, மடி. மடி என்ற சொல்லுக்கு சோம்பல் என்று பொருள். சோம்பல் என்பது எந்த ஒரு செயலையும் உற்சாகமாக செய்ய விடாது. அது நம்மை மட்டும் இன்றி நம்மை சுற்றி இருப்போரையும் பாதிக்கும். ஊக்கமிழக்க செய்யும்.  ஆதலால் தான் பாரதி "சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி" என்று கூறியுள்ளார் போலும். அதுமட்டும் இன்றி செயலின்மை என்பது ஒரு இனிய மது போன்றது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். அந்தப் போதையில் சிக்கிக்கொள்ளக்கூடாது.

சோம்பலினால் நாம் ஒரு செயலை தள்ளிப்போடுகிறோம். அதனால் மற்ற செயல்களை தள்ளிப்போடுகிறோம். இதனால் காலம் தவறி ஒரு செயலை செய்கிறோம். காலம் தவறி ஒரு செயலை செய்தால் நாம் நினைத்த பலனை பெறமுடியாது. 

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ஒருமுறை கூறியுள்ளார் சோம்பல் என்று நாம் கருதுவது ஒன்று இல்லை. அது மூன்று என்றார்.

1) முதலாவது சோம்பல்: நாம் பொதுவாக கருதுவது. தன்னை யாரும் கட்டிப்போட வேண்டாம். நானே என்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று முழங்காலைக் கைகளால் கட்டிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் சோம்பல்.

2) இரண்டாவது சோம்பல்: ஒளவையார் சொன்ன சோம்பல். சோம்பித் திரியேல் [முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே] என்ற வகைச் சோம்பல். அதாவது, எந்த நோக்கமுமின்றிச் சோம்பேறித்தனமாகச் சுற்றித் திரிவது. இது செயலளவிலும் நிகழும், மனதளவிலும் நடக்கும்.

3) மூன்றாவது சோம்பல்: மிக கேடு விளைவிப்பது!. அது, தன்னால் முழுமையாகச் செய்ய முடியும் என்றாலும், இந்த அளவுக்குப் போதும் என்று ஒவ்வொரு பணியையும் அரைகுறையாகச் செய்யும் ஆபத்தான சோம்பல். இது, துறைதோறும் புகுந்து அனைத்து வளர்ச்சிகளையும் அரைகுறையாக ஆக்கி, அழிவுக்குள்ளாக்கும் ஆக்கம்.

நான்மணிக்கடிகையும் “மடிமை கெடுவார்கண் நிற்கும்” என்கிறது.

சோம்பல் மிக கொடியது. நமது ஆற்றலை கெடுப்பது. ஆதலால் சோம்பலை முறி.

நான்காவதாக, துயில். ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 7-8 மணி உறக்கம் தேவை. ஆனால் அதனை மீறி பகலில் தூங்குவது, தேவைக்கு மேலாக தூங்குவது, தூக்க நிலையில் இருப்பது செயல் ஆற்றும் வீச்சையே குறைக்கும். நமது முழு ஆற்றலை அடைய விடாது. அதிக தூக்கத்தினால் சோம்பலும் வரும். உற்சாகமிழக்கச் செய்யும். ஆதலால் தூக்கம் கேட்டையே தரும். பாரதியாரும் தூக்கமில்லாத விழிப்பே சக்தி என்கிறார். ஒளவையாரோ அனந்தல் ஆடேல் [மிகுதியாகத் துங்காதே], வைகறைத் துயில் எழு [அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்] என்கிறார். ”நல்ல பொழுதையெல்லம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்” என்ற பாடல் வரியையும் நினைவில் கொள்க.

ஆதலால் சரியான நேரத்தில் உறங்கி விடியற்காலையில் எழுந்து செயலாற்ற வேண்டும். அளவுக்கு அதிகமான தூக்கம் கூடாது. அப்படி அதிகமாக தூங்கினால் அது ஒருவது துன்பத்தையே தரும்.

“அந்தக் கட்டிலின் கீழே அவரது கனவுகள் உதிர்ந்து கிடப்பதாகவே நினைத்தார்” என்று எஸ்.ராமகிருஷ்ணன் ”அஸ்தபோவில் இருவர்” சிறுகதையில் எழுதியுள்ள வரிகள் நினைவுக்கு வருகின்றன

ஆதலால் இந்த நான்கு குணங்களை இயல்பாக (தன்னை அறியாத ஒரு விருப்புடன் அல்ல அறிந்த ஒரு விருப்புடன்) செய்வோருக்கு இக்குணங்கள் அழிவையே தரும் என்கிறார் திருவள்ளுவர்.

இப்படி அழிவை தரும் என்று அறிந்தும், இவ்வியல்புகளை தொடர்ந்து பேணும் கீழ்மகன்கள் விரும்பி அணியும் அணிகலன் இக்கேடான இயல்புகள். ஏன் அதனை விரும்பி அணிகிறார்கள் என்றால், இது இவர்கள் உதறக்கூடியதே. மற்றவர்கள் இவர்கள் மேல் செய்வதில்லை. இவர்கள் இவர்களுக்கே (விரும்பி) செய்துக்கொள்ளும் தீமை.

ஒப்புமை
“உறக்கமுற்றார் என்னுற்றார் எனும் உணர்வி னொடும்ஒதுங்கி” (கம்ப.நாடவிட்ட.30)

மேலும்: அஷோக் உரை
மேலும்: TS.நாகராஜன்

ஆத்திச்சூடி
பருவத்தே பயிர் செய்.
சனி நீராடு
சோம்பித் திரியேல்.
அனந்தல் ஆடேல்
வைகறைத் துயில் எழு.

வைகறைத் துயில் எழு [நன்றி: அறம் செய்ய விரும்பு]
[அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்]
கட்டுரை:
வைகறை என்பது விடியற்காலை 2 முதல் 6 மணி வரையுள்ள நேரம், சூரிய உதயத்துக்கு சற்று முன் வரை. நேரடியான சூரியக்கதிர் தாக்கமில்லாத இந்நேரத்தில்தான் நம் உடலுக்கு தேவையான சுத்தமான பிராணவாயு (ஓசோன்* படலம் மூலம்) கிடைக்கிறது.

(வைகறை) இந்நேரத்தில்தான் நம் உடலுருப்பான நுரையீரல் முழு ஆற்றலுடன் செயல்படுகிறது. நுரையீரலின் பிரதான வேலை (உள்வாங்கிய) பிராணவாயுவின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்வது! ஆகவேதான், மூச்சுப்பயிற்ச்சி சார்ந்த – தியானம், யோகாசனம், உடற்ப்பயிற்ச்சி, வேகமான நடை, ஓடுதல் போன்றவை இப்பொழுதில் நல்லது.
ஆக, வைகறையில் துயில் எழுவது நமக்கு அன்று கிடைக்கும் முதல் வெற்றி! இத்தொடு,
1. முழு ஆற்றலோடும், சுத்தமான பிராணவாய்வோடும் இரத்தம் சுத்திகரிக்கபடுவதால் நோய்களிலிருந்து பாதுகாக்கபடுகிறோம்.
2. அன்று முழுவதும் சுறுசுறுப்பாகயிருக்க உதவும்
3. அதிக (பொன்னான) நேரம் கிடைக்கும்.
4. அவசரமில்லாமல் நிதானமாக இருக்க\ செயல்பட உதவும்
5. நல்ல சிந்தணைகளை தூண்டும்.

இரசணைக்கு, வைகறை மேகங்களின் அழுகு!

வைகறை இலக்கிய பாடல்:
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையார் கண்ட முறை
(ஆசாரக்கோவை# – 41)

*இது சுத்தமான பிராணவாயு கிடைக்க உதவும் படலம். இந்த படலத்தில் தான் இன்று ‘பூவி வேப்பமாகுதல்’ காரணமாக ஒரு துளை உண்டாகி அது பெரிதாகிக்கொண்டே போகிறது, இது பிராணவாயு சுத்திகரிப்புக்கு பெரிய இடையூர்.

#மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பரிமேலழகர் உரை
மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக்கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம். (முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)

மணக்குடவர் உரை
விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம். 

காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நெடுநீர் மடி மறவி துயில் நான்கும்- நீட்டிக்குந் தன்மை, சோம்பல், மறதி, தூக்கம் என்னும் நான்கும்; கெடும் நீரார் காமக் கலன்- இறக்கும் நாள் நெருங்கியவர் விரும்பியேறும் மரக்கலங்களாம்.

நெடுநீர் என்பது விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு.மடி என்பது முயற்சிசெய்யாது சும்மாயிருக்குஞ் சோம்பல். மறவி என்பது செய்ய வேண்டியதை மறந்து விடுதல் .துயில் என்பது பகலுந்தூங்குதல் அல்லது தூக்க நிலையிலிருத்தல்.இந்நான்கும் ஊக்கமின்மையின் வகைகளாதலின் உடனெண்ணப்பட்டன.நெடுநீர் என்னுங் காலநீட்சி பற்றிய பண்புப் பெயர் அக்காலத்தில் நிகழும் செயல்மேல் நின்றது. கெடுநீர்-இறப்பு நெருங்கிய தன்மை. நெடுநீர் முதலிய நான்கும் ஊக்கமில்லார்க்கு இன்பந்தருவனபோற் காட்டிப் பின்பு மீளாத் துன்பமாகிய அழிவைத்தருவ தால், அவை வாழ்நாளெல்லை யடுத்தவர்க்கு இன்ப நீர்ச்செலவு நிகழ்த்துவதுபோற் காட்டி, அவர் விரும்பி ஏறியபின் அவரை நடுக்கடலில் வீழ்த்திவிடும் மரக்கலங்களுக்கு ஒப்பாகும் என்றார். ' காமக்கலன், என்பதால் விரும்பியேறுதல் பெறப்படும். இத்தொடர்க்கு விரும்பிப்பூணும் அணிகலன்கள் என்று உரைப்பது பொருந்தாது .பொருந்த வேண்டுமாயின் , எரிமருந்து கலந்த அணிகள் என்று கொள்ள வேண்டும். இக்குறளில் அமைந்துள்ளது உருவகவணியாம்.

மு.வ உரை
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்

சாலமன் பாப்பையா உரை
காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

நன்றி: சக்தி (மகாகவி சுப்ரமணிய பாரதியார்)

துன்ப மங்லாத நிலையே சக்தி, 
      தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி, 
அன்பு கனிந்த கனிவே சக்தி, 
      ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி, 
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி, 
      எண்ணத் திருக்கும் எரியே சக்தி, 
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி, 
      முக்தி நிலையின் முடிவே சக்தி. 

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி, 
      சொல்லில் விளங்கும் சுடரே சக்தி, 
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி, 
      தெயவத்தை எண்ணும் நினைவே சக்தி, 
பாம்பை அடிக்கும் படையே சக்தி, 
      பாட்டினில் வந்த களியே சக்தி, 
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும் 
      சங்கரன் அன்புத் தழலே சக்தி. 

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி, 
      மாநிலங் காக்கும் மதியே சக்தி, 
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி, 
      சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி, 
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி, 
      விண்ணை யளக்கும் விரிவே சக்தி, 
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி, 
      உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.
- மகாகவி சுப்ரமணிய பாரதியார்


நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடைக் கல்லாய் விளங்குவதாக நாம் ஊழலை நினைக்கிறோம். அதன் தாயாக லஞ்சத்தைக் கருதுகிறோம். இரண்டும் இணைந்து அகத்திலும் புறத்திலும் உண்டாக்கிய அழுக்குகளைக் களைந்து தூய்மை இந்தியாவை உருவாக்கக் கருதும் இந்த வேளையில், இவற்றையெல்லாம் விடப் பெரியதொரு தடைக் கல்லாக விளங்குவது வேறொன்றாக இருக்கிறது.

அதுதான் சோம்பல்.

தனி மனித நிலையில் தொடங்கிச் சமுதாய அளவில் படர்ந்து தேச அளவில் விரிந்து நிற்கும் இந்நோய் உள்ளிருந்து உருக்கும் அகநோய். இதனைப் பெற்ற அன்னையின் பெயர் தாமதம். தந்தையின் பெயர் மறதி. உற்ற துணையாய் உடன் வருவது உறக்கம்.

தானும் கெட்டு, தன்னைச் சார்ந்த யாரையும் கெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை இவை என்பதால், இந்நான்கையும் இணைத்துக் கெடுநீரார் காமக்கலன் என்றார் திருவள்ளுவர்.

இதில் காமக் கலன் என்பதற்கு, இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம் என்று விளக்கம் தருகிறார் பரிமேலழகர். அது அவர் காலத்து வாகனம். இன்றைக்கு இக்கலன் விமானத்தைவிடவும் விரைந்து கொண்டுபோய் அழிவிற்செலுத்தும் பறக்கும் விண்கலமாக விளங்கி வருகிறது என்றால் அது மிகையில்லை.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

என்பது வள்ளுவர் வாக்கு.

தாமதமாகிய நெடுநீரும், மறதியாகிய மறவியும் கூடிப் பெற்ற குழந்தை சோம்பல். அது முதலில் துயிலில் ஆழ்த்தும். பின்னர், எந்தப் பயனுமின்றி வாழ்க்கையை உள்ளீடற்று அழித்து மரணத்தில் வீழ்த்தும். உறக்கம் என்பதே மரணத்துக்கான ஒத்திகைதானே!

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்பதுதானே உண்மை. ஆக, உறங்காமல் இருப்பது மாத்திரம் வாழ்க்கையன்று. இறவாமல் இருப்பது, இதற்குத் துயிலாமல் இருப்பது என்பதன்று பொருள். துயிலுங்காலத்தில் துயின்று எழும் காலத்தில் எழுதல் வேண்டும். தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி என்பார் பாரதி.

சோம்பேறிதான் அதிகம் தூங்குவான் என்பார் என் தாயார். அது மட்டுமல்ல, சோம்பேறிதான் அதிகம் பொறாமைப்படுவான் என்றும் சொல்வார்.

பொறாமையை, அழுக்காறு என்பார் வள்ளுவர். அனைத்து அழுக்குகளையும் உள்கொண்டு வந்து சேர்க்கும் வழி என்று அதற்குப் பொருள். அது முதலில் மனத் தூய்மையைக் கெடுக்கும். பின்னர் புறத் தூய்மையையும் பல்வேறு வழிகளில் பாழ்படுத்தும்.

இவ்வளவுக்கும் காரணமாகும் சோம்பலுக்கு எது மருந்து? சுறுசுறுப்பு என்று பலர் சொல்லுவார்கள். ஆனால், பாரதி சொல்கிறார் அதுவும் பால பருவத்தில் இருந்தே தாய்ப் பால் போலத் தரவேண்டிய மருந்தாக, மாற்றாகப் பாப்பாவுக்குச் சொல்கிறார்:

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா
சரி. அது வந்துவிட்டால், மாற்று மருந்து
- தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா

பணியெனத் தாய் கொடுப்பதை, அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லித் தப்பிக்கிறபோது, நெடுநீர் ஆகிய தாமதம் வருகிறது. மறுபடி அந்த வேலை என்னாயிற்று என்று தாய் கேட்கிறபோது, மறந்து

போனது நினைவுக்கு வருகிறது. மறதிகளின் அடுக்ககமாகத் துயில் வருகிறபோது, நம்மையே நாம் மறந்துவிடுகிறோம். அப்புறம் வேலையாவது, விருப்பமாவது எல்லாம் இழந்து கையற்று நிற்கிற நிர்பந்தம் வந்துவிடுகிறது.

அவர்கள்தான் ஒருபொழுதும் வாழ்வது அறியாத வீணர்கள். ஆனால், அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், அப்படி, இப்படி என்று ஆயிரக்கணக்கான அல்ல, கோடிக்கணக்கான மனக்கோட்டைகளைக் கட்டிச் சொற்கோட்டங்களை உருவாக்கிப் பின்னர் சோர்ந்து அழிவார்கள்.

இது தெரிந்தும் இவற்றை விடமுடியாமல் தவிப்பவனைப் பேதை என்கிறார் வள்ளுவர். மடிமடிக் கொண்டொழுகும் பேதையின் குடும்பம் அவனுக்கு முன்னதாகவே அழிந்து விடுமாம். ஒரு குடும்பத்தின் உள்ளே இந்தச் சோம்பல் புகுந்துவிட்டால், அது பகைவரிடத்தில் அக்குடும்பத்தாரை அடிமையாக்கிவிடும் என்று தொடர்ந்து எச்சரிக்கிறார் அவர்.

அந்த இடத்தில்தான் பாரதி விழிக்கிறார். நாட்டு விடுதலையை மனக்கொண்டு பாட்டுக் கட்டும் பணி செய்கிற அவர், புதுச்சேரி மணக்குள விநாயகரிடத்தில் தன் மனத்தை நிறுத்தி ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தம் பணியாகிய தமிழ்ப் பணியைத் தொடங்குகிறார்.

அந்த உடன்படிக்கையின் முதல் திட்டம் - நமக்குத் தொழில் கவிதை. அடுத்தது - நாட்டுக்கு உழைத்தல்.

மனிதர்க்கே உரிய மகத்தான நோயான சோம்பலைப் புறந்தள்ள அடுத்த ஒப்பந்தத் திட்டமாக, பணியாக, மூன்றாவதைக் குறிப்பிடுகிறார். அதாவது, இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று சொல்லி நிறுத்துகிறார்.

கண் இமைக்கும் அந்தக் கணத்தில்கூடச் சோம்பல் வந்து மனிதனைச் சுனாமிபோலச் சுருட்டிவிடும் என்று அஞ்சுகிறார் அந்தப் பெருங்கவி. இது அவர் அனுபவத்தில் கற்ற அறிவியல்.

புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஜூலை மாதக் காலைப்பொழுது. (2.7.1915)

வியாதி பயம், சோம்பர். இன்று காலைப்பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன என்று நாட்குறிப்புப்போல் எழுதத் தொடங்குகிறார். இன்று காலைப்பொழுது என்றால், அது நேற்றும் வந்திருக்கிறது என்று பொருள். இதுபோல் பல காலைப்பொழுதுகளையும் காவு கொண்டிருக்கிறது என்று பொருள்.

பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுத வேண்டும். கடிதங்கள் எழுத வேண்டும். சோம்பர் உதவாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதுபோல எழுதித் தள்ளுகிறார் பாரதி. இதற்குச் சித்தக்கடல் என்று தலைப்பு.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்யுமானால், அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகம் உண்டு என்று எழுதுகிறார்.

இதில் இவர் சுட்டும் பராசக்தி, சூலம் ஏந்திக் குங்குமம் அணிந்த பெண் தெய்வ உரு அன்று. பேருருக் கொண்ட பிரபஞ்ச ஆற்றல் அது, துன்பமிலாத நிலை, தூக்கமிலாத கண்விழிப்பு, சோம்பர் கெடுக்கும் துணிவு

துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக் கண்விழிப்பே சக்தி

என்றெல்லாம் இந்தப் பராசக்தியைச் சித்தக் கண்ணாடியில் படம் பிடித்துக் காட்டும் பாரதி, "சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி' என்றும் தெளிவுபடுத்துகிறார். இந்தத் தெளிவும் துணிவும் எல்லா இந்தியர்களுக்கும் வரவேண்டும்.

பதவியும் பாராட்டும் பெற விரும்பும் ஒருவனுக்குப் பணியும் முக்கியம். அதோடு, அப்பணி சோம்பல் இல்லாது தொடரும் நற்பணியாக இருத்தலும் வேண்டும் என்பது சொல்லாமல் விளங்க வேண்டும்.

இந்த நேரத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. சோம்பல் என்று நாம் கருதுவது ஒன்று இல்லை. அது மூன்று என்றார்.

முதலாவதான சோம்பல், தன்னை யாரும் கட்டிப்போட வேண்டாம். நானே என்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று முழங்காலைக் கைகளால் கட்டிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் சோம்பல்.

அடுத்தது, ஒளவையார் சொன்ன சோம்பல் - சோம்பித் திரியேல் என்ற வகைச் சோம்பல். அதாவது, எந்த நோக்கமுமின்றிச் சோம்பேறித்தனமாகச் சுற்றித் திரிவது. இது செயலளவிலும் நிகழும், மனதளவிலும் நடக்கும்.

இவற்றையெல்லாம்விட, ஆபத்தானதும், நாட்டு வளர்ச்சிக்குக் கேடு விளைவிப்பதுமானதுதான் மூன்றாவது வகைச் சோம்பல்.

அது, தன்னால் முழுமையாகச் செய்ய முடியும் என்றாலும், இந்த அளவுக்குப் போதும் என்று ஒவ்வொரு பணியையும் அரைகுறையாகச் செய்யும் ஆபத்தான சோம்பல். இது, துறைதோறும் புகுந்து அனைத்து வளர்ச்சிகளையும் அரைகுறையாக ஆக்கி, அழிவுக்குள்ளாக்கும் ஆக்கம்.

அகசுத்தியோடு நினைத்துப் பார்த்தால், இந்த ஆபத்து நன்கு புரியும். நம்மால் அரைகுறையாக விடப்பட்ட ஆக்கப் பணிகள்தாம் எத்தனை, எத்தனை?

இதற்காக, சென்றதையே சிந்தைசெய்து கொண்டிருந்தால், இன்றும் சோம்பலில் கழியும் ஒருநாள் ஆகிவிடுமே. காலையிலேயே இந்தக் கவலைக்கு இடம் தரலாமா? வேண்டாம். இதற்கு மாற்று மருந்தாய், பாரதி ஒரு மந்திரம் சொல்கிறார்.

நீங்கள் கருதியது கைகூட வேண்டுமா, நினைத்த காரியம் நிச்சயம் வெற்றியோடு முடிய வேண்டுமா?

முன்னர் சொல்லியதுபோலவே, மூன்று படிநிலைகளைக் கொண்ட எளிய மந்திரம். ஒன்று: நன்று கருது; இரண்டு: நாளெல்லாம் வினை செய்; மூன்று: இனி வேறொன்றும் செய்ய வேண்டாம். வேலை முடிந்துவிடும். அதாவது, நினைப்பது முடியும்.

நன்றாய் இருக்கிறதே. இதை என்று தொடங்கலாம் என்று நாள் பார்க்கிறீர்களா? நாளைக்கு என்று உள்மனம் சொல்கிறதா? சந்தேகமே வேண்டாம். உங்களுக்குள்ளும் இருக்கிறது சோம்பல். கூடவே வரும் மறதி. அது கொண்டுவரும் துயில்.

வேண்டவே வேண்டாம் என்கிறீர்களா? மறுபடியும் சோம்பல் தவிர்க்க, சோம்பலைத் தவிர்த்து இந்தக் கட்டுரையை முதலில் இருந்து படியுங்கள்...

நன்றி: சோம்பல் சுகமல்ல, சோகமே! [குங்குமம் - ஆன்மீகம் - திருப்பூர் கிருஷ்ணன்]
புறப்படத் தயாராக இருக்கிறது ஒரு மரக்கலம். வாழ்க்கைக் கடலில் கரையோரமாக நின்று பயணிகளை எப்போதும் ஆசை காட்டி அழைக்கும் அழகான மரக்கலம் அது. `கெட்டழிவோர் கலம்’ என்று அதற்குப் பெயர்! அதில் ஏறினால் நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்குவது நிச்சயம்! இப்படித் தெரிந்த பின் யார் இதில் ஏறுவார்கள் என்றுதானே நினைக்கத் தோன்றும்? 

அதுதான் இல்லை. இன்றளவும் இந்த மரக்கலம் பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரிந்தும் இதில் ஏறிப் பயணம் செய்வோர் எண்ணிக்கையும் அதனால் நடுவழியில் மூழ்குவோர் எண்ணிக்கையும் குறையவே இல்லை! இந்த மரக்கலத்திற்கு இப்படியொரு பெருமை! என்ன விந்தை இது!நான்கு விதமான குணங்களைக் கொண்டவர்கள் மிகுந்த ஆசையோடு இதில் ஏறுகிறார்கள். 

1. எதையும் காலம் கடந்து செய்பவர்களை இந்த மரக்கலம் மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்கிறது.
2. தாம் செய்ய வேண்டிய செயலை அடிக்கடி மறந்து போகிற ஞாபக மறதிக்காரர்களுக்கும் இந்த மரக்கலத்தில் கண்டிப்பாய் இருக்கை வசதி உண்டு! 

3. அப்புறம் இருக்கவே இருக்கிறார் நம்மில் பலரின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய திருவாளர் சோம்பல் அவர்கள். அவரை நட்பாகக் கொண்டவர்களை இந்த மரக்கலம் அளவற்ற பிரியத்தோடு வரவேற்று மனப்பூர்வமான ஆதரவு தருகிறது. 

4. தேவைக்கு மேல் நெடுநேரம் உறங்குபவர்கள் யாராவது உண்டா? வாருங்கள். இந்தக் கெட்டழிவோர் கலத்தில் ஏறி ஆனந்தமாகக் கெட்டழிந்து போகலாம்!
 இப்படியெல்லாம் சொல்வது யார் தெரியுமா? உலகம் போற்றும் ஒப்பற்ற புலவரான வள்ளுவப் பெருந்தகைதான்!
`நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்!’

(`எதையும் காலம் கடந்து செய்யும் குணம், ஞாபக மறதி, சோம்பல், மிதமிஞ்சிய உறக்கம் ஆகிய நான்கும் கெட்டொழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும்’ என்பது இக்குறளின் பொருள்.)

மடியின்மை என்ற 61ம் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள் மட்டுமல்ல, மொத்தப் பத்துக் குறள்களுமே மனிதர்கள் சோம்பலின்றி இருக்க வேண்டும் என்ற கருத்தை உரத்து வற்புறுத்துகின்றன.

`மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.’ தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த எண்ணுபவர், தம்மை வந்து தாக்கும் சோம்பலை விலக்கி முயற்சியோடு முன்னேற வேண்டும். `படியடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.’ நாட்டை ஆளும் மன்னனின் தொடர்பு தானே கிடைத்தாலும் கூட, சோம்பல் உடையவர்கள் அத்தொடர்பால் எந்தப் பயனையும் அடைய மாட்டார்கள். 

`குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் 
மடியாண்மை மாற்றக் கெடும்!’

ஒருவன் சோம்பலை ஒழித்து முயற்சியோடு வாழ முற்பட்டால் அவன் குடியில் புகுந்த குற்றம் அவன் திறமையால் மறைந்து அழியும். ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல்தான். சோம்பலால் கால தாமதம் நேர்கிறது. கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது. 

போதாக்குறைக்குச் சோம்பேறிகளுக்குத் தூக்கமும் அதிகம். தூங்கினால் உழைத்து முன்னேறுவது எப்படி?  `எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்!’ என முழங்கினார் வீரத் துறவி விவேகானந்தர். சோம்பல் என்ற சொல்லின் உச்சரிப்பைக் கூட அறியாதவர் அவர். இல்லாவிட்டால் தாம் வாழ்ந்த 39 ஆண்டுக்குள் உலகம் மெச்சும் உன்னதமான சாதனைகளை அவர் எப்படிச் செய்திருக்க முடியும்? பம்பரமாய் உலகம் முழுவதும் சுழன்று ஆன்மிகப் பெருமைகளை அகிலமெங்கும் பறைசாற்றிய பெருமகன். தம் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு உள்பட்ட வாழ்க்கைக்குள் நூறாண்டுக்கும் மேலான வாழ்க்கை வாழ்ந்து அத்தனை ஆண்டு செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்துமுடித்த தீரர். 

யோசித்துப் பார்த்தோமானால் ஒன்று புரியும். பிறந்த குழந்தையாக இருந்த போதிருந்தா விவேகானந்தர் ஆன்மிகப் பணி செய்திருக்க இயலும்? கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், குருதேவர் பரமஹம்சரால் கவரப்பட்ட அவர், வாலிப வயதில்தான் ஆன்மிகப் பிரசாரக் களத்தில் குதித்திருப்பார். 

அப்படியானால் இன்று உலகம் அண்ணாந்து பார்த்து வியக்கும் அவரது சமூக மற்றும் ஆன்மிகப் பணிகள் அத்தனையையும் ஏறக்குறைய பதினைந்தே ஆண்டுகளில் முடித்துவிட்டார் அவர். பல இடங்களில் ராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்தல், நாடெங்கும் சுற்றுப் பயணங்கள், ஓயாத சொற்பொழிவுகள், இரவெல்லாம் கண்விழித்து எழுதிய எழுத்துப் பணிகள், எந்நேரமும் படிப்பு, என்சைக்ளோபிடியாவை அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றலைத் தரக் கூடிய கல்வி என நாம் இப்போது நினைத்துப் பார்த்தால் அவர் மனிதரா இல்லை தேவ புருஷரா, எப்படி இத்தனை சாதனைகளைப் பதினைந்தாண்டுகளில் செய்து முடித்தார் என மலைப்புத் தட்டுகிறது. 

ஓயாது உழைத்த அவர் உடல் ஓய்வு வேண்டும் என்று கெஞ்சியது. ஒரு கட்டத்தில் உடலின் உருக்கமான வேண்டுகோளை அவர் புரிந்துகொண்டார். ஒரு கிரகண புண்ணிய காலம். ஜபதபங்களை முடித்த அவர் `நான் இப்போது சிறிதுநேரம் உறங்கப் போகிறேன்!’ என்று தம் சீடர்களிடம் சொன்னார்.  சீடர்கள் வியப்போடு ` கிரகண நேரத்தில் உறக்கமா?’ எனக் கேட்டார்கள். 

`ஆம், என் உடல் ஓய்வை யாசிக்கிறது. கிரகண காலத்தில் எது செய்தாலும் அது பலமடங்கு பலன் தரும் என்றும் பல மடங்கு பின்னாளில் அந்தச் செயல் வளரும் என்றும் சொல்வார்கள். நான் இப்போது உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டால் அந்தக் குறுகிய கால ஓய்வு நீண்ட நேரம் ஓய்வெடுத்த பலனை என் உடலுக்குத் தரும். இனி வரும் நாட்களில் எனக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்கவும் சந்தர்ப்பம் நேரும். ஓய்வெடுக்கவே நேரமில்லாததால்தானே நான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன்?’ என்று பதில் சொன்னார் விவேகானந்தர். 

உடனிருந்த சீடர்களுக்கு அப்போதுதான் விவேகானந்தரும் மனிதப் பிறவிதான், அவருக்கும் ஓய்வு வேண்டும் என்ற உண்மையே உறைத்தது. நமக்கு ஒன்று புரிகிறது. மனிதர்கள் தெய்வ நிலையை அடைய வேண்டுமானால் அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும் என்பதுதான் அது.  அரவிந்தர், அன்னை போன்றோ ரெல்லாம் ஒரு நாளைக்கு இருபது மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள் என்பதைப் படிக்கும்போது பிரமிப்பேற்படுகிறது. உலகியல் முன்னேற்றங்களுக்கே சோம்பல் இல்லாத கடின உழைப்பு தேவைப்படுகிற போது, அதை விட உயர்ந்த ஆன்மிக முன்னேற்றம் பெறுவதற்கு அதனினும் அதிகமான உழைப்பு தேவைப்படும் என்பதுதானே உண்மை?

`மடியின்மை’ என்ற வள்ளுவரின் அதிகாரத்திற்கு விளக்கம்போல அமைந்து எளிய தமிழில் எல்லோரையும் கவர்ந்துள்ளது ஒரு திரைப்பாடல். நாடோடி மன்னன் திரைப்படத்தில் திருத்தமான உச்சரிப்புக்குப் புகழ்பெற்ற டி.எம்.செளந்தரராஜன் குரலில் ஒலிக்கும் அந்த கருத்துள்ள பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். 

 `தூங்காதே தம்பி தூங்காதே - நீ 
 சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!’

 - என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடல், `நாட்கள் முழுவதையும் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார், சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார், விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!’ என்ற வரிகளின் மூலம் சோம்பேறிகளின் தலையில் ஒரு குட்டுக் குட்டி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்கிறது.
எதையும் உடனுக்குடன் செய்யாமல் காலங்கடந்து செய்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதில்லை. எனவே காலந்தாழ்த்தும் இயல்பை வள்ளுவர் வன்மையாகக் கண்டிக்கிறார். 

ஒரு சிறுகதைப் போட்டி நடக்கிறது. அதற்கென்று ஒரு கடைசித் தேதி நிர்ணயித்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான கதை ஒன்றை எழுதி, ஆனால் அந்தத் தேதி முடிந்த பிறகு அதை அனுப்பி வைத்தால் பரிசுபெற்றுப் புகழ்பெறக் கூடிய வாய்ப்பிருக்குமா? செய்ய வேண்டிய செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்தால்தான் வாழ்வில் வெற்றி பெற இயலும். விபத்துக்கு உள்ளாகியிருக்கும் ஒருவருக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய சிகிச்சையை அப்போதே செய்யாமல் அரைமணி 
தாமதப்படுத்திச் செய்தால் என்ன ஆகும்? அவர் உயிரே போய்விடும்.

 ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
 கருதி இடத்தாற் செயின்.’ 

‘காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.’

  - என்றெல்லாம் மற்ற அதிகாரங்களிலும் காலத்தின் பெருமையைப் போற்றுகிறார் வள்ளுவர். எனவே வாழ்வில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்கள், சோம்பல் இல்லாமல் இருப்பதோடு செய்ய வேண்டிய செயல்களை அந்தந்தக் காலங்களில் செய்து விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தேர்வு முடிந்தபிறகு பாடப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை.

மறக்காதீர்கள் என வள்ளுவர் குறிப்பிடுவதில் ஓர் உட்பொருள் இருக்கிறது. செயல்களை மறக்காமல் செய்வதோடு முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டும் என்பதும் அதில் அடங்கியிருக்கிறது. நாளை செய்து முடிக்க வேண்டிய செயல், நாளை மறுநாள் செய்து முடிக்க வேண்டிய செயல் என இரு செயல்களுக்கான கட்டாயம் உள்ளபோது, முதலில் உள்ள செயலை மறந்து அடுத்த செயலைச் செய்யக் கூடாது. எதை முதலில் செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்து முடிக்க வேண்டும்.  

பெரும்பாலான மனிதர்கள் ஒன்று கடந்த காலத்தில் வாழ்கிறார்கள் அல்லது எதிர்காலத்தில் வாழ்கிறார்கள். கடந்த காலத்தை அசைபோடுவதாலும் எதிர்
காலம் குறித்த கற்பனைகளாலும் நாம் நிகழ்காலத்தைக் கோட்டை விடுகிறோம். காரணம் நிகழ்காலத்தைப் பற்றிய ஞாபகம் நம்மிடம் இருப்பதில்லை.

`கடந்த காலம் என்பது உடைந்த பானை.

எதிர்காலம் என்பது மதில்மேல் பூனை. நிகழ்காலம் என்பதே மீட்டிய வீணை!’ என்பது கவிஞர் தாராபாரதியின் சிந்தனை வரிகள். உடைந்த பானையால் எந்தப் பயனும் இல்லை. மதில் மேல் பூனை எந்தப் பக்கம் குதிக்கும் என்பது நமக்குத் தெரியாது. நிகழ்கால யாழின் இசையை அனுபவிப்போமே? நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய செயல்களை மறந்து விடாமலும் காலந் தாழ்த்தாமலும் அவ்வப்போது உடனுக்குடன் செய்வது வாழ்க்கையை வெல்ல விரும்பும் இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு. 

அளவுகடந்த உறக்கத்தையும் வள்ளுவர் கண்டனம் செய்கிறார். அதிக நேர உறக்கம் ஆயுளைக் கெடுக்கும் என நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. தெய்வத்தைக் கூடக் குறித்த நேரத்திற்கு மேல் உறங்கவிடாமல் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகிறோம் நாம். தெய்வங்கள் உறங்குவதுமில்லை. அது பாவனை உறக்கம் தான். அதை அறிதுயில் என்கிறார்கள். தூங்காமல் தூங்கும் தூக்கம் அது. அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே உறங்கும் உறக்கம். 

தெய்வங்களே விழித்திருக்க வேண்டியது அவசியம் என்றால் மனிதர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? அதனால்தான் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாடி பாரத மாதாவை விழித்துக் கொள்ளச் செய்தார் மகாகவி பாரதியார். பாரதமாதா விழித்துக் கொள்கிறாள் என்றால் பாரத மக்கள் அனைவரும் விழித்துக் கொள்கிறார்கள் என்றுதானே பொருள்? 

எனவே காலந்தாழ்த்தாமை, மறதி இல்லாமை, சோம்பலின்மை, அதிக நேரம் உறங்காதிருத்தல் என வள்ளுவர் சொல்லும் இந்த நான்கு பண்புகளைப் பழகிக் கொண்டால் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. இந்த நான்கு குணங்களில் சோம்பல் இல்லாமல் இருப்பதுதான் மிகக் கடினம். சோம்பல் தோன்றும்போதே அதை வெறுத்து ஒதுக்கிச் செயல்படத் தொடங்க வேண்டும். 

யார் அதிகச் சோம்பேறி என்று கண்டறிய ஒரு போட்டி வைத்தார்கள். அதில் முதல் பரிசு பெற்றான் ஒருவன். பரிசை வந்து பெற்றுக் கொள்ளுமாறு, 
பத்தடி தள்ளி அமர்ந்திருந்த அவனிடம் சொன்னார்கள்.  ‘அவ்வளவு தூரம் யார் நடப்பதாம்? இங்கே வந்து என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்,’ என்று சொல்லி எனக் கொட்டாவி விட்டானாம் அவன்! 

திரைப்பாடல்


பாடல்: தூங்காதே தம்பி தூங்காதே
பாடல் வரிகள் இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
பாடலின் இசை இயற்றியவர்: எஸ்.எம். சுப்பையா நாயுடு
திரைப்படம்: நாடோடி மன்னன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958


தூங்காதே தம்பி தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

(தூங்)

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்

(தூங்)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்„டமில்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!

(தூங்)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

(தூங்)

மடியும் விரைந்து செய்வதனை நீட்டித்து செய்யும் இயல்பும் மறப்பும் துயிலும் ஆகிய இந்நான்கும் இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம்  என்பார். 

முன் நிற்கப்பாலதாய மடி செய்யுள் நோக்கி இடைநின்றது. நெடுமையாகிய காலப்பண்பு அதாவது கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. காலநீட்டத்தையுடைய செயல்முதல் மூன்றும் தாமத குணத்தின் தோன்றி உடன் நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு. நாள் உலத்தல் இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்டவழித் துன்பத்திடை வீழ்த்தலின், நாள் உலந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பி ஏறியவழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும் என்னும் உவமைக் குறிப்புக் காமக் கலன் என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர் எனும் உரைச் சிறப்பு அறிக. 

English Meaning - As I taught a kid - Rajesh
Dilatoriness/procrastination, forgetfulness, laziness, sleeping are the four qualities that can destroy a person, his fame and wealth easily. 

Questions that I ask to the kid
What are the four qualities that destroy you?

No comments:

Post a Comment