மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

 

குறள் 800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
மருவுக - மருவுதல் - கலந்திருத்தல்; வழக்கப்படுதல்; தோன்றுதல்; கிட்டுதல்; தழூவுதல்; பயிலுதல்; புணர்தல்; தியானித்தல்; பதித்தல்

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்றார் - இல்லாதவர்; பொருள்இல்லாதவர்; முனிவர்; 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. 

ஈத்தும் - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

ஒருவு - ஆடு; நீங்குகை.

ஒருவு-தல் - oruvu-   5 v. tr. 1. Toabandon, renounce; விடுதல் ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 2. To cross, passover; கடத்தல் இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67). 3. To resemble, equal; ஒத்தல் (பரிபா. 3, 32, பி-ம்.) 4. To escape; தப்புதல் பருந்தினேறு குறித்தொரீஇ (புறநா. 43, 5).--intr. To beexcepted; ஒழிதல் வேந்தனி னொரீஇய வேனோர்(தொல். பொ 32).  

ஒருவுக - நீங்குக, விலக்குக

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

இலார் - இல்லை, இல்லாதவர் 

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
மாசற்றவர்களோடு குற்றங்களற்றவர்களோடு தீமையற்றவர்களோடு எக்காலமும் நம்மிடம் மாறுப்பாடற்ற குணம் கொண்டோரோடு நட்பாய் கலந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். அத்தகைய நண்பர்களுடன் இருந்தால் வாழ்வில் நாம் சென்று அடையக்கூடிய சிகரங்கள் ஏராளம். ஆராய்ந்து அவர்களை நட்பாய் கொள்க.

ஆனால் நம்முடன் மனதாலும் குணத்தாலும் தகுதியாலும் தன்மையாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் பொருந்தாத நண்பர்களை ஏதாவது (காசு) கொடுத்தாவது விட்டு விலகுக என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் அத்தகைய தீ நட்புகள் உடன் இருந்தால் நாம் வாழ்வில் இழப்பவை மிக மிக அதிகம். நேரம் விரயமாகும். ஊக்கம் குறையும். ஆக்க சக்தி குறையும். குறிக்கோள்கள் சிறிதாகும். கவன சிதறல்கள் அதிகரிக்கும். நம்பகத்தன்மையில்லா உறவுத் துன்பகாலத்தில் கைவிடும். மனம் நோகும். இப்படி பல இழப்புகள் உண்டு. இவற்றையெல்லாம் விட சிறிது விலைகொடுத்தாவது நமது இழப்பை வெகுவாக குறைத்துக்கொள்ளலாம். நமது ஆக்கசக்தியை வேறு திசைகளில் குறிக்கோள்களில் செலுத்தலாம்.

இக்குறளின் கருத்தையொட்டிய குறளினை அறத்துப்பாலின் செய்நன்றி அதிகாரத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.


இவ்வதிகாரத்தின் நான்காவது குறளில் ஏதேனும் கொடுத்தாவது நல்ல நட்பைக் கொள்ளவேண்டுமென்றார். இக்குறளில் ஏதேனும் கொடுத்தாவது தீயவர் நட்பை விடவேண்டும் என்கிறார். எல்லாவற்றுக்கும் ஒரு விலையைக் கொடுக்கும் பழக்கம் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது போலும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.

மு.வரதராசனார் உரை
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

No comments:

Post a Comment