கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

 

குறள் 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
கெடும் - கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

காலைக் - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை

கைவிடுவார் - கைவிடுதல் - கைவிடு-தல் - kai-viṭu-   v. tr. id. +. [T.kaiviḍu, M. kaiviṭu.] To forsake, abandon,desert, as dependents; to shun, eschew, as passions; விட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்டமயல் (நாலடி, 43).  

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை

உள்ளினும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

முழுப்பொருள்
துரோகங்களை நமது சாவிலும் மறக்க முடியாது என்று கூறுகிறார் திருவள்ளுவர். நமக்கு ஒரு கேடு / துன்பம் வரும் பொழுது நம்மை கைவிடுகின்றவரின் உறவை நட்பை ஒருபொழுதும் கொள்ளவேண்டாம். ஏனெனில் அத்தகைய துரோகிகளை சாவில் (அழிவில், இறக்கும் தருவாயில்) நினைத்தாலும் நமது உள்ளம் நம்மை சுடும். ஏனெனில் போயும் போயும் இத்தகைய நட்பை வைத்துக்கொண்டு இருந்தாயே என்றும் அவர் கைவிட்டுவிட்டு சென்றதையும் நினைத்து வருந்தும். மேலும், சாவு என்பது ஒருவர் கனிவாகும் தருணமும் கூட. அது பிறரை எளிதாக மன்னிக்கும் வாய்ப்புள்ள தருணமும் கூட. ஆனால் அத்தகைய நிலையிலும் ஆராயாஅமல் கொண்ட அந்த தவறான நட்பை நினைத்து வருந்துவார் என்றால் அந்நட்பு எவ்வளவு தவறான ஒன்றாக இருக்கும். ஆதலால் ஆராய்ந்து நட்பினைக் கொள்ளவேண்டுமென்பதை வலியுறுத்துகிற குறள்.

இத்தகையோரைப்பற்றியும் கூறும்விதமாக, நாலடியார் பாடலொன்று:

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் – ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.

குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர். ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர்.

இன்னா நாற்பது பாடல் வரி இதை ஒரு வரியில் சொல்கிறது. “இன்னா,கெடும் இடம் கைவிடுவார் நட்பு”.


”உள்ளின் உள்ளம் வேமே” (நற் 184:6)
”உள்ளின் உள்ளம் வேமே” (குறுந்.102:1)
“உள்ளின் உண்ணோய் மல்கும்”  (குறுந்.150:4)
“கருதின்வேம் உள்ளமும்” (கம்ப.தாடமை.5)
“நினையும் நெஞ்சமும் சுடுவது” (கம்ப.வனம்புகு.38)

“இடர்ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்” (நாலடி.113)

“மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார்” (ஐந்திணையைம்பது.48)

“கெட்ட காலை விட்டன ரென்னாது
நட்டோர் என்பது நாட்டினை” (பெருங் 2.9:118-9) 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும். இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.

மு.வரதராசனார் உரை
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.

No comments:

Post a Comment