நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

 

குறள் 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நம் - எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை; வணக்கம்

நீத்தார் - முனிவர்; துறவியர்.

என்பர் - என்பார்கள்

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணார்- காணாது - காணாமல்

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

இவ் - இந்த

ஊரவர் - ஊர் மக்கள், ஊரார்

முழுப்பொருள் 
பிரிந்து சென்றுள்ள தலைவன் காலைப்பொழுதுகளில் என்னுடன் இருப்பதில்லை. காலை பொழுதுகளை மட்டும் கண்டுவிட்டு என் தலைவன் என்னை துறந்துவிட்டார் என்று இவ்வூர் மக்கள் அவரை ஏசுகின்றனர். ஆனால் கனவுகளில் அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிடுகிறார். கனவுகளில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை இவ்வூர் மக்கள் காண்பதில்லை என்று தலைவி கூறுகிறாள்.

அதாவது தலைவன் பிரிந்து சென்றுள்ளான் என்ற ஏக்கம் அவளுக்கு இருப்பினும் இவ்வூர் மக்கள் அவரை ஏசுவதை அவள் விரும்பவில்லை. இரவில் என்னுடன் இருக்கிறார் அது எனக்கு மகிழ்ச்சி. அவர் என்னுடன் வந்து சேர்ந்துவிட்டால் காலைவேலைகளில் இவ்வூர்மக்களின் ஏசுகளை பொசுக்க முடியும். அதாவது தன் வருத்தத்தை ஊர்மக்களின் பிரச்சனையாக கூறுகிறாள் தலைவி. உண்மையில் அது அவளுடைய ஆதங்கம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.).

மணக்குடவர் உரை
இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ?. இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?.

சாலமன் பாப்பையா உரை
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?.

No comments:

Post a Comment