அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

 

குறள் 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
அழல் - நெருப்பு; தீக்கொழுந்து; எரிவு வெப்பம் கோபம் நஞ்சு உறைப்பு கார்த்திகைமீன்; கேட்டை செவ்வாய் கள்ளி எருக்கஞ்செடி; கொடிவேலிச்செடி; நரகம்

போலும் -  pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

மாலைக்குத் - மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

ஆகி - ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆயன் - இடையன்; āyaṉ   n. ஆய்³. [M. āyan.] Man ofthe cowherd caste, herdsman; இடையன் ஆயர்வேட்டுவ ராடூஉத் திணைப்பெயர் (தொல். பொ 21). ; 2. A name of Kristna, as a herdsman--the ninth incar nation of Vishnu, கிருஷ்ணன். (p.)

குழல் - கூந்தல்; மயிர்க்குழற்சி; ஐம்பாலுள்சுருக்கிமுடிக்கப்படுவது; மயிர்; துளையுடையபொருள்; இசைக்குழல்; குழலிசை; துப்பாக்கி; உட்டுளை; ஒருவகைக்கழுத்தணி; ஒருமீன்வகை

போலும்  - pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.)

கொல்லும் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.

முழுப்பொருள்
”தலைவனின் பிரிவால் வாடுகிறேன் நான். அப்படி இருக்கையில் நெருப்புப்போல் என்னை சுடுகிறது இந்த மாலை வேளை. மாலை வேளைகளில் தூதுவனைப்போல் வரும் இடையனின் (கிருஷ்ணனின்) குழலிசைக்கூட என்னை கொல்லும் ஆயுதமாக ஒலிக்கிறதே.”  என்று வருந்துகிறாள் தலைவி.

ஏன் குழலிசை கொல்லும் கருவியாக ஒலிக்கிறது? முன்பு தலைவருடன் கூடி இருந்த நாட்களில் குழலிசை மதுரமாய் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது தலைவனை பிரிவில் இருக்கும் பொழுது அக்குழலிசை அவருடன் கூடி இருந்த நாட்களின் நினைவுகளை மறுபடியும் எடுத்துவருவதால் அவை மேலும் அவளை வாட்டுகிறது. ஆதலால் குழலிசை கொல்லும் ஆயுதமாக கருதப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.

குழலிசையும், மாலை நேரமும் சேர்த்து வருத்துதலை நற்றிணை, அகநாகனூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன.

“கொடுங்கோற் கோவலர் குழலோ டொன்றி
ஐதுவந்த் திசைக்கும் அருளில் மாலை” (நற்றிணை: 69:8-9)

“கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய் சிறுகுழல் வருந்தாக் காலே” (அகநானூறு:74:16-17)

”ஆபெயர் கோவலர் ஆம்பலொ டளைஇப்
பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப
ஆருயிர் அணங்கும் தெள்ளிசை
மாரி மாலையும் தமியள் கேட்டே” (அகநானூறு 214:12-5)

“பல்லான் கோவலர் கல்லாது ஊதும்
சிறுவெதிர்ந் தீங்குழல் புலம்புகொள் தெள் விளி” (அகநானூறு 399:11-2)

“அணிமாலைக் கேள்வற் றரூஉமார் ஆயர்
மணிமாலை ஊதும் குழல்” (கலித் 101:34-5)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.

மு.வரதராசனார் உரை
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

No comments:

Post a Comment