நனவினால் நல்காரை நோவர் கனவினால்

 

குறள் 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காரை - விரும்பாதவர் 

நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம்.

நோவர் - நோந்துக்கொள்வர்

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

காதலர்க்  -  கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணாதவர் - காணாது - காணாமல்

முழுப்பொருள் 
காலைப்பொழுதுகளில் விழித்திருக்கும் பொழுது தன்னை விரும்பாத, தன்னிடம் வந்து அன்பாக இல்லாத தலைவனை வெறுப்பார்கள் சில கன்னியர்கள். அவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது? அறியாமையா? ஆம். இவர்கள் கனவில் வரும் தலைவனிடம் இருந்து அன்பை பெறாதவர்களாக அவ்வின்பத்தை அறியாதவர்களாக தான் இருப்பார்கள் என்று தலைவி கூறுகிறாள். 

ஏன் அப்படிக் கூறுகிறாள் தலைவி? பிரிந்து சென்றுள்ள தலைவன் நனவுகளில் வரவில்லை. அதனால் அவர் என்னை விரும்பவில்லை என்றாகிவிடுமா? கனவுகளில் வருகிறாரே. அவ்வின்பம் இப்பொழுது போதும் என்று நினைக்கிறாள் அவள். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார். இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.

No comments:

Post a Comment