நனவினால் நல்காக் கொடியார் கனவினால்

 

குறள் 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது
[காமத்துப்பால், கற்பியல், கனவுநிலையுரைத்தல்]

பொருள்
நனவு - மெய்ம்மை; விழிப்பு; நினைவு; களன்; போர்க்களம்; தேற்றம்; அகலம்

நனவினால் - விழித்திருக்கையில் 

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.

நல்காக் - விரும்பாத

கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel  

கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர் 

கனவினான் - கனவு - கனா; உறக்கம்; மயக்கம்,

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

எம்மைப் - எப்பிறப்பு; எம்தலைவன்; எவ்வுலகு.

பீழிப்பது - பீழித்தல் - வருத்துதல்.

முழுப்பொருள் 
தலைவன் தலைவியை பிரிந்து சென்றுள்ள பொழுது தலைவி காமநோயால் துன்பப்படுகிறாள். அப்பொழுது அவள் கூறுகிறாள்,  காலை பொழுதுகளில் விழித்திருக்கையில் என்னை பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வராமல் இருக்கின்றார். ஏனெனில் அவர் என்னை விரும்பவில்லை. விரும்பி இருந்தால் வந்திருப்பார் அல்லவா. ஆதலால் அவர் கொடியர் ஆனார். நனவினில் தான் அப்படி என்றால் இரவு கனவுகளில் தலைவன் வந்துவிடுகிறார்.  கனவில் தலைவன் வருவதால் எனது துன்பமே மிகுகிறது. நான் வருந்துகிறேன். ஏனெனில் தலைவனின் நினைவகள் என் உறக்கத்தை கெடுகிறது. அதனால் நானும் வாடுகிறேன். நனவில் வராதவர் கனவில் வந்து என்னை வருத்துவது ஏன்?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நனவெனப் புல்லுங்காற் காணாளாய்க் கண்டது
கனவென வுணர்ந்துபின் கையற்றுக் கலங்குமே” (கலி 126:6-7)

பரிமேலழகர் உரை
(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?. இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.

மு.வரதராசனார் உரை
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.

சாலமன் பாப்பையா உரை
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?.

No comments:

Post a Comment