குறள் 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்
முழுப்பொருள்
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]
பொருள்
வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.
வீழ் - வீழு (விழு), ஆசி,
வீழ்வாரின் - வீழ்வார் - வீழ்வார் - ஆசைப்படுபவரின் (காதலரின்)
இன்சொல் - இனிமைபயக்கும்சொல்
பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு
பெறாஅது - பெறாமல்
உலகு - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்
உலகத்து - உலகத்தினுடைய
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
வாழ்வாரின் - வாழ்வார் - வாழ்கிறார்
வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.
வன்கணார் - கொடுமையானவர்
இல் - இல்லை,
தலைவி கூறுகிறாள், ”நான் விரும்பிய என்னுடைய தலைவனிடம் இருந்து இனிமையான சொற்களை நான் பெறவில்லை. இனிமையான சொற்கள் எனில் இங்கு உன்னை விட்டு நீங்கமாட்டேன் என்று பொருள் உணரவேண்டும். ஆதலால் பிரிவால் தனித்து மனவருத்ததுடன் பசலைநோயால் வாழ்ந்து வருவதால் என்னைபோல் இவ்வுலகில் மனகொடுமையை அனுபவிப்பவர் யாருமில்லை”
முதலாவதாக தலைவனிடம் இருந்து வரும் “உன்னைவிட்டு பிரியமாட்டேன்” தலைவிக்கு இனிமையான சொல். இரண்டாவதாக தலைவனை பிரிந்து வாழ்வது மிகுந்த மனகொடுமையை தலைவிக்கு கொடுக்கும்.
மேலும்: அஷோக் உரை
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.).
மணக்குடவர் உரை
தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.
மு.வரதராசனார் உரை
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
சாலமன் பாப்பையா உரை
தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.
Comments
Post a Comment