இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

 

குறள் 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
[பொருட்பால், குடியியல், இரவு]

பொருள்
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரப்பு - வறுமை; பிச்சை; யாசிக்கை
இரப்பன் - இரப்பாளன், s. A beggar, one who lives by begging, பிச் சைக்காரன். (p.)
இரப்பான் -இரப்பன் - யாசகம் செய்பவன்

வெகுளாமை - சினவாமை

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக்குறியாகநெல்வைத்துநிரப்பியநாழி.

இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்

தானேயும் - தாமே ஒரு

சாலும் - சாலுதல் - நிறைதல்; பொருந்துதல்; முற்றுதல்; மாட்சிபெறுதல்.

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
ஈவர் கொடுத்து உதவவில்லை என்றால் அவர்களிடம் யாசிப்பவர்கள் கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் வறுமையில் வரும் துன்பத்திற்கு யாசிப்பவர்களே போதுமான சான்றாக உள்ளனர். வறுமையினால் யாசிப்பவர்களுக்கு வறுமையின் துன்பம் தெரியும். ஆதலால் அதனை உணர்ந்து ஈவர் கொடுக்கவில்லை என்றால் கொடுத்த உதவ முடியாத அளவுக்கு ஏதோ ஒரு துன்பம் அவர்களை வாட்டுகிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கோபம் கொள்ளகூடாது. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே” (இனியவை.40)

பரிமேலழகர் உரை
இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி இவன் எனக்கு ஈகின்றிலன் என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும். (யாவர்க்கும் தேடவேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும். பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று. இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று

மு.வரதராசனார் உரை
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை
பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

No comments:

Post a Comment