தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்


குறள் 529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

ஆகித் - ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்

துறந்தார் - பற்றுவிட்டமுனிவர்.

சுற்றம் - உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரியதுணையில்ஒன்று; கூட்டம்; ஆயத்தார்.

அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல்

அமராமைக் -  நீங்கிய ; விரும்பாத; பொருந்தாத

காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

இன்றி - இல்லாமல்

வரும் - வந்து சேரும் 

முழுப்பொருள்
நம்முடன் உற்ற உறவாக இருந்த நமது சுற்றம் (சான்றோர்கள், நண்பர்கள், உற்றார்கள், வேண்டியவர்கள்) நம்முடைய ஒரு குற்றத்திற்காக அல்லது ஒரு தவறுக்காக அல்லது ஒரு கேடான பழக்கத்திற்காக நம்மை விரும்பாமல் நம்மை துறந்தது நீங்குவர். அப்படி அவர்கள் நீங்கியதற்கான காரணத்தை (அதாவது அமராமைக் காரணம்) கண்டறிந்து அவற்றை நம்மிடம் இல்லாத வண்ணம் (காரணம் இன்றி) நம்மை மாற்றிக்கொண்டால், விலகிச்சென்ற அச்சுற்றம் நம்மிடம் மறுபடியும் வரும். 

நண்பர் தவறு செய்யும் பொழுது அவரை விட்டு விலகுவது சரியா? என்றால். ஒரு விதத்தில் சரியே. நமது விலகல் அவரை சிந்திக்க வைக்கக்கூடும். அது ஒரு மனோத்தத்துவ சிகிழ்ச்சையாகவே எனக்குப் படுகிறது. ஆனால் தவறு செய்த நண்பர் அதைத் திருத்திக்கொண்டால் அவரை மன்னித்து எற்றுக்கொள்வதும் நமது கடமையாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய்வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், அமராமைக் காரணம் இன்றி வரும்-அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.).

மணக்குடவர் உரை
முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல் அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும். இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

No comments:

Post a Comment