பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்


குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
பொது - பொதுமையானது; சிறப்பின்மை; சாதாரணம்; வழக்கமானது; நடுவுநிலை; ஒப்பு; குறிப்பானபொருளின்மை; வெளிப்படையானது; சபை; தில்லையம்பலம்.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கான் - நோக்காமல் இருப்பவர்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

வரிசைசெய்தல் - மரியாதைசெய்தல்;

வரிசையா - வரிசை - ஒழுங்கு; நிரையொழுங்கு; வேலைமுறை; அரசர்முதலியோரால்பெறுஞ்சிறப்பு; அரசசின்னம்; மரியாதை; மேம்பாடு; தகுதி; பாராட்டு; நல்லொழுக்கம்; நன்னிலை; சீராகச்செய்யும்நன்கொடை; வீதம்; ஊர்வரிவகை; பயிர்விளைவில்உழவனுக்குரியபங்கு.

நோக்கின் நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

நோக்கி  - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வார் - வாழ்கிறார்

பலர் - அநேகர்; சபை.

முழுப்பொருள்
எல்லோரையும் சமமாக காணவேண்டும், எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே விதி. அது சரியானதும் கூட. ஆதலால் சுற்றத்தார் எல்லோரையும் ஒன்றுப்போல் கருதாமல், தகுதியும், திறமையும் (அதற்கு ஏற்ற பணிவும்) உடையோரை மரியாதை செய்யும் அரசனின் அருகில் தகுதியும் திறமையும் உடைய பல சான்றோர்கள் மன உவந்து விரும்பி மொய்ப்பர். அப்படி தகுதியும் திறமையும் அனுபவமும் உடையோர் அரசனின் அருகில் இருக்கும் பொழுது அவரால் மிக திறமையாக ஆட்சி/நிர்வாகம் செலுத்த முடியும். ஆட்சி சரிவர நிர்வகிக்கபட்டால் நாடும் முன்னேறும், மக்களும் வளம்படுவர். அதனால் அம்மன்னனை மக்களும் மிக விரும்புவர். கல்விக்கும் தகுதிக்கும் எற்ற மதிப்பை கொடுப்பது அவசியம்.

அதுவே திறமை உடையோரை மற்ற எல்லோரையும் போல் சமமாக நடத்தினால் பின்பு அவர்கள் திறமைக்கு என்னதான் மதிப்பு? அவர்களும் மற்றவர்கள் (/கல்லாதவர்கள் / திறமையில்லாதவர்) போல் அரசனுக்கு ஒன்றும் சொல்லாமல் இருப்பர். அது அரசனுக்குப் பின்னடைவே. அரசனால் தனிமனிதனாக ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு நிபுணத்துவம் வாய்ந்தோரின் துணை மிக அவசியம். அதற்கு அவர்களை மரியாதை செய்தல் அவசியம். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்” (சிறுபாண்.217)
“பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி” (புறநா.6:16)
“வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை” (புறநா.47:6)
“தத்தம் வரிசையான் இன்புறூஉம் மேல்” (நான்மணி 66)

“ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே” (புறநா.121)

பரிமேலழகர் உரை
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

No comments:

Post a Comment