உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்


குறள் 530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்
[பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்]

பொருள்
உழைப் - இடம்; பக்கம்; யாழின்ஒருநரம்பு; மான்; பசு; பூவிதழ்; ஏழனுருபு; உவர்மண்; விடியற்காலம்; கதிரவன்மனைவியருள்ஒருத்தி; வாணாசுரன்மகள்; இடைச்சுரம்.

உழைப் - (வி)உழைஎன்னும்ஏவல், பாடுபடு.

உழைப் – சுரத்தில் மத்தியமம் (நடு சுரம்), கார்காலம் (நடுவிலே அல்லது துன்பம் வந்த காலத்து)

உழைதல் - துன்பமுறல்; இரைதல்.

பிரிந்து - பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

காரணத்தின் - காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

வந்தானை - வந்தான் - வருதல்

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

இழைத்து - நுட்பமாக
இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல்

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

எண்ணிக் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்

முழுப்பொருள்
உழை என்பது ஏழு சுரங்களில் மத்திய சுரத்தைக் குறிப்பது. அதாவது நடுவிலே இருப்பது.இச்சொல் கார்காலத்தையும் குறிக்கும். ஒரு வேந்தனுக்கு கார்காலம் போல முடங்கிய காலத்தில் அவனை விட்டுப் பிரிந்து சென்றவர் என்று பொருள் கொள்ளலாம். அல்லது, நடுவிலேயே தன் சுற்றமாகிய வேந்தனைப் பிரிந்து சென்றவர் என்றும் பொருள் கொள்ளலாம். 

இக்குறள் மன்னராட்சியில் இருக்கும் மன்னர்களுக்கு, இன்றைய மக்களாட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு, வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கு, அலுவகத்தில் உள்ளோருக்கு என எல்லோருக்கும் பொருந்தும் குறள்.

ஒருவரின் (அரசரின்) துன்பகாலத்தில் அல்லது முக்கியமான தருணங்களில் அல்லது அன்றாட தருணங்களில் நடுவே தன் சுயநலத்திற்காக ஒருவர் பிரிந்து சென்றுவிடுவார். அப்படி பிரிந்து சென்ற ஒருவர் மறுபடியும் ஏதோ ஒரு காரணத்தை பொருட்டு மீண்டும் (அரசனிடம்) வந்து சேரக்கூடும். அப்படி மறுபடியும் வந்தவரை பொறுமையாக கையாள வேண்டும். அவரை நுட்பமாக ஆராய்ந்து அவருடைய எண்ணங்களை நுண்ணிதாக ஆராய்ந்து பின்பு தேவையெனில் பிறருடன் நன்கு ஆலோசித்து எண்ணி முடிவு செய்தல் வேண்டும். காரணமும் நபரும் நன்றாக இருப்பின் சேர்த்துக்கொள்ளலாம்.

நமது வீடுகளில் நமக்கு ஒரு துன்பக்காலம் அல்லது உதவி என்றால் நம்மைவிட்டு பிரிந்துவிடுவர் சொந்தங்கள். ஆனால் நமது நிலைமை முன்னேறினால் மீண்டும் வருவர். அப்படி வந்தார் என்றால் அவருடைய எண்ணம் என்னவென்று நன்கு கருத வேண்டும். நாம் சுயேட்சையாக முடிவு செய்யாமல், நமது வீட்டில் உள்ள பெரியோர்கள் (பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா) உடன் ஆலோசிப்பது நன்று. நமக்கு தெரிய யதார்த்தம் அவர்களுக்கு அனுபவம் மூலம் இருக்கும். அவர்கள் குறைந்தது ஒரு எச்சரிக்கைகளை எல்லைகளை கூறுவர். ஆங்கிலத்தில் binary என்று கூறுவார்கள். 0 (பூஜ்ஜியம்) அல்லது 1 (ஒன்று) என்று இல்லாமல். நடுவில் கூட இருக்கலாம் என்று எல்லைகளை வகுப்பர். மீண்டும் சில காலம் பழகியப்பின்பு, அவர்களின் நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்த பிறகு, அவர்களின் எண்ணம் நமக்கு நன்கு தெளிவாகும். எண்ணங்கள் நன்றாக இருப்பின் அவர்களை 1 (ஒன்று) என்ற சகஜ நிலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். இது அலுவலகம், வணிகம், வணிக உறவுகள், கட்சி என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
(வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய் அதனை ஒழிய வருவானும், அது செய்யாமற் போய்ப் பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னிடத்தினின்று நீங்கி ஒரு காரணத்தால் வந்தவனை அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்துப் பின்பு காரியமானபடி யெண்ணி அதற்குத் தக்கபடி கூட்டிக் கொள்ளுக.

மு.வரதராசனார் உரை
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

No comments:

Post a Comment