பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

குறள் 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

பேதைமை மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

நீங்க - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

சிறப்புபெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

செம்பொருள்உண்மைப்பொருள்; நேர்பொருள்; சிறந்தபொருள்; முதற்பொருளானகடவுள்; அறம்.

காண்பது - காணுதல் -  அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
அவசியமில்லாத இச்சைகளினால் அறிவு மயக்கம் ஏற்படும். அம்மயக்கத்தினால் பிறந்திறக்கும் அவஸ்த்தையும் ஏற்படும். பிறந்து இறந்து பிறந்து இறந்து என்று சங்கிலி வாழ்வின் நிலையாமையின் அடையாலம். ஆதலால் இப்பிறப்பு என்பது பேதைமை. ”குறள் 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” என்று இவ்வதிகாரத்தின் முதலிலேயே பிறப்பு பேதைமையை விளக்கியிருப்பார் திருவள்ளுவர்.

எல்லாப்பொருள்களிலும் சிறந்தது வீடு/வீடுபேறு என்றென்பதால் அதை சிறப்பு என்று கூறுகிறார் திருவள்ளுவர். அதுவே நிலையானது. பிறப்பு என்னும் துன்பத்தில் இருந்து விடுதலையளிப்பது வீடுபேறு. 

ஆதலால் மீண்டும் பிறத்தலுக்குக் காரணமாய அறியாமையாகிய மயக்கம் நீங்கி, சிறப்பென்று கொள்ளப்படுவதான வீடுபேறினை செவ்வியதான மெய்ப்பொருளை கண்டு உணர்வதே அறிவுடைமையாகும். அதை அறிவதுமட்டும் இன்றி அந்த மெய்யினை உணர்ந்து அதற்கான பாதையில் பயனிப்பதே மெய்யான அறிவு செய்யும் செயலாகும்.

கம்பன் பல நேரங்களிலும் வள்ளுவன் சொற்களையே தன் பாடல்களில் கையாண்டிருக்கிறான். பிறப்பென்னும் பேதைமை என்பதை, 
“பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குவான்” என்று மந்திரப்படலத்திலும் (31), 

“துறத்தல் ஆற்றுறு ஞானமாக் கடுங்கணை தொடர
அறுத்த லாதுசெல் லாதுநல் லறிவுந் தணுகப்
பிறத்தலாற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்த லாற்றந்த மாயையின் மாய்ந்ததம் மாயம்” என்று இராவணன் வதைப் படலத்திலும் (124) சொல்கிறான்

இக்குறளின் முற்றுக்கருத்தையும் சொல்லும்படியாக இவ்வாறும் கம்பன் பாடுகிறான். இதுவும் மந்திரப்படத்தின்கண் (22) வருவது.
“ அருஞ்சிறப் பமைவரும் துறவும் அவ்வழி
  தெரிஞ்சுற வெனவரும் தெளிவு மாய்வரும்
  பெருஞ்சிறை உளவெனிற் பிறவியென்னுமிவ்
  விருஞ்சிறை கடத்தலின் இனிய தியாவதே”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பிறப்பு என்னும் பேதைமை நீங்க - பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய் உணர்வாவது. (பிறப்பென்னும் பேதைமை எனவும் 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதல் உடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார். எல்லாப் பொருளினும் சிறந்ததாகலான், வீடு சிறப்பு எனப்பட்டது. தோற்றக்கேடுகள் இன்மையின் நித்தமாய் நோன்மையால் தன்னையொன்றும் கலத்தல் இன்மையின் தூய்தாய் , தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி , அதனைச் 'செம்பொருள்' என்றார். மேல் 'மெய்ப்பொருள்' எனவும் 'உள்ளது' எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல், இதனைச் 'சமாதி எனவும்' 'சுக்கிலத்தியானம்' எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபு ஆகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கு ஏதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலான், அதனை முன்னே பயில்தலாய இதனின் மிக்க உபாயம் இல்லை என்பது அறிக. இதனான் பாவனை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

மு.வரதராசனார் உரை
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

சாலமன் பாப்பையா உரை
பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

No comments:

Post a Comment