சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

உணர்ந்து - உணர்தல் -  uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).  

சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை.

கெட - கெடுதல் அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

ஒழுகின் - ஒழுகுதல் நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்

மற்று ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

அழித்து - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

தருதல் - கொடை

சார்தரா - பற்றுகளைத் தராது இருத்தல்

சார்தரும்பற்றுகளைத் தருகின்ற

நோய் துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

முழுப்பொருள்
சார்பு என்றால் பற்று மற்றும் பிறப்பு என்ற அர்த்தங்களை “சார்புணர்ந்து” என்ற சொல்லாட்சியில் பொருத்திப்பார்த்தால் பற்றுகளின் தன்மை அறிந்து, அவைத் தரும் மயக்கத்தை அறிந்து, அவை எப்படி நிலையான வீடுபேறினை அடைவதற்கு தடையாக இருக்கும் என்பதை உணர்ந்தால், பற்றுகள் எப்படி நம்மை நிலையில்லா பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் தள்ளிவிடுகிறது என்று உணரமுடியும். 

ஆதலால் ஒருவர், குறிப்பாக துறவறத்தில் இருக்கும் ஒருவர், பற்றுகளை முற்றும் அழித்து அவற்றைவிட்டு முழுவதுமாக நீங்கினால் அவர் மயக்கத்தில் இருந்து நீங்குகிறார். பற்றுகளை விட்டு நீங்குவதால் அதாவது பற்றுகளை சாராமல் இருப்பதால், பற்றுகள் தரும் துன்பங்கள் (துன்பம் என்னும் நோய்) அவரை விட்டு நீங்கும். 

பற்றுகளின் தன்மை அறிந்தால் மெய்யுணர்தல் சுலபம். அதன்படி நடந்தால் துன்பங்கள் நம்மை நீங்கும், வீடுபேற்றினை அடைய முடியும்

'ஈண்டு'ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க என்று பரிமேலழ்கர் கூறியுள்ளார்.

ஒப்புமை
1)இறைவற் பேணிச் சார்பறுத் துய்தி (சீவக. 1221)
2) ”பிணியறியார் .. சாய்க்காட் டெந்தலைவன் தாள்சேர்ந்தாரே” (சம்பந்தர். சாய்க்காடு, 1)
”நக்க னார் அவர் சார்வலால் நல்கு சார்விலோம் நாங்களே”(சம்பந்தர். அறையணிநல்லூர், 8)
“உமைச் சார்பவர் வசையறுமது வழிபாடே” (சம்பந்தர்.சிறுகுடி, 8)

3) “தரியேன் இனியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே” (திருவாய். 5.8:7
“மாறி மாறிப் பலபிறப்பும் பிறந் தடியையடைந்துள்ளந் தேறி
ஈறில் இன்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்” (திருவாய். 2.6:8)

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாம் திருக்களிற்றுப்படியாரில், இக்குறளை மேற்கோளாகக்கொண்டே கீழ் காணும் பாடல் வருகிறது
“சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் – சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று” (திருக்களிற்றுப்.34)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா. (ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு'ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள்இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். சார்பு - வினைச்சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.

மு.வரதராசனார் உரை
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

சாலமன் பாப்பையா உரை
எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.

No comments:

Post a Comment