பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்ற - அல்லாத

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

அறுக்கும் - அறுத்தல் -  அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்த

மற்றும் - மேலும்; மீண்டும்

நிலையாமை - நிலைத்துநில்லாமை; உறுதியின்மை, உறுதியற்றதன்மை; அழிந்துபடும்தன்மை.
 
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணப்படும் - பிறர்க்குத் தெரியவருகிறது; உணரலாம்

முழுப்பொருள்
பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு என்று நீடுக்கொண்டே இருப்பது ஒரு சுழற்சி. பிறந்தவன் இறப்பான் - அதுவே நிலையாமையின் தன்மை. இத்தகைய நிலையில்லா வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து விடுபெற ஒருவர் பற்றற்று இருத்தல் வேண்டும். ஆசைகள் முற்றும் அற்று இருத்தலே நிலையில்லா வாழ்க்கையில் சுழற்சையை அறுத்து பிறப்பில்லாமால் ஆக்கும். இல்லையேல், ஆசையுடன் இருந்தால் மீண்டும் பிறந்து இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டியதுதான்.

அறநெறிப்பாடலில் வீட்டினையுறுவான் இயல்புபற்றி கூறும் பாடலில், “பற்றின்மை ஓட்டுவானுய்ந்துபோவான்” என்பார், முனைப்பாடியார். மெய்யாகவே ஒருவன் பற்றின்மையைப் பற்றுவனாயின் அவன் வீட்டுப்பேற்றினை அடைவான் என்பதே இதன் பொருள். சைவ ஞானிகள், சிவபெருமானை பிறப்பறுக்கும் பேராளனாக உருவகம் செய்திருக்கிறார்கள். திருவாசகத்தின்கண் வரும் சிவபுராணத்தில் சிவபெருமானை ‘பிறப்பறுக்கும் பிஞ்சகன்” என்றும், “மாயப் பிறப்பறுக்கு மன்னன்”, “பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” என்றும் மாணிக்கவாசகர் கூறுவார்.

“பற்றவா வேரொடும் பகையறப் பிறவிபோய்
முற்றவா லுணர்வமேன் முடுகினார்” (கம்ப.தாடகை.3)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

மு.வரதராசனார் உரை
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
துறவும் சன்னியாசமும்
கீதையில் யோகம், துறவு, சன்னியாசம், தியாகம், வேள்வி ஆகிய யாவும் ஏறத்தாழ ஒரே கருத்திலேயே உபயோகிக்கப்படுவதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும். துறவு, சன்னியாசம் என்பன தாடியும் சடையும் வளர்த்துக் கொண்டு காட்டுக்குப் புறப்படுவதல்ல. துறவு என்பது வாழ்வைத் துறப்பதல்ல. உண்மையில் வாழ்வைத் துறந்தாலாகாது என்பதை வற்புறுத்த எழுந்ததே பகவத்கீதை. எது உண்மையான துறவு என்பதைக் கீதை தெளிவாகக் கூறுகின்றது. செய்யும் செயலின் பலனில் நாம் கொள்ளும் பற்றையோ ஆசையையோ துறப்பதே துறவு. அதுவே உண்மைச் சன்னியாசம், உண்மையான தியாகமும் அதுவேயாகும். ஆசைகளை ஞானமாகிய அக்கினியினால் எரிப்பதே வேள்வி. வேதங்களிலே பேசப்படும் வேள்விக்கும் இக்கருத்துப் பொருந்தும். மிருகங்களை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதுதான் வேள்வியென்றோ யாகமென்றோ கொள்ளாது நமது ஆசைகளாகிய விலங்குகளை ஞானமெனப்படும் அக்கினியிலே இட்டு எரிப்பதே வேள்வியும் யாகமும் எனக் கொள்வதே பொருத்தமாகும். 

No comments:

Post a Comment